வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

இறைவழி மருத்துவம் வேண்டுமென்றால் இதனைப் பின்பற்றுங்கள் !

அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தையும், "ஹெல்த் டைம்" மாத இதழின் ஆசிரியருமான திரு.டாக்டர்.பஸ்லுர் ரஹ்மான் M.B.B.S.DV.MD.PhD (ACU) அவர்கள்  தனக்கு இறைவன் மூலம் அறிவிக்கப் பட்ட ஞானங்களை உடனுக்குடன் தமிழக மக்களுக்கு அறிவிப்பதில் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறார். முதன்முதலாக அக்குபங்சர் பற்றிய கட்டுரைகளை "ஹெல்த் அண்ட் பியூட்டி" மாதாந்திர இதழிலும், பின்னர் அதே அக்குபங்சர் பற்றிய ஏராளமான கட்டுரைகளை "பேமிலி ஹெல்த்" மாத இதழிலும், அதே இதழில் "ஹோமியோபதியை (முறையாக) கற்றுக் கொள்ளுங்கள் " என்ற தொடரை நமது அனைவரது பயன் கருதி எழுதினார். பின்னர் அவரால் தொடங்கப் பட்ட  "ஹெல்த் டைம்" மாத  இதழில் " அக்குபங்சர் கற்றுக் கொள்ளுங்கள்", " தொட்டால் சுகம் கற்றுக் கொள்ளுங்கள்", " நினைத்தால் சுகம் கற்றுக் கொள்ளுங்கள்", " இனி தொடாமலே சுகம்தான்" ஆகிய தங்களுக்கு இறைவன் மூலம் எவையெல்லாம் அறிவிக்கப் பட்டனவோ அவைகள் அனைத்தும் தொடர்களாக வெளிவரப் பெற்று  வாசகர்களுக்கு பெரும் பயன்களை வழங்கின.
                                 அவர்கள் அக்குபங்சர் மருத்துவத்தை பார்ப்பதை விடுத்து, இறைவழி மருத்துவம் பார்க்க ஆரம்பித்த பின்னர், இறைவழி மருத்துவம் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதி வருகிறார். அவைகள் அனைத்தும் புத்தகங்களாக வரப்பெற்று வாசகர்களுக்கு ஏராளமான பயனை நல்கி வருகின்றன. இந்த வகையில் இப்போது " இறைவழி மருத்துவம் கற்றுக் கொள்ளுங்கள்" என்ற தொடரை ஜூலை 2015 ஹெல்த் டைம் இதழில் ஆரம்பித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக இறைவழி வாழ்க்கை என்ற ஜூலை 2015 ஹெல்த் டைம் இதழில் வெளிவரப் பெற்ற கட்டுரை நமது வாசகர்கள் அனைவரும் " இறைவழி மருத்துவம் " கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
           இறைவழி மருத்துவம்   வேண்டுமென்றால்     இதனைப்   பின்பற்றுங்கள் !
       கடவுளை நம்புகின்றோம் என்றும், அல்லாஹ்வை நம்புகின்றோம் என்றும், இயேசுவை நம்புகின்றோம் என்றும், இன்னும் தத்தம் தெய்வங்களை நம்புகின்றோம் என்று மனிதர்களில் அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களுடைய நம்பிக்கை எந்த அளவுக்கு சத்தியமானது ? அவர்களுடைய நம்பிக்கைக்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கிறதா ? என்று தங்களுக்குள்ளேயே பார்ப்பார்களானால், ' இல்லை' என்ற சாட்சியம் அவர்களுடைய உள்ளத்திலிருந்தே அவர்களுக்குத் தெளிவாகும்.
               சாட்சியத்தில் மிகவும் உறுதியானது அவர்களுடைய மனசாட்சியம்.' கடவுளை நம்புகின்றேன்' என்று கூறுகிறார்கள். அவர்களிடம் கீழ்வரும் கேள்விகளை கேட்போம். அவர்களுடைய பதில்களையும் பார்ப்போம்.
 கேள்வி : நீங்கள் 'கடவுளை நம்புகிறேன்' என்று கூறுகிறீர்கள். ஆனால், எவ்வளவு நம்புகிறீர்கள் என்று கேட்டால், ' நூறு சதவீதம் நம்புகிறேன்' என்று கூறிகிறீர்கள். ஆனால், அவ்வளவு தூரம் கடவுளை நம்பக் கூடிய நீங்கள் கடவுள் யார் என்பதை அறிந்திருக்கிறீர்களா? கடவுள் யார் ?
பதில் : அவர் நம்மையெல்லாம் மீறின, நமக்கு அப்பாற்பட்ட சக்தி.
கேள்வி : நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியா? ஒரே சக்தியா?
பதில் :  ஒரே சக்திதான்.
கேள்விஇந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதாவது, நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி என்று கூறுவதற்கும்; ஒரே சக்திதான் என்று கூறுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
பதில் :  ……
        எனவே, உங்களுக்கு தெளிவான பதில் இல்லை. ஒரு சக்தி என்று கூறும் போது உங்கள் புலன்களுக்கு புலப்பட்டவைகளில் எவற்றின் மீது சக்தி பெறவில்லையோ, அவற்றையெல்லாம் கடவுள் என்று ஆக்கிக் கொள்வீர்கள். உதாரணமாக சூரியன், நட்சத்திரங்கள், பூமி, வானம், மரங்கள், இயற்கை வளங்களான நதிகள், மலைகள், கடல்கள் போன்றவற்றின் மீது உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால், அவையெல்லாம் உங்களுக்கு வாழ்க்கைக்குரியனவற்றைக் கொடுத்துக் கொண்டிருப்பதன் காரணமாக அவையெல்லாம் தனித்தனி சக்திகளாகவும், அவை ஒவ்வொன்றையும் ஒரு மகா சக்தியாக எண்ணிக் கொண்டு விடுகின்றீர்கள். ஆனாலும், நாம் அறிய வேண்டும். இவை அனைத்துமே அழியும்; ஒரு நாள் அழியக் கூடியவை என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். இந்த சத்தியத்தை அறிவித்ததுதான் அந்த ஒரே சக்தி. அந்த சக்திக்கு இணையாக படைக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு படைப்பும் சக்தி கிடையாது. அவை அழியும்.
           இயற்கையை பொதுவாக கடவுள்கள் என்று பேசுவார்கள். அந்த இயற்கையை படைத்தது யார்? இயற்கையின் எந்த ஒன்றுமே சிறிதாக வளர ஆரம்பித்து, பெரிதாகி அதன் பலன்களைக் கொடுத்து, பின்னர் அவை காய்ந்து சருகுகளாக மாறும். கடவுள் என்பவன் பிறந்து, வளர்ந்து, இறப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறோமா? அல்லது உள்ளம்தான் இவ்வாறு அறிவிக்கப் பட்டிருக்கிறதா? நிச்சயமாக இல்லை. கடவுள் என்பவன் நித்திய ஜீவன்; அவனுக்கு ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. இது அவனுடைய அடையாளங்களில் உள்ளதாகும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அவனால் பதிவாக்கப் பட்டதாகும். அந்த உள்ளத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொரு சத்தியமும் அவன் அறிவித்ததே. இந்த சத்தியமே ஞானங்களாக, உள்ளமாக இருக்கின்றது.
                      அறிந்து கொள்வோம். இறைவனைப் பற்றிய மனதின் சாட்சியமும், நம் வாழ்க்கையில் நாம் வாழ வேண்டிய ஒட்டுமொத்தமான ஞானமிக்க நியாயத்தின் அமைப்புமாகும். ஒரு விஷயத்தை நாம் பேசும் போது அதற்கு முன்பாக அந்த விஷயம்  நியாயமானதா? இல்லையா? என்பதை அறிவிப்பது உள்ளம்தான். அது உங்களுக்கு முன்பாக உங்களிடம் பேசக் கூடியதாக இருக்கிறது. ஆனால், அந்த உள்ளத்தை நாம் பார்த்தது கிடையாது. ஒருக்காலும் பார்க்கவும் முடியாது. எனினும், சத்தியாக இறைவனிடமிருந்துள்ள செய்தியை ஞானங்களாக நமக்கு அறிவிக்கிறது. 'கெட்ட வார்த்ததைகள் பேசக் கூடாது' என்று இன்னும் அவற்றை பேசுவதற்கு முன்பாகவே 'நீங்கள் தவறு செய்யப் போகிறீர்கள்' என்பதை அறிவிக்கிறது. இது சாதாரண அறிவிப்பும் இல்லை; எச்சரிக்கையாக இருக்கிறது. எதை செய்யக் கூடாது' என்று உள்ளம் அறிவிக்கிறதோ, அதை மீறி நாம் அந்த பேச்சுக்களில் ஈடுபடும் போது விரோதங்களை சம்பாதிக்கிறோம். இது நம் வாய்களால் நாம் சம்பாதிக்கக் கூடிய தீமைகளில் உள்ளதாகும்.
                       இந்த உள்ளம் இறைவனுடைய சாட்சியம். அதனை நாம் மனசாட்சியம் என்று கூறுகிறோம். அந்த மனசாட்சியம்தான் ' இறைவன் ஒருவன் நிச்சயமாக உண்டு. அது ஒரே மகாசக்திதான். அந்த சக்திக்கு அப்பால் எந்த சக்தியும் இல்லை' என்பதையும் அறிவிக்கிறது. மீண்டும் நினைவு கூர்வோம். உள்ளம் எனும் இறை சாட்சியம்தான்; அதாவது, மனசாட்சியம்தான். இறைவனைப் பற்றி நமக்கு அறிவிக்க வேண்டும். இறைவனைப் பற்றி புத்தகத்தில் படிக்க முடியாது. யார் ஒருவரும் சொல்லிக் கொடுத்து கற்பிக்க முடியாது. கேள்வி ஞானங்களாக மட்டுமே உணர்த்த முடியும். எனவேதான், இந்த கேள்வி- பதிலாக உங்களுக்கு அறிவிக்கப் படுகிறது. எந்த சத்தியம் உள்ளத்தில் இறை உணர்வாக இருக்கிறதோ, அந்த சத்தியத்தை புதிதாக வெளி கொணர்வதற்குரிய  கேள்விகளாக கேட்க வேண்டுமே தவிர, அந்த பதில்கள் ஒவ்வொன்றும் ஞானங்களாக வெளிப்படும் அந்த நேரத்தில்தான் உங்களுடைய உள்ளங்கள் பண்பட ஆரம்பிக்கின்றன.
               எனவே, படைக்கப்பட்ட எந்தவொரு பொருளும், எந்தவொரு படைப்பும் மகா சக்தி கிடையாது. இவற்றையெல்லாம் படைத்த அந்த மாபெரும் சக்திதான் கடவுளாகும். மனிதர்களுடைய அறிவையெல்லாம் 'கடந்த சக்தி உள்'ளமாக இருப்பதால் கடவுளாக இருக்கிறது. அதாவது, கடந்தது உள்ளமாக இருக்கிறது. உள்ளம்தான் கடவுளுடைய ஆற்றலாக இருக்கிறது. அதாவது மகாசக்தியாக இருக்கிறது. இப்பொழுது கேளவியைத் தொடருவோம்.
கேள்வி : மகாசக்தி எங்கிருக்கிறது?
பதில் :   உள்ளத்தில் இருக்கிறது.
கேள்விநம்மையெல்லாம் மிஞ்சிய, நமக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளம் ஒன்றுதானா? அல்லது வானங்கள் முதலாக பூமி வரையிலும் படைக்கப்பட்டிருக்கக் கூடிய வேறு எந்தப் பொருளுமா?
பதில் :  உள்ளம் மட்டும்தான்.
கேள்விஇனி கடவுளுக்கு உள்ளத்திற்கு அப்பால் கோவில்கள் உண்டா? மசூதிகள் உண்டா? சர்ச்சுகள் உண்டா?
பதில் :  இல்லை. உள்ளம்தான் கோவில்.
கேள்விகோவில் என்றால் என்ன?
பதில் :  கோவில் என்றால் கடவுளின் இருப்பிடம்.
கேள்வி : கடவுளின் இருப்பிடமா? அதாவது  கடவுளுடைய ஆற்றலை முழுமையாகக் கொண்டிருக்கக் கூடிய அவனால் ஏற்படுத்தப்பட்டு மனித உள்ளமாக அமைந்திருக்கக் கூடிய அமைப்பா?
பதில் :  ……
         நீங்கள் தயங்குவதற்குக் காரணம், இன்னமும் நீங்கள் கடவுளை ஒரு உருவமாகத்தான் பாவிக்கிறீர்கள். சக்திக்கு உருவம் கிடையாது. ஆற்றலுக்கு உருவம் கிடையாது என்பதை உங்களுடைய உள்ளம் உங்களுக்கு அறிவிக்கிறது. அதாவது, இறைவன் உங்களுக்கு அறிவிக்கிறான். இது உங்களுடைய உள்ளத்திலிருந்து பதிலாக வரக் கூடிய ஞானங்கள் ஆகும். உருவமே அற்ற மகாசக்திக்கு எப்படி இருப்பிடம் என்ற ஒன்று இருக்க முடியும்? உருவங்களுக்குத்தானே இருப்பிடமும்? தங்குமிடமும்? ஆட்சிபீடம் என்ற ஒன்றும் தேவை? உருவம் இல்லாத மாபெரும் ஆற்றலுக்கு  வானங்களும், பூமியும் அடிமை அல்லவா? அந்த ஆட்சி பீடம் உங்களுடைய உள்ளத்திலிருந்து வெளிப்படும் விதமாக நிச்சயமாக நம் உள்ளங்களை இறைவன் அமைத்திருக்கின்றான்.
              அங்கிருந்து வெளியாகக் கூடிய ஒவ்வொரு செய்தியும் உள்ளத்திற்கு உள்ளம் நிச்சயமாக அணுவளவும் வித்தியாசப் படாது. ஒன்றுக்கொன்று சமமானதாகவும், ஒன்றுக்கொன்று சமாதானமாகவும்தான் இருக்குமே தவிர, உள்ளத்திற்கு உள்ளம் முரண்படாது. உதாரணமாக, 'பொய் பேசக் கூடாது' என்று உள்ளம் அறிவித்தால், ஒவ்வொருவருடைய உள்ளமும் 'அது உண்மைதான்' என்று கூறும். மேலும், எந்த நியாயமாக இருந்தாலும், அவ்வளவு உள்ளங்களுக்கும் அதே நியாயம் உண்டு. அவ்விதமே உள்ளம் 'அநியாயம்' என்று ஒரு காரியத்தைக் கூறினால், அது அவ்வளவு உள்ளங்களுக்கும் அநியாயம்தான். இவ்விதமாகவே நீதி, நேர்மை, சத்தியம், அக்கிரமங்கள், நன்மைகள், தீமைகள் அனைத்துமே உள்ளங்களுக்கு உள்ளங்கள் மாறுபடாது. இவ்விதமாகவே மனிதர்களின் உள்ளம் இறைவனின் ஆட்சிபீடமாக அனைத்து ஆட்சியதிகாரங்களைக் கொண்ட மாபெரும் ஆற்றலின் இயக்கத்தலமாக இருக்கிறது. இப்பொழுது கூறுங்கள். உங்களுடைய உள்ளத்திற்கு இணையானவைகளா, நீங்களாக உங்களுடைய கற்பனைகளைக் கொண்டு தீர்மானித்துக் கொண்ட தெய்வ இல்லங்களும்? இறை கூடங்களும்? தேவாலயங்களும்?
                        இந்த மூன்று கட்டிடங்களிலும் போட்டிக்காக நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட வித்தியாசமான கட்டிட அமைப்புகள்தானே? பார்த்தீர்களா? உங்களுடைய கைகளுக்குள், உங்களுடைய அறிவுக்குள்  ஒரு காரியத்தை செய்யும் பொழுது எத்தனை வித்தியாசங்கள்? ஆனால், உள்ளத்தில் இறைவன் சாட்சியமாக வெளிவரக் கூடிய ஒரு பதிலுக்கு, அதாவது நியாயத்திற்கு எந்த மாறபாடும் கிடையாது என்பதை கவனிக்க வேண்டாமா? இப்பொழுது கூறுங்கள். உள்ளத்திற்கு அப்பால் இறை இல்லங்கள் உண்டா? அவை உண்மையானவைகளா?
பதில்:  நிச்சயமாக உள்ளம்தான் கோவில். இதற்கப்பால் இறைவனுக்கு இருப்பிடங்களோ, இல்லங்களோ நிச்சயமாக இல்லை.
கேள்விஉங்களுடைய கோவில் எது?
பதில்:  உள்ளம்தான்.
கேள்வி:  என்னுடைய கோவில் எது?
பதில்:  உள்ளம்தான்.
கேள்வி:ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய கோவில் எது?
பதில்:  உள்ளம்தான்
கேள்வி: இந்த கோவில்களுக்கு, இறை இல்லங்களுக்கு, தேவாலயங்களுக்கு வித்தியாசங்கள் உண்டா?
பதில்:  நிச்சயமாக இல்லை.
கேள்வி:  உள்ளம் என்ற இந்தக் கோவிலை, இந்த சத்தியத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டாமா?
பதில்:  நிச்சயமாக அது பாதுகாக்கப் பட வேண்டிய ஒரே அமைப்பு.
கேள்வி:   எவ்விதம் உங்கள் உள்ளத்தை பாதுகாப்பீர்கள்?
பதில்:   ……
   உள்ளம் வானங்களையும், பூமியையும் இணைத்து இயங்கச் செய்யக் கூடிய மாபெரும் ஆற்றல். இவை இணைந்து உங்களை அதில் 'வாழ்விக்க வேண்டும்' என்று அதன் மீது கட்டளை இருக்கிறது. இந்த கட்டளையை நாம் எப்பொழுது உணர்வோம் என்றால், பெரும் பிரளயங்களின் போதுதான். வானத்திலிருந்து மழைநீர் கொட்டி வெள்ளமாக பிரவாகம் எடுக்கும் பொழுது, பூமியிலிருந்தும் நீர் பொங்கி எழுந்து வெள்ளக்காடாக ஆகும் பொழுதும் உங்களுடைய உள்ளம் ஒன்றை விரும்பும். இன்னும் பயபக்தியோடு விரும்பும். 'வானமே நிறுத்திக் கொள். பூமியே காய்ந்து விடு'. இன்னொன்றையும் அந்த உள்ளத்திலிருந்து 'கடவுளே காப்பாற்று'. இதுதான் பிரார்த்தனையின் முடிவு. ' உங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டும்? என்ன தேவை' என்பதை உங்களுடைய உள்ளங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவிக்கும். அதில் எத்தகைய மாற்றமும் இருக்காது. ஏனென்றால், உள்ளம் சத்தியத்தை மட்டுமே பேசும். நியாயத்தை மட்டுமே உரைககும். நன்மையை மட்டுமே விரும்பும். தீமையை வெறுத்தும் விடும்.
                     இவற்றைத்தான் நீங்கள் சற்று முன்பு உள்ளத்திலிருந்து வெளிப்படக் கூடிய ஆற்றல் மிக்க செய்தியாக பார்த்தீர்கள். அதாவது 'வானமே நிறுத்திக் கொள்' என்ற கட்டளையை, 'பூமியே காய்ந்து விடு' என்ற கட்டளையை. நிச்சயமாக இவ்விரு கட்டளைகளையும் வானங்களும், பூமியும் செவியேற்றுக் கொண்டன என்பதை நீ்ங்கள் இன்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த கட்டளையானது வானங்களும், பூமியும் இணைந்து நிறைவேற்ற வேண்டும். உங்கள் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு ஆற்றலுக்கு அல்லது கட்டளைக்கு இவ்விரண்டும் அடிபணிய வேண்டும். இதற்கான அடுத்த வார்த்தை உங்களுடைய உள்ளத்திலிருந்து வெளிப்படும். 'கடவுளே காப்பாற்று' இது பிரார்த்தனையின் முடிவு. அதாவது, வானத்திற்கும், பூமிக்கும் உள்ளத்திலிருந்து பிறப்பித்த கட்டளையானது 'கடவுளே காப்பாற்று' என்று கூறும் போது அவை இயங்க ஆரம்பிக்கின்றன. வானம் நிற்கும். பூமி விழுங்கி விடும். உங்களுடைய வாழ்க்கை தொடரும். அனைத்து இயற்கையின் வளங்களுதனும், அழகு ஆதாரங்களுடனும்.
         ' உங்கள் உள்ளம் பாதுகாக்கப் பட வேண்டும்' என்று நீங்கள் விரும்பும் போது, அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்களிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளை எத்தகையது என்றால், அது ஒரு அழகான உணர்வு. உணர்வு என்று கூறும் போது 'நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டது' என்று பொருள். இந்த நீதிக்கும், நியாயத்திற்கும் நாம் கட்டுப்படும் போது இறையுணர்வுக்கு கட்டுப்பட்டு நம்முடைய மனதை அவ்வுணர்வுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதுவே ' இறையுணர்வுக்கு நாம் சாஷ்டாங்கமாக அடிபணிந்து விட்டோம்' என்பதை அறிவோமாக. நீதியும், நியாமும் இறை சாட்சியங்களில் உள்ளது. ஏனெனில், நிச்சயமாக இறைவன் யார் ஒருவருக்கும் அநியாயம் செய்பவன் இல்லை. நம்முடைய மனதை இறைவன் எப்பொழுதும் கவனித்தவனாகவே இருக்கின்றான்.
            இப்பொழுது மனம் என்றால் என்ன என்பதை அறிவோம். உள்ளத்திலிருந்து பிறப்பிக்கப்படக் கூடிய ஒவ்வொரு இறை ஆற்றலும் அதாவது, ஒவ்வொரு விருப்பமும் முதலில் வானங்களுக்கும், பூமிக்கும் அறிவிக்கப் பட்டு விடுகின்றது. அவை இரண்டும் இணைந்து தயார் நிலைக்கு ஆயத்தமாகி விடுகின்றன. ஏனெனில், நம்முடைய உள்ளத்தில் இறைவன் ஒரு விருப்பமாக  ஆக்கும் பொழுது, நியாயத்துடனேயே அதனை உருவாக்குகின்றான். அந்த விருப்பத்தை நம் மனம் ஏற்கிறது. எனவே இந்த இரண்டு அமைப்புக்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். உள்ளம் என்பது இறை ஆற்றல் மிக்க அமைப்பாக அதாவது ஆன்மாவாக நம் நெஞ்சங்களில் அமைக்கப் பட்டிருக்கிறது. மனமும் நம்முடைய நெஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பாகும். உள்ளத்திலிருந்து வெளிப்படும் செய்தியானது கட்டளைகளாக வானங்களுக்கும், பூமிக்கும் விடுக்கப் படுகின்றது. அதேநேரம் நம்முடைய மனதிற்கு அழகான விருப்பங்களாக அமைகிறது. இது உங்களுடைய விருப்பம் அகிலங்களின் மீது கட்டளைகளாக அமைகிறது என்பது பொருள். நம்முடைய விருப்பத்தை எந்த அளவுக்கு நாம் நம்புகின்றோமோ, அந்த அளவுக்கு நாம் வானங்களும், பூமியும் உங்களுக்கு அடிமையாக இருந்து பணிபுரியும். இந்த நம்பிக்கையானது முழுமையாக இருக்க வேண்டும்.
            பெரும்பாலும் நாம் நம்பிக்கை கொள்வதில்லை. 'வானங்களும், பூமியும் நமக்கு அடிமை' என்பதையே நாம் என்றென்றுமே சிந்தித்து பார்த்ததில்லை. மாறாக, அவற்றையே நாம் தெய்வங்களாக நமக்கு மிஞ்சிய மகாசக்திகளாக, நமக்கே கேடாக தீர்மானித்துக் கொண்டோம். வானங்களைப் பார்த்து கும்பிடுவதும், பூமியைத் தொட்டு கும்பிடுவதும், கிழக்கு திசைகளும், மேற்கு திசைகளும் பெரும் சக்திகளாகி விட்டன. நமக்கு நாமே இவ்விதமாக அநியாயம் செய்து கொண்டவர்களாக மாறி விட்டோம். அதாவது, நம்முடைய அடிமைகளை நாம் எஜமானர்களாக ஆக்கி விட்டோம்.
                 அதேநேரம் நாம் நியாயமாக நடந்து கொள்வோமேயானால், அந்த வானங்களும், பூமியும் நம்முடைய விருப்பத்தை நமக்கு நிறைவேற்ற வேண்டும். எனவே, அந்த வானங்களும், பூமியும், உங்களுடைய மனதின் தூய்மைக்காக காத்திருக்கின்றன. இறை ஆற்றல் மிக்க உள்ளத்தின் செய்தியை சந்தேகம் என்ற ஒன்றைக் கொண்டு தீட்டுப்படுத்தாமல், களங்கப்படுத்தாமல் அந்த மனதில் ஏற்கும் பொழுது, உங்களுடைய விருப்பங்கள் வானங்களின் மீதும், பூமியின் மீதும் ஏற்கனவே இறைவன் விதித்த கட்டளைகளுக்கு அடிபணியச் செய்கின்றன. எனவே, உங்களுடைய உள்ளத்தின் ஒவ்வொரு கட்டளையும் வானங்களுக்கும், பூமிக்கும் பிறப்பிக்கப்பட்டு, இவற்றுக்கிடையே இருக்கக் கூடிய 'அந்தக் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்' என்பதுவும் அறிவிக்கப் பட்டு அதேநேரம் உங்களுடைய மனதிற்கும் அவை அழகான விருப்பமாக அமைக்கப்படுகின்றது. அந்த விருப்பத்தை பாதுகாத்துக்  கொள்ளுங்கள்; களங்கப்படுத்தாதீர்கள்; தீட்டுப்பட்டதாக ஆக்கி விடாதீர்கள். உங்களுடைய சந்தேகங்களைக் கொண்டு, இதுவே உங்களுடைய உள்ளத்தை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வழிமுறையாகும்; இதுவே இறைவழிபாடாகும்.
கேள்வி:  எவ்விதம் உங்கள் உள்ளத்தைப் பாதுகாப்பீர்கள்?
பதில்:   நம் மனதிற்கு தோன்றும் விருப்பங்கள் அனைத்துமே 'அகிலங்களில் நமக்காக இணைந்து, செயல்பட்டு அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும்' என்று பிறப்பிக்கப் பட்ட கட்டளைகள். எந்த அளவுக்கு நாம் மனதில் அதைப்பற்றி சந்தேகம் கொள்ளாமல் ஏற்றுக் கொள்கின்றோமோ, அந்த அளவுக்கு நாம் நம்முடைய உள்ளத்திற்கு மரியாதையும், மதிப்பும் கொடுக்கின்றோம் என்பதை அறிகின்றோம். இவ்வாறு நாம் கொள்வது நமது இறைவனை கண்ணியப்படுத்துவதாக இருக்கிறது. நிச்சயமாக இறைவனைப் போற்றும் போதும், கண்ணியப்படுத்தும் போதும் அகிலங்கள் அந்த இறைவனுடைய அனுமதியைக் கொண்டு  நமக்கு சிரம் பணிகின்றன. அந்த உள்ளத்தின் தூய்மையைப் போற்றும் விதமாக நம்முடைய மனதை நாம் அவற்றை சந்தேகிப்பதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுவே உள்ளத்தை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக, அதாவது இறைவனை நம்மோடு இணைத்துக் கொள்ளக் கூடியதாக, இறை சக்தியோடு நாமும் இணைந்திருப்பதற்கு ஒப்பானதாக நிச்சயமாக அறிய வேண்டும். உள்ளத்தைப் பாதுகாப்பது அகிலங்களையே நமக்கு கீழ்படியச் செய்து அவற்றின் மீது நம்முடைய ஆட்சியதிகாரம் அமைத்து அவற்றை பராமரிப்பதற்கு ஒப்பானதாக நாம் கருத வேண்டும். இதுவே மாபெரும் வெற்றியாகும். நிச்சயமாக இறைவனுடைய உதவியைக் கொண்டு ' இது நிகழ்ந்தே ஆக வேண்டும்' என்ற விருப்பத்தையும் நம் மனதில் நாம் கொள்ள வேண்டும்.
கேள்வி:  உள்ளத்திலிருந்து உங்கள் மனதிற்கு அறிவிக்கப்படக் கூடிய விருப்பங்களை நிர்மூலமாக்கக் கூடிய கேடுகளாக, அவ்விருப்பங்களின் மீது சந்தேகத்தை உருவாக்கக் கூடியவைகளாக உங்கள் மனங்களில் நீங்கள் கொண்டிருப்பது என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா?
பதில்:   …….
  உங்கள் மனதை நீங்கள் பார்ப்பீர்களானால், உங்களுடைய உள்ளங்களிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள விருப்பங்கள் ஒருபுறம் இருக்கிறது. அதேநேரம், உங்கள் மனதின் மறுபுறத்தில் உங்களுடைய வெளிப்புற புலன்களிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட உங்களுடைய கல்வியும் இருக்கிறது.
      கல்வி என்பது 'நான் பார்ப்பதையும், நான் கேட்பதையும், தோல்களால் நாம் ஸ்பரிசிப்பதையும் ஆகிய இவைதான் வாழ்க்கை' என்று கற்றுக் கொடுப்பதாகும். ' இவற்றை நாம் அதிமதிகம் எவ்வளவு அடைகின்றோமோ அவ்வளவு சுகங்களோடு வாழலாம்' என்பதுவும் கற்பிக்கப் பட்டவையாக இருக்கின்றன. இங்குதான் நம் மனதிற்கான பெரும் கேட்டை நாம் சம்பாதிக்க ஆரம்பிக்கின்றோம். ' எவையெல்லாம் அழியுமோ, அவற்றையெல்லாம் நாம் அதிகமாக அபகரித்துக் கொண்டு வாழ்வதில்தான் நித்திய வாழ்க்கை அமைந்துள்ளது; சுகமும் அமைந்துள்ளது' என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றோம். இவற்றை விருப்பமாகவும் ஆக்கிக் கொண்டோம்.
                  இப்பொழுது கவனியுங்கள். உள்ளத்திலிருந்து உங்களுக்காக வானங்களும், பூமியும் இணைந்து புதிய படைப்புகளாக, பரிசுத்த தன்மைகளுடன், உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பிரத்தியேகத் தன்மையுடையதாக படைக்கப்பட இருக்கின்றனவே உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் உங்களுடைய புதுப்புது அனுபவங்களில் வாழ்விக்கக் கூடிய மாபெரும் ஆற்றலோடு காத்திருக்கக் கூடிய விருப்பங்கள் அமைக்கப் பட்டிருக்க,
       உங்களுடைய வெளிப்புற புலன்கள் வாயிலாக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய படைக்கப்பட்ட பொருள்களிலிருந்து கிடைக்கக் கூடிய சுகத்தை பிரதானமாக எடுத்துக் கொண்டு, அதனை அதிகரித்துக் கொண்டு, அபகரித்துக் கொண்டு; பின்னர் அழியக் கூடிய இவற்றையெல்லாம் கொண்டு 'நானும், என் சந்ததிகளும் என்றென்றும் வாழ்ந்து விடுவோம்' என்று கற்றுக் கொண்டும், கற்பித்துக் கொண்டும் இருக்கின்றோமே, இவ்விதமாக மனதில் புகுத்தப்பட்டு விட்ட கேடுகள் இன்னொரு புறம்.
            இவையிரண்டையும் கொண்டுதான் எந்த நேரத்திலும் மனம் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின்றது. சந்தேகத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின்றது. இன்னும் இவற்றில் நாம் மூழ்கி விட்டவர்களாகவும் இருக்கின்றோம். இவ்விரண்டிற்கும் இடையே நமக்குத் தெளிவு பிறக்கும் பொழுது, இறைவனைடைய அனுமதியைக் கொண்டு வானங்களும், பூமியும் மீண்டும் நம்மை அரவணைக்க ஆரம்பிக்கிறது. இந்த ஆரம்பத்தை நாம் மனதில் குழப்பம் நீங்கி அமைதி என்ற ஒன்றை உணரும் பொழுது அறிய வேண்டும். 'நமக்கு நல்ல நேரமும், நல்ல காலமும் ஆரம்பமாகி இருக்கிறது' என்பதை.
          அந்தத் தெளிவு என்னவென்றால், படைக்கக் கூடிய சக்தியும் உள்ளத்திலிருந்து நம் மனதில் விருப்ப்ங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், அழியக் கூடியதும், அழிந்து கொண்டிருக்கக் கூடியதுமான படைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் வாழ்க்கைக்குரியதாக மனிதர்களால் கற்பிக்கப்பட்ட இவ்விதக் கேடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் அழியக் கூடியவைகளை நாம் நீக்கி, படைக்கக்பட இருப்பவற்றை நம்பிக்கை கொள்ள வேண்டும். நமக்கான தெளிவும், அமைதியும் நம்முடைய மனதில் அதிகமாகி வருவதை நாம் உணர முடியும். 'வானங்களும், பூமியும் நமக்கு அடிமையாகி வருகின்றன. இறைவனுடைய அனுமதியைக் கொண்டே' என்பதை சத்தியமாக அறிந்து கொள்ளுங்கள். ஆக, உங்களுடைய புறப்புலன்களைக் கொண்டு கற்றுக் கொண்டிருக்கும் கல்வியறிவைப் பற்றி மிகுந்த எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள். அவற்றில் உங்களுக்கு வாழ்க்கை இல்லை. நீங்கள் உலகப் பொருள்களிலிருந்து உங்கள் கல்வியறிவை உபயோகித்து நீங்கள் சேமித்து வைத்துக் கொண்டிருப்பவை அனைத்தும் உங்களுக்கு நெருப்புக்குரியதாகவே மாறும். ஆம், அவை அனைத்தும் அழியும். அதற்குரிய நேரம் வரும் பொழுது. உங்கள் கண் முன்பாகவே நீங்கள் சேமித்தவை அனைத்தும் காணாமல் ஆகும் பொழுது நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்கள். அதாவது, உள்ளத்தில் இருக்க்க் கூடிய விருப்பத்தை முதன்முறையாக பார்க்க ஆரம்பிப்பீர்கள். உள்ளத்தில் அமைக்கப் பட்டுள்ள தேவை இப்பொழுதுதான் உங்களுக்கு தெளிவாகும். ஏனென்றால், நீங்கள் எப்பொழுது பொருள்களை சேமிக்க வேண்டும் என்று விரும்பினீர்களோ, அந்த நாள் முதலாக உங்கள் உள்ளத்திலிருந்து உங்களுக்கு அறிவிக்கப் பட்ட விருப்பத்திற்கு நேர் எதிராக நீங்கள் அடிமைகளாக அவற்றை அடைய வேண்டி முடிந்த வரையில் அபகரிக்க வேண்டி உலகத்தின் பொருள்களுக்காக உழைக்க ஆரம்பித்தீர்கள். அவை அனைத்தும் இன்று முடிவுக்கு வந்து விட்டது. உங்களுடைய கல்வியறிவு ஸ்தம்பித்து விட்டது. இறந்தே விட்டது.
           ' இனி உங்களுக்கு வாழ்க்கை இல்லை' என்று இந்த நேரத்தில் மனதை விட்டு விடுபவர்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இறப்பும் ஏற்பட்டு விடும். ஆனால், அந்த நேரத்திலும் மனதில் இருக்கக் கூடிய உள்ளத்திலிருந்து அறிவிக்கப் பட்டுள்ள ' இனி என்றுமே சுகத்திற்கு முடிவில்லாத வாழ்க்கை வேண்டும்' என்று இறைவன் அறிவித்துள்ள செய்தியை கவனித்து விடுபவர்களும் இருக்கின்றார்கள். இது அவர்களுக்கு மறுபிறவி அளிக்கக் கூடிய கவனம் ஆகும். நிச்சயமாக அவர்கள் இறைவனுடைய  பாதையில் புதுப் பிறவியை எடுத்து விட்டார்கள். அன்றுதான் அவர்கள் மரணித்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப் பட்டவர்களாக இருக்கின்றார்கள். இவ்விதமாக நம்மில் ஒவ்வொருவரும் மரணம் அடைந்த பின்னர் இறைவன் நமக்கு பாவ மன்னிப்பு அளித்ததைக் கொண்டு மீண்டும் உயிர் கொடுத்து வாழ்வு கொடுக்கப்பட்ட பலப்பல தருணங்கள் உண்டு. ஆனாலும், நாம் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நன்றியோடு சிந்தித்து, உணர்வு பெற்றவர்களாக  இல்லை.
                    நல்லறிவுடையவர்களே! இன்று நாம் சிந்தித்துணரக் கூடிய சூழ்நிலையில் இருப்பதை அறிய வேண்டும். நம்முடைய காலம் கடந்து கொண்டிருக்கிறது. நேரம் சமீபித்துக் கொண்டிருக்கின்றது; எந்த நேரத்திலும் நமக்கு மரணம் சம்பவித்து விடலாம்; உள்ளச்சம் கொள்ளுங்கள். அதாவது, உள்ளத்திலிருந்து நமக்கு அறிவிக்கப்படக் கூடிய ஒவ்வொன்றையும் மனதில் இருக்கக் கூடிய கல்வியறிவு அல்லது மனிதர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் கற்பித்துக் கொண்ட அறிவின் காரணமாக இனியும் நிராகரித்தவர்களாக, அவற்றின் மீது சந்தேகம் கொண்டவர்களாக வாழ வேண்டாம். மாறாக, கல்வியறிவை நிராகரித்து, உள்ளத்தின் விருப்பங்களுக்குக்  கீழாக்கி, அவற்றை, அந்தக் கல்வியறிவை நம்முடைய மனதிலிருந்து முற்றிலுமாக நீக்கி, உள்ளத்தின் செழுமையை மனதிற்கு உரியதாக்கி, அவற்றின் பலன்களை உரிமையாக்கிக் கொண்டு வாழ்வோமாக.
               நிச்சயமாக நாம் பேசிக் கொண்டிருப்பதை இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லறிவு புகட்டப்பட்டிருக்கின்றது. கேடுகள் அனைத்தையும் அவற்றைக் கொண்டு நம் மனதிலிருந்து நீக்கி உள்ளத்தோடு மனதை இணைத்து வாழக் கூடிய வாழ்க்கையை நிச்சயமாக இறைவன் நமக்கு நன்மையாகவும், நல்லுதாரணமாகவும் அமைத்து வாழ வைப்பானாக. நம்முடைய இந்தப் பிரார்த்தனையை இறைவன் நிரந்தரமாக நம்முடைய உள்ளத்திலிருந்தும், மனதிலிருந்தும் ஏற்றுக் கொள்வானாக. வானங்களையும், பூமியையும் நம்மை என்றென்றும் அரவணைப்பதாகவே ஆக்கியருள்வானாக. இதுவரை நாம் கேட்டுக் கொண்ட சத்தியத்தை நாம் மறந்து விட்ட போதிலும் அவன் கருணையைக் கொண்டு என்றென்றும் நினைவில் நிறுத்துவானாக. கல்வியறிவின் கேடுகளுக்கு மேலாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆற்றல் மீது நம்மையும், நம்முடைய சந்ததிகள் மீதும் நிலைநிறுத்துவானாக.
        "எங்கள் இறைவனே ! நிச்சயமாக நீயே பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவன்; உன்னுடைய வாக்கு சத்தியமானது; உன்னுடைய மன்னிப்பும், கருணையும் எங்கள் மீது என்றென்றும் நிலைத்திருக்கட்டும்; உள்ளத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அந்த உள்ளத்தை அமைத்துக் கொள்ளக் கூடிய உன் மீது நன்றியுணர்வோடு நிலைத்திருக்க விரும்பும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நீ முழுமையாக அவர்கள் சம்பந்தமாக பொறுப்பேற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக பொறுப்பேற்றுக் கொள்வதில் நீயே மிகச் சிறந்தவன். மேலும், உன்மீது பொறுப்பேற்படுத்துபவர்களை நேசிப்பவனாக இருக்கிறாய். உன் மீதே நம்பிக்கை கொண்டோம்; உன்னையே பொறுப்பேற்படுத்துகிறோம்."

                                                                  நன்றிஹெல்த் டைம் ஜூலை 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக