அக்குபங்சர் ஹீலர்களாகிய நாம்
மாதவிடாய் என்பதை நீர் மூலகத்தின் கழிவு நீக்கமாக கருதுகிறோம். அக்குபங்சர்
மருத்துவமும் மாதவிடாய் என்பதை நீர் மூலகம் மாதந்தோறும் வெளியேற்றும் கழிவு
நீக்கமாகத்தான் உலகம் முழுவதும் கருதுகிறது.நீர் மூலகம் நிலம் மூலகத்தின் மூலம்
அதிகம் பாதிக்கப் பட்டால் இரத்தப் போக்கு அதிகமாகவும், அதே நீர் மூலகம் காற்று மூலகத்தின் மூலம் அதிகம் பாதிக்கப் பட்டால்
வெள்ளைப் படுதல் அதிகமாகவும் இருக்கும் என்பதன் அடிப்படையில் நாம் அதற்கேற்ப
சிகிச்சை அளித்து வருகிறோம். அதே நீர்மூலப் பொருளின் உறுப்பான
கர்ப்பப்பையில் குழந்தை கருக்கொள்ளும் போது மாதவிடாய் நின்று விடுகிறது. இவ்வாறு
பெண்களின் உடலின் ஒரு இயற்கையான கழிவு நீக்கமே மாதவிடாய் என்பதனை நமது சமூகத்தில் பேசக் கூடாத ஒரு
விஷயமாக கருதப் பட்டு அது எவ்வாறெல்லாம் சமூகப் பார்வையில் பார்க்கப் படுகிறது
என்பது குறித்து "இந்து" தமிழ் நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று நமது அனைவரின் நலன் கருதி இணைய
தளத்தில் வெளியிடப் படுகிறது.
பேசக் கூடாத விஷயமா மாதவிடாய் (Menses) ?
என் கௌரி.
பெண் உடலில் நடக்கும் இயல்பான உடலியல்
செயல்பாட்டைப் பற்றி வெளிப்படையாக பேசுவது இன்னமும் நம் சமூகத்தில்
அருவருப்பானதாகவும்,அவமானமாகவும் பார்க்கப் படுகிறது. மாதவிடாய் என்பது வெளிப்படையாக
பேசக் கூடாத விஷயமல்ல.பெண்களின் உடலியல் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டிய
கடமை மனித சமூகத்துக்கு இருக்கவே செய்கிறது.மனித சமூகத்துக்குள் ஆண்களும் அடக்கம்
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் ஒரு பெண் பூப்பெய்தும்போதே அவளுக்கு
அளிக்கப் படும் முதல் அறிவுரை தன் அப்பாவிடம் கூட மாதவிடாயைப் பற்றி பேசக் கூடாது
என்பதுதான்.
மாதவிடாயின் போது ஒரு பெண்
அசுத்தமாக இருக்கிறாள்.அவள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் அசுத்தமானது.அதனால்
அவள் கோயிலுக்குச் செல்லக் கூடாது,
சமையலறைக்குள் செல்லக்
கூடாது, ஊறுகாயைத் தொடக் கூடாது
போன்றவற்றை இப்போது்ம் நாம் எதிர் கொள்ளவே செய்கிறோம்.
மாதவிடாயைச் சுற்றி சுழலும் இந்த
மாதிரியான கற்பிதங்களை உடைக்கும் விதமாகப் பல விழிப்புணர்வு முயற்சிகள்
இந்தியாவில் தொடங்கியிருக்கின்றன.சமீபத்தில் டெல்லிப் பல்கலைக் கழக மாணவர்கள், ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியோர் இணைந்து அப்படியொரு
விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருக்கிறார்கள்." கம் அண்ட் ஸீ தி பிளட் ஆன் மை
ஸ்கர்ட்" (Come and see the blood on my skirt) என்ற அந்தப் பேரணியில்
மாணவர்கள், மாணவிகள்,பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும்
கலந்து கொண்டனர். பெண்கள் மாதவிடாயின்போது தாங்கள் சந்திக்கும் பல்வேறு விதமான
பிரச்சினைகளைப் பற்றி அந்த அணி வகுப்பில் விவாதித்திருக்கிறார்கள்.சமூகம்
மாதவிடாயைப் பார்க்கும் பார்வை இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு இருக்கும்
"பிசிஓடி" (Polycystic ovary disorder) என்னும் மாதவிடாய்ப்
பிரச்சினையைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள்.இந்த முயற்சியை பல தரப்பினரும்
வரவேற்றிருக்கிறார்கள்.
இந்தப்
போராட்டங்களுக்கான முன்னுதாரணங்களை உருவாக்கியவர் ஜெர்மனியைச் சேர்ந்த பத்தொன்பது
வயது எலோனா கஸ்ட்ராட்டி.சானிட்டரி நாப்கின்களில் பெண்ணிய வாசகங்களை எழுதிப்
பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஒட்டுவதன் மூலம் "பேட்ஸ் அகெய்ன்ஸ்ட்
செக்ஸிஸம்"( Pads against sexism) என்ற பிரச்சாரத்தை
ஆரம்பித்து வைத்தார்.இது சமூக வலைத்தளங்களில் விரைவாகப் பரவியது.இந்தப் போராட்ட
வடிவத்தை முன்மாதிரியாக வைத்து ஜமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் அதே பிரச்சாரத்தை
முன்னெடுத்தனர்.ஆனால் இந்த "பேட்ஸ்
அகெய்ன்ஸ்ட் செக்ஸிஸம்:” பல்கலைக்கழக நிர்வாகம்
கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாதவிடாய் சம்பந்தமான எல்லா விஷயங்களும் சமூகத்தில்
பேசக் கூடாத விஷயமாக இருப்பது அவர்களுக்குப் புரிந்தது.அதன் விளைவுதான் கடந்த
வாரம் நடைபெற்ற “கம் அண்ட் ஸீ தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்" பேரணி.
அத்துடன் சமூக
வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமும் (Instagram) ஒரு பெண் தன்
மாதவிடாயின் போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்தபோது அதை நீக்கியது.பிறகு அதற்கு
எதிர்ப்புக்கள் கிளம்பியதும் அந்தப் படத்தை மறுபடிய்ம் பதிவிட்டது.இப்படி பெண்ணின்
மாதவிடாயை ஏற்றுக் கொள்ள முடியாத மன்பான்மைதான் அதிகமாக நிலவுகிறது. “கம் அண்ட் ஸீ தி பிளட் ஆன் மை ஸ்கர்ட்"பிரச்சாரம்
மாதவிடாயைச் சமூகம் பார்க்கும் பார்வையை மாற்றுவதற்கான ஒரு தொடக்கம் என்கின்றனர்
இந்தப் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்த மாணவர்கள். மாதவிடாய் என்பது ஒரு பேசக் கூடாத விஷயமல்ல என்பதை இந்தச் சமூகம்
புரிந்து கொண்டால்தான் பெண்ணுடல் குறித்த ஆண்களின் தவறான பார்வை ஓரளவுக்காவது
மாறும்.
நன்றி; இந்து தமிழ் நாளிதழ் 26 .04. 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக