உணவு தான். . . உணவு மட்டும் தான்
மனித இனத்தின் முதல் தேடலாக இருந்தது. காரணம் உணவு தான் உடலை வளர்க்கிறது. உடலின்
தேவைகளில் முதல் முக்கிய தேவை உணவு தான். நாம் உண்ட உணவு தான் நம் உடலாக
மாறியிருக்கிறது. உணவு தான் மனிதனின் மையம். அவனை அங்கிருந்து தான் வளர்க்கவோ
அழிக்கவோ முடியும். உணவே சகலமும் என்று சொன்னால் மிகையாகாது.
எந்த ஒரு மனிதனுக்கு உணவு பற்றிய
தெளிவு இருக்கிறதோ, அவனை
ஆரோக்கியம் அரவணைத்துக் கொள்கிறது. இவ்வுலக வாழ்விற்கு உடலே பிரதானம். உடலுக்கோ
உணவே பிரதானம். பசிக்கும் அது தான் தீர்வு. நோய்க்கும் அது தான் தீர்வு.
என்றைக்கு மனிதன் தன் நோய்களுக்கு
தீர்வாக(மருந்தாக) உணவை விடுத்து ரசாயனங்களை நோக்கி தன் பார்வையை திருப்பினானோ
அன்றிலிருந்து வளர்ந்தது தான் இன்றைக்கு இருக்கும் பல வகையான நோய்களும். இன்று
நாம் கேள்விப்படும் பல நோய்கள் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லவே
இல்லை. மனிதன் தன் நோய்களுக்கு தீர்வாக மீண்டும் உணவுக்குத் திரும்பாத வரை
அவனுக்கு ஆரோக்கியம் வாய்க்கப்போவதில்லை. உடலில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை
உள்ளேயே அடக்கி வைத்து ரசாயனங்கள் தரும் தற்காலிக சுகமானது, நிச்சயம் பெரும் ஆபத்தை
விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டே ஆகவேண்டும்.
மனித உடல் ஏற்றுக்கொள்ளக் கூடிய
உணவுகளை தயாரிக்க இயற்கையால் மட்டுமே முடியும். மனிதன் தனக்கு தேவையான உணவின்
ஆற்றலை தன் சொந்த ஜீரண சக்தியில் இருந்துதான் தயாரிக்க முடியும். மனிதனால் ஆரம்பிக்கப்பட்ட ரசாயன
தொழிற்சாலையில் அப்பணி நிகழ முடியாது. ரசாயன தொழிற்சாலையும் இயற்கையும் ஒன்றாகிவிடுமா
என்ன? மனித
அறிவானது அதனைப் படைத்த இறை ஆற்றலுடன் தன்னை இணை வைத்துக்கொள்ளும் பெரும் பாவத்தை
செய்யத் தொடங்கியுள்ளது.
உணவாகக் கொள்ள முடியாத எதையும்
மருந்தாகக் கொள்ள முடியாது என்பது மனிதனுக்கான இயற்கையின் உணவு விதியாகும். இதனை
நாம் முழுமையான தெளிவுடன் உணர்ந்து கொள்ளவேண்டிய முக்கியமான கால கட்டத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘விருந்தும் மருந்தும் மூன்று
நாளைக்குத் தான்’ என்பது
பழமொழி. இதில் சொல்லப்படும் மருந்து என்பது உணவின் அடிப்படையில் உருவாக்கப்படுவது.
அதையே கூட மூன்று நாட்களுக்கு உண்டாலே போதும் என்கிறது நம் கலாச்சாரம். ஆனால் நாம்
இன்றைக்கு ரசாயனத்தால் ஆன மருந்துகளை வருடக்கணக்கில் சலிக்காமல்
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். வருடக்கணக்கில் மருந்துகள் சாப்பிடுகிறோமே, இருந்தும் நோய்கள் நமக்கு
சரியாகவில்லையே என்று நாம் என்றைக்காவது யோசித்திருக்கிறோமா?
‘உணவே மருந்து, மருந்தே உணவு’,
‘உண்ணும் உணவில்
நோயில்லை, உண்ணும்
முறையில் தான் நோய்’ என்ற
எளிமையான தெளிவுகளில் மனிதனுக்கான மாற்றம் ஒளிந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக