வியாழன், 23 ஜூன், 2016

புரிதலும் ஆரோக்கியமும்

புரிதலும் ஆரோக்கியமும்                                            
                                                           ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள்
                மனம் என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகிறது? அதில் எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன? இதனைப் பற்றி நாம் ஏராளமாக அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் அறிந்து வைத்திருப்பதற்கெல்லாம் முற்றிலும் மாறாக, மனதைப் பற்றியும், அதில் உருவாகும் எண்ணங்களை எவ்வாறு கையாள்கிறோம் என்பதனைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டுமா?
  அவ்வாறு  மனதைப் பற்றி அறிய வேண்டுமென்றால், மனதைப் பற்றிய நமது ஏராளமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை தெரிய வேண்டுமானால் நாம் ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் எழுதியுள்ள நூல்களைப் படித்தால் இவற்றுக்கான விடைகள் அனைத்தும் நமக்கு எளிதில் கிடைத்து விடும்.
         பேரறிஞர்களின் மத்தியில் பிரபலமாகி வரும் இவர் 21 ஆம் நூற்றாண்டின் இன்றைய நிலையில், தலை சிறந்த இடத்தை வகிக்கும் ஆன்மீக ஞானி. மதங்களை கடந்த இவரது சிந்தனை மனித குலம் முழுவதையும், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்கிறது.
                     தென்தமிழ் நாட்டின் கடற்கரை நகரமாக விளங்கும் திருச்செந்தூரில் வாழ்ந்து வந்த இவர், தனது 18 ஆவது வயது முதலே ஆன்மீகப் பயிற்சி முயற்சிகளில் ஈடுபட்டார்.40 ஆண்டுகளின் தேடுதலுக்கு பிறகு தனது 58ஆவது வயதில் மெய்ஞானம் பெற்றார். ஞானம் பெற்ற இவர் ஆச்சரியமுற்றார். ''அரை நொடியில் புரிந்து கொள்ள வேண்டிய மெய்ஞானத்திற்காகவா நாற்பது ஆண்டுகள் பாடுபட்டோம்'' என்று ஆதங்கப் பட்டார்.   சரியான வழிகாட்டல் இல்லாத காரணத்தால் தான் இத்தகைய தாமதம் என்பதனைப் புரிந்து கொண்டார். தனது வெற்றி, தோல்விகளால் பெற்ற பாடத்தை வகைப்படுத்தி, புதியதோர் அணுகுமுறையை ஆன்மிக உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார். இவருடைய ஆன்மீக நூல்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமானோரை மெய்ஞானிகளாக ஆக்கியுள்ளன.
          இவர் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆன்மீக முகாம்கள் நடத்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மனம் பற்றிய புரிதலை ஏற்படுத்தி ஆன்மீக சேவை புரிந்து வருகிறார். மேலும் இவரது புத்தகங்களை சேலத்தில் இயங்கி வரும் ஸ்ரீபகவத் மிஷன் என்ற அமைப்பு மூலமாக வெளியிட்டு வருகிறார். மேலும் பகவத் பாதை என்ற பெயரில் ஆன்மீக மாத இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். இது மின்னிதழாகவும் வெளியிடப் பட்டு வருகிறது.  இவரது ஆன்மீகக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதற்கு வேண்டி, ஸ்ரீ பகவத் பவன் என்ற பெயரில் கட்டடம் ஒன்று சேலம் மாநகரில், பெரிய கவுண்டாபுரம் என்ற இடத்தில் கட்டப் பட்டு, அங்கு இப்போது ஆன்மீக கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
                    இவரது மனம் பற்றிய நூல்கள் அனைத்தும் அக்குபங்சர் என்ற நமது மருத்துவத்திற்கு பொருந்துவதாலும், கழிவு நீக்கத் தத்துவத்தைப் போன்றே எண்ணங்கள் நீங்குவதாகவும் ,பிரவாகமாக ஓடுவதாகவும், கரு-உரு தத்துவத்தை போன்று இவரது அகம்-புறம் விளக்கங்கள் அமைந்துள்ளதாலும், இவரது நூல்களைப் படித்து பயன்பெற அனைத்து அக்குபங்சர் ஹீலர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
           பகவத் பாதை ஜீன் 2016 மாத இதழில் நமது அக்குபங்சர் வைத்தியத்திற்கு இணையான, மனம் பற்றிய புரிதல் மூலமே நோய்களை குணப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையிலான கட்டுரை ஒன்று, பகவத் அய்யா அவர்களின் ஆன்மீக இதழில், கேள்வி-பதில் பகுதியை தொடர்ந்து எழுதி வரும் அவரின் ஆன்மீக சீடரான   V.A.P.சரவணன் அவர்கள் எழுதிய கட்டுரையானது  இணையதள வாசகர்கள் மற்றும் அனைத்து அக்குபங்சர் ஹீலர்களின் நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
                                                               புரிதலும் ஆரோக்கியமும்
           கேள்வி; பகவத் அய்யாவின் நூல்களைப் படித்து மனதின் இயக்கத்தை நன்றாகப் புரிந்து கொண்டு இருக்கிறேன். அதனால் எத்தனையோ மனப்பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைந்து இருக்கிறேன் .மனதைப் பற்றிய இந்தப் புரிதல் உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் தன்மையிலிருந்து விடுபடுவதற்கும் எந்த அளவுக்கு உதவுகிறது? உடல் நோய்கள் பற்றிய விஷயத்தில் இந்த மனதைப் பற்றிய புரிதல் எப்படி செயல் படுகிறது? மனதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இருப்பது போல் உடல் பற்றிய ஏதாவது தெளிவான புரிதல் உள்ளதா? விளக்கம் தேவை?
           பதில்; மனமும் உடலும் ஒன்றே. பெயர் அளவில் வேறுபட்டு இருந்தாலும் இரண்டும் ஒன்றே. மனது எப்படி செயல்படுகிறதோ, அப்படித்தான் உடலும் செயல் படுகிறது. நமக்குத் தெரிந்த மனதின் புரிதல் மூலம் உடலைப் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொள்வோம். இனி....
              மனமும், உடலும் ஒன்றுதான் என்று கூறினோம். எப்படி என்று பார்ப்போம். மனதைக் கண்களால் பார்க்க முடியாது. கண்களால் பார்க்க முடியாததால் மனம் என்ற ஒன்று இல்லை என்று கூற முடியாது. நாம் ஒவ்வொருவரும் மனதை உணர்கிறோம். மனதின் மூலமே செயல் படுகிறோம். மனதின் மூலமே வாழ்கிறோம்.
            கண்ணுக்குத் தெரியாத மனதின் திடவடிவம் தான் உடல். எப்படி மெய்ப்பொருளே ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என அழுத்தத்திற்கு தகுந்தாற் போல் மாற்றம் அடைகிறதோ அதுபோல் மனம் கண்களுக்கு தெரியாத அலை வடிவத்தில் இருக்கிறது. அதுபோல் மனம்தான் கண்ணுக்குத் தெரிகிற உடலாக மாற்றமடைகிறது. ஆகாயத்தைப் பற்றி தெரிந்து கொண்டாலே, நிலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது போல்தானே. அதுபோல் மனதின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டாலே அதுவே உடலின் இயக்கத்திற்கும் பொருந்தும்.
               நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஒவ்வொன்றாக கீழிருந்து ஆராய்ச்சி செய்வது ஒருமுறை. ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என மேலிருந்து கீழாக ஆராய்ச்சி செய்வது இன்னொரு முறை. உடல் வழியாக மனதைப் புரிந்து கொள்வது ஒரு முறை. மனதின் மூலமாக உடலைப் புரிந்து கொள்வது இன்னொரு முறை. உடல் வழியாக மனதை ஆராய்ந்தவர்கள் கூட இறுதியில் மனம்தான் உடலை இயக்குவதில், ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான ஒன்றாக இருப்பதாக தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். அதனால் நமக்கு உடலின் இயக்கத்தைப் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தாலும், உடலுக்கு ஆதாரமான மனதைப் பற்றி நாம் பகவத் ஐயாவின் மூலம் நன்றாகவே புரிந்து இருக்கிறோம். நாம் மனதின் இயக்கத்தை புரிந்து கொண்ட முறையிலே, உடலின் இயக்கத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
          எங்கும் நிறைந்த மெய்ப்பொருள் கண்ணுக்குத் தெரிவது இல்லை. அதிலிருந்து தோன்றிய கோள்கள் கண்களுக்குத் தெரிகின்றன. மெய்ப்பொருள் என்ற மொத்த இயக்கத்தில்தான் பூமியும் இயங்குகின்றது. அதுபோல் மனம் என்ற ஒட்டு மொத்த இயக்கத்தில் தான் உடலும் இயங்குகிறது.
                         இனி மனதின் புரிதல் வழியாக உடலின் புரிதலை சிந்திப்போம். மனதைப் பற்றிய பகவத் ஐயாவின் புரிதலுக்குப் பிறகு, மனதில் நமக்கு ஏதாவது எண்ணம் ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம்? மனதின் எண்ணம் தாமாகத் தோன்றி தாமாக மறையும். அதுதான் இயற்கை என எடுத்துக் கொள்வோம். எண்ணம் என்பது மனதில் பதிந்த ஒன்று மனதிலிருந்து வெளியேறி விடுதலை அடைகிறது என்பதே பொருள். நம் மனதிலிருந்து எப்படிப் பட்ட எண்ணம் ஏற்பட்டாலும் அது நம்முடைய மனதிலிருந்து வெளியேற்றம் அடைகிறது என்றுதானே பொருள். உண்மையில் நமது மனம் அதிகப் படியான அழுத்தத்தைக் கொண்ட எண்ணம், உணர்வுகளை வெளியேற்றி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
                   இப்போது நாம் அப்படியே மனதின் திடவடிவமான உடலுக்குப் பொருத்திப் பார்ப்போம். மனதில் ஏற்பட்டால் எண்ணம். மனதின் திட வடிவமான உடலில் ஏற்படும் எண்ணத்தின் வடிவம்தான் வலி. எப்படி மனதிலிருந்து எண்ணத்தை வெளியேற்றி மனம் விடுதலை அடைகிறதோ, அப்படியே உடலில் வலியை ஏற்படுத்தி நோயை குணமாக்குகிறது உடல்.( உதாரணம்; தலைவலி) மனதில் வேண்டாத எண்ணம் ஏற்பட்டாலும் மனதிலிருந்து வெளியேறுகிறது என்பதுதான் பொருள். உடலில் எப்பேற்பட்ட வலி ஏற்பட்டாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடல் செயல் படுகிறது என்பதுதான் பொருள். மனதிலிருக்கும் அதிகப் படியான எண்ணத்தை வெளியேற்றி மனமே மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. அப்படியே உடலும் வலியாக, வேதனையாக வெளிப்படுத்தி, உடலில் உள்ள நோயை குணமாக்கச் செயல் படுகிறது.
                      மனதில் ஏற்படும் உணர்வுகளை கோபம், பயம், வெறுப்பு, பொறாமை,வஞ்சம் என்று குறிப்பிடுகிறோம். அப்படி ஒரு உடலில் ஏற்படும் வலியின் அழுத்தத்திற்குத் தகுந்தாற்போல் ஏதோ ஒரு உடல் நோய் என்று கூறுகிறோம். மனதில் ஏற்படும் கோபம்,  நமது கவனத்திற்கு தெரிந்த பிறகு நாம் நிதானத்திற்கு வருகிறோமோ, அப்படியே உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மூச்சை அதிகரித்தல், வெப்பமடைதல், குளிர்தல், கொட்டாவி விடுதல், வாந்தி எடுத்தல், தும்மல், விக்கல், ஏப்பம், பேதியாவது, காற்று பிரிவது என பல உடல் வெளியேற்றத்தை அனுமதிக்கும் போது உடலின் ஆரோக்கியத்தை சமநிலைக்கு கொண்டு வருகிறது உடல்.
               நமக்கு தெரிந்தே கூட சில நேரங்களில் மனதில் தேங்கியுள்ள அதிகப்படியான மன அழுத்தம் நமது கட்டுப்பாட்டையும் மீறி வெளியேறும். அப்படி நம்மை மீறி நடக்கிற மனதின் செயல்பாட்டிற்கு நமது தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் விட்டுவிடும் போது மனம் வெகுவிரைவாக சமநிலையை அடையும். மனம் தன்னை பாதுகாத்துக் கொள்ள மனதில் பதிந்துள்ள அதிகப் படியான அழுத்தத்தை எப்படியோ ஒரு வகையில் வெளியேற்றி தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.
          இதேபோல் உடலும் தன்னை சரி செய்து கொள்ள உடலின் அக உறுப்புக்களின் இயக்கதிற்கு தேவையான சக்தியை மட்டும் கொடுத்துவிட்டு மற்றபடி உடல் ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த வகையில் காய்ச்சலோ, வாந்தியோ, பசியின்மையோ கூட ஏற்படுத்தும். உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்வதற்காக இப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பசிக்காத போது உணவை உட்கொள்ளாமல் நாம் இருந்தால் வெகு விரைவாக நாம் ஆரோக்கியத்தை நோக்கித் திரும்புவோம். உடலின் தேவையை நாம் புரிந்து கொண்டு நடந்தால் உடல் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும். மொத்தத்தில் மனதில் நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ என எப்படி வெளியேற்றினாலும் மனம் தன்னைத்தானே சரி செய்து கொண்டு இருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது.
            ஒரு உதாரணத்தின் மூலம் உடலின் புரிதலைப் புரிந்து கொள்வோம். நமக்கு கையில் ஒரு கொப்புளம் ஏற்படுகிறது என வைத்துக் கொள்வோம். இதை நாம் எப்படி பார்க்க வேண்டும்? உடலுக்கு வேண்டாத ஒரு கழிவை வெளியேற்றுவதற்காக உடல் எடுக்கும் முயற்சியே இந்த கொப்புளம். கொப்புளம் 3, 4  தினங்களில் நல்ல சிகப்பாக சற்றே அந்த இடம் சிறு வீக்கமாக வலியுடன் வெள்ளை முகப்புடன் தெரியும். கொப்பளம் நன்றாகப் பழுத்த பின்பு இரத்தத்துடன் சீழும் கலந்த கழிவை தானாகவே உடலிலிருந்து வெளியேறும். அப்படி கழிவு வெளியேறியவுடன் வலியும் குறைந்து மேலும் 3, 4  தினங்களில் கொப்புளமும் அதன் அடையாளமும் மறையத் தொடங்கும். (உடலுக்கு வேண்டாத பொருளை வெளியேற்றி உடலின் இயல்பான ஆரோக்கியத்தை மீட்டு எடுக்கிறது உடல் என்பது நமக்குப் புரிகிறது) உடலைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தால், ஏன் கொப்புளம் வந்தது, எதற்காக வந்தது, உடலில் வெப்பம் கூடி விட்டதோ, வேறு ஏதோ வேண்டாத ஒன்று ஏற்பட்டு விட்டதோ என நமது மனம் சதா புலம்பித் தள்ளும். மேலும் நமக்கு ஏற்படும் வலியைப் பற்றி அதிகமாக சிந்தித்துக் கொண்டும், பயந்து கொண்டும் இருப்போம். உடல் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு எடுக்கும் முயற்சிதான் இந்த கொப்புளம் என்று நாம் மனோ ரீதியாகப் புரிந்து கொள்ளும் போது நாம் உடலின் செயல்பாட்டுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம்.
              இப்படிப் புரிந்து கொள்வதால் கொப்புளத்தினால் உடலில் ஏற்படும் வலிக்கு, வேதனைக்கு நாம் மனோ ரீதியாக சுதந்திரம் கொடுப்போம். இப்போது உடலின் செயல்பாட்டிற்கு நமது மனோ இயக்கமும் உதவிக்கு வந்து விடுகிறது. மேலும், எதிர்ப்பை விட்டுவிட்டு வலியையும், வேதனையையும் முழுமையாக மனம் ஏற்றுக் கொள்கிறது. உடலுக்கு உதவியாக மனம் செயல்பட, உடல் வெகு விரைவாக ஆரோக்கியத்தின் பக்கம் திரும்புகிறது.
           இப்படி உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் நோய் என்று நினைத்துக் கொண்டு இருந்த நாம், இப்போது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்வதற்கு எடுக்கும் செயல் என்று புரிந்து கொள்ளும் போது மனோரீதியாக உடலுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. உடல் தன்னுடைய வேலையை சுதந்திரமாகச் செய்து வெகு விரைவாக ஆரோக்கியத்தை மீட்டு எடுக்கிறது.
             
                      மனதிற்கு வடிவம் இல்லை. மனதில் ஏற்படும் முரண்பாடுகள், போராட்டம் என அனைத்தும் மனதின் திடவடிவமான உடலில் மட்டுமே வெளிப்பட முடியும். பகவத் அய்யாவின் மனதைப் பற்றிய புரிதலிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? மனதில் தோன்றும் எதற்கும் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது முற்றிலும் தன்னிச்சையான, சுதந்திரமான, இயந்திரகதியான இயக்கம் என புரிந்து கொள்கிறோம். இப்படி புரிந்து கொள்வதால் மனதின் இயக்கத்திற்கு நாம் எதுவும் செய்யாமல் நமது அகத் தோல்வியைப் புரிந்து கொண்டு செய்வதற்கு எதுவுமில்லை என்று 'சும்மா இரு' என்ற நிலைக்கு வருகிறோம். இதனால் மனம் சுதந்திரமாக செயல் பட்டு பிரவாக நிலைக்கு வருகிறது.
                    இதேபோல் உடலின் இயக்கத்தையும் மனோமயமாகப் புரிந்து கொள்ளும் போது உடல் தன்னைத் தானே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதனைத் தான் நமது உடல் செய்கிறது என்று புரிந்து கொள்கிறோம். இப்படி உடலின் இயக்கத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கும் போது உடலும் மெல்ல மெல்ல இருப்பது தெரியாமல் இயங்கும் நிலைக்கு வருகிறது. இதுதான் உடலின் ஆரோக்கிய நிலை.
              மனதிற்கும், உடலுக்கும் தனித் தனியாக சக்தி என்று எதுவும் கிடையாது. இரண்டும் ஒரே சக்தியின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. மனம் இதுவரை உடலின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் எதிர்த்துப் போராடிக் கொண்டு இருந்தது. மனதின் திடவடிவம் தான் உடல் என்பதைப் புரிந்து கொள்ளும் போது ஒன்றின் செயல்பாட்டிற்கு மற்றொன்று உதவிக்கு வருகிறது. மனம், உடலின் செயல்பாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கிறது. இதுவரை எதிர்த்து செயல் பட்ட மனம், இணைந்து செயல்படும் தன்மைக்கு வருகிறது. இப்படி உடலையும், மனதையும் புரிந்து கொண்டு செயல் படும் போது, நோய்த் தன்மையிலிருந்த தாக்கம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து ஆரோக்கியத்தின் பக்கம் திரும்பும்.
                      இந்த ஆய்வை நீங்கள் உங்களுடைய சொந்த அனுபவத்தில் சோதனை செய்து பார்க்க வேண்டும். மனதைப் பற்றிய புரிதல் புரிந்த அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ மாற்றம் ஏற்பட்டு, புரிதலில் ஓர் தெளிவும், உறுதியும் நமக்கு ஏற்படுகிறது. அந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். நாம் இப்படிப் புரிந்து கொண்டதால் உடனே எல்லா மருந்துகளையும் விட்டுவிட வேண்டாம். முதலில் சிறுசிறு பிரச்சினை, வலி, உடல் உபாதைகளுக்கு மருந்துகளைத் தவிர்த்து மனோ ரீதியாக உடலின் இயக்கத்திற்கு சுதந்திரம் கொடுத்து, அந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவோம். இப்படி செய்து பார்க்கும் போது நமக்கே தெரியும் மருந்துகள் இல்லாமல் உடல் சரியாவது. இதனால் நமது உடலைப் பற்றிய புரிதலில் தெளிவும், உறுதியும் ஏற்படும். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக மருந்துகளின் அளவுகளைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு செயல் படும் தன்மைக்கும், பிறகு முழுவதுமாக தவிர்க்கும் நிலைக்கு உயர்வோம். பிறகு மனதிற்கும், உடலுக்கும் முழு சுதந்திரம் கொடுத்து செயல் பட விட்டு விடுவோம்.
               மனதைப் புரிந்து கொள்வதுதான் இதுவரை கடினமாக இருந்தது. மிகக் கடினமாக இருந்து வந்த மனதின் இயக்க உண்மையை பகவத் ஐயாவால் எளிமையாகப் புரிந்து கொண்டோம். அதே புரிதல் வழியாக மனதின் திட வடிவமான உடலின் செயல்பாட்டையும் புரிந்து கொண்டு, நிறைவான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோமாக.
                                                        மனமும் உடலும் ஒன்றே !

                                    நன்றி :  பகவத் பாதை  ஜூன் 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக