செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஆரோக்கிய வாழ்வு


1. மனிதனின் தோற்றமும், வளர்ச்சியும்
         பிரபஞ்சம் என்ற அண்டவெளியில், தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வரும் இந்த பூமியில் மனிதர்களாக பிறந்துள்ள நாம் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்வது என்பதே இன்றைய வாழ்க்கையில் மிகப்பெரிய கேள்வியாக  இருக்கிறது.
             இந்தப் பிரபஞ்சம் என்னும் அண்டவெளியில், 'மில்க்கி வே' என்கிற பால்வெளி வீதியில், சஞ்சரித்து செல்லும் சூரியக் குடும்பமானது மிகத் துல்லியமான கணக்கீடுகளின் படி இயங்கிக் கொண்டுள்ளது.
             பிரமாண்டமான பஞ்சபூத சேர்க்கைகளால் ஆன இப்பிரபஞ்சத்தில், நாம் வாழ்ந்து வரும் பூமியும் பஞ்சபூத சேர்க்கைகளால் ஆனதுதான்.
           பெருவெடிப்பு (Big Bang) என்ற கொள்கையிலிருந்து பிறந்த இந்த பிரபஞ்சமானது பல கோடி வருடங்களாக இயங்கிக் கொண்டுள்ளது. சூரியனிலிருந்து நெருப்பு (நெருப்பு) கோளமாக பிரிந்து வந்த பூமியானது, பல்லாயிரக் கணக்கான வருடங்களாகி குளிர்ந்து நிலமாக (நிலம்) உருவெடுத்தது. நிலம் உருவானதும் அதிலிருந்து மெதுமெதுவாக காற்று (காற்று) மண்டலம் உற்பத்தியானது.காற்று மண்டலத்தில் இருந்து மேகக் கூட்டங்கள் உருவாகி மழை தோன்றி, நீர் (நீர்) வெள்ளக்கடல் பிரமாண்டமாக உருவெடுத்தது. மழைநீர் பூமியில் விழுந்ததும், பூமியில் செடி, கொடி, மரங்கள் (மரம்) தோன்றின. இவ்வாறாக பூமி என்ற இந்த அகிலத்தில் நெருப்பு, நிலம், காற்று, நீர், மரம் என்ற பஞ்ச பூத சேர்க்கைகள் தோன்றி இயற்கை (Nature) என்ற ஒன்று உருவானது.
                    பஞ்ச பூத சேர்க்கை என்ற பரிணாமத்தில் தோன்றிய இயற்கையானது துல்லியமான விதிகளால் இயங்கிக் கொண்டுள்ளது.
                 இயற்கை என்ற இந்த பரிணாமத்தில் பூமியானது வளர்ந்து வரும் போது அது ஏராளமான பரிமாணங்களை சந்தித்தே வளர்ந்து வந்துள்ளது.ஒரு செல் உயிரினத்திலிருந்து பல கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பான மனிதன் தோன்ற எத்தனை கோடி வருடங்கள் கடந்தனவோ?
       ஒரு செல் உயிரினமும் சரி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினங்களும் சரி, பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களும் சரி அனைத்தும் ஒரு செல் என்ற ஒன்றிலிருந்து பல்கிப்  பெருகி  உருவானவையே ! மனிதன் என்ற உயிரினமும் ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் ஒரு செல்லாக இணைந்து, தாயின் கர்ப்பப்பையில் இரண்டிரண்டாக பல்கிப் பெருகி, பத்து மாதங்களில் குழந்தையாக பூமியில் அவதரித்து உருவானவனே!
         இவ்வாறு பூமியில் தோன்றிய மனிதன் உலகெங்கும் பல்கிப் பெருகி பலநாடுகளாக பிரிந்து, நாகரிகம், பண்பாடு ஆகிய பல்வேறு விதங்களால் மாறுபட்டு இன்று தனக்குத் தானே முரண்பட்டு நிற்பதை இயற்கை பார்த்துக் கொண்டு கைகொட்டி சிரிக்கிறது !
       ஆம். மனிதன் தன் பல்லாயிரக் கணக்கான வருடங்களில் தன் நுண்ணறிவாலும், ஞானத்தாலும் இயற்கையிடமிருந்து  கற்றுக் கொண்ட ஏராளமான அறிவியலும், ஞானங்களும்  உலகமயமாக்கல் (Globalisation) என்ற ஒற்றைக் கொள்கையால் அனைத்துமே தடம் புரண்டு, பகுத்தறிவு, விஞ்ஞானம் என்ற பார்வையால்  தன் சிறப்பை இழந்து கொண்டு வருகின்றன.
           இன்று உலகில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களும் தங்கள் நாடுகளில் வாழ்ந்து வரும் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்றுதான் வெகு சிறப்பாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால், நடப்பதென்னவோ அனைத்துக்கும் நேர்மாறாகத்தான் நடக்கிறது!
      உலகில் இதுவரை நிலவிவந்த பாரம்பரிய முறைகளெல்லாம் வழக்கொழிந்து 'பணம்' என்ற ஒற்றைச் சொல்லையே மந்திரமாகக் கொண்டு செயல்பட தொடங்கி விட்டன. எந்த ஒரு செயல்பாடுமே வணிகமயமாகி விட்டது. எந்த ஒரு சின்னஞ்சிறு பொருளும் வணிக நோக்கிலல்லாமல் தர்ம நோக்கிலோ அல்லது பொது நலன் கருதியோ செயல்படுவதில்லை!
     ஏன் இந்த அவல நிலை? ஏன் இந்த மனித குலத்திற்கு ஏற்பட்ட துர்பாக்கிய நிலை?
      இருபத்தி ஆறு எழுத்துக்களை மட்டுமே மொழியாகக் கொண்ட ஒரு நாடு (இங்கிலாந்து) ஒரு காலத்தில் உலகம் முழுமையுமே தனது காலனியாதிக்கத்தால் கட்டி ஆண்டது. தற்போது உலகமயமாக்கல் என்ற ஏகாதிபத்தியத்தின் மூலமாக உலகத்தில் நடைபெற்று வரும் அனைத்து துறைகளிலும் ஒரு நாடு (அமெரிக்கா) தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது.
           மனிதன் நலமாக, சுகமாக வாழ்ந்தால்தான் தனக்கு கிடைத்துள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.ஆனால் இன்று உலகில் உள்ள அனைத்து துறைகளும் ஒரே குடையின் - ஏகாதிபத்தியத்தின் - கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன.  அதிலும் மிகவும் ஆரோக்கியமாக வாழ ஆதாரமாக விளங்கும் மருத்துவ துறை நிறுவன (கார்ப்பரேட்) மயமாகி விட்டது. மனிதர்களை நலமோடு வாழ வைக்கும் டாக்டர்கள் என்று அழைக்கப் படும் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று போற்றப் படும் அவதார புருஷர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் சேவையை ஒழுங்காக செய்வதில்லை. அவர்கள் செய்கையால் மனிதர்களாகிய  நாமெல்லாம் எவ்வாறு ஆரோக்கியமாக  வாழ்வது?