செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

குடிப்பழக்கம்! தவறான உணவுப்பழக்கம்! எது அதிக தீமை?

குடிப்பழக்கமும், புகைபழக்கமும் உடல் நலத்துக்கு தீங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி தான். ஏன் அது உடல் நலத்துக்கு தீமை என்றால் அது நமது முக்கிய உள்ளுறுப்புகளின் சக்தியை விரயமாக்கி, அதன் இயக்கத்தை தடை செய்கிறது. நாளடைவில் அவ்வுறுப்புகளே செயலிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைகிறது.
உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படைவது வெறும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தால் மட்டும் தான் நிகழ்கிறதா? அப்படியானால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமல்லவா?
இக்கேள்வியானது நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
நமது உள்ளுறுப்புகளை பாதிக்கும் எந்த ஒரு செயலும் அல்லது பழக்கமும் உடல் நலத்துக்கு தீங்கு தான். அந்த வகையில் பார்த்தால் இன்றைக்கு மனிதர்களின் பல நோய்களுக்கு காரணம் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தை விட, அவர்களின் தவறான உணவுப் பழக்கம் தான்.
அனைவரும் குடிப்பதில்லை, அனைவரும் புகை பிடிப்பதில்லை. ஆனால் அனைவரும் சாப்பிடுகிறோம். என்ன சாப்பிட வேண்டும்?, எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்?” என்ற தெளிவில்லாமல் நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவுமே நமக்கு நோய் விளைவிக்கக்கூடியது தான். குடி மற்றும் புகைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைக்கும், தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
உதாரணமாக,
அதிகமாக குடித்தால் கல்லீரல் பாதிக்கப்படும். உண்மை. அதை விட பெரிய உண்மை அதிகமாக புளிப்பு சுவை சேர்த்துக்கொள்வதும் கல்லீரலை பாதிக்கும் என்பது.
குடிப்பழக்கம் உள்ள ஒருவர் வாரம் இரண்டு முறை மது அருந்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரது கல்லீரல் நிச்சயம் பாதிக்கப்படும்.
தினமும் ஒருவர் இட்லி, தோசை சாப்பிடுகிறார். பிரட், பீட்சா, பிஸ்கட், பப்ஸ் சாப்பிடுகிறார். உணவுகளில் சுவைக்காக புளிப்பு சுவையை அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்கிறார். இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடுகிறார். பசிக்கிறதோ இல்லையோ நேரத்துக்கு சாப்பிட்டு விடுகிறார். இரவு தாமதமாக உண்பதும், பசியில்லாத போது உண்பதும் புளித்துப் போய் அமிலத்தன்மை ஏற்படுத்தி புண்கள் உண்டாக்கும். ஆகவே இவரது கல்லீரல் பாதிக்கப்படுவதும் நிச்சயம்.
மேற்கண்ட இருவரில் குடிப்பழக்கம் உள்ளவரை விட, குடிப்பழக்கம் இல்லாத, தவறான உணவுப்பழக்கம் கொண்டவருக்குத் தான் கல்லீரல் அதிகம் பாதிக்கப்படும்.
காரணம் பல இருக்கலாம். ஆனால் விளைவு ஒன்று தான். ஒரே விளைவை ஏற்படுத்தும் பல காரணங்களையும் ஒத்த தன்மையுடையதாக எடுத்துக்கொள்வதில் தவறில்லையே! இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அபாயம் குடிப்பழக்கமோ அல்லது புகைப்பழக்கமோ அல்ல. தவறான உணவுப் பழக்கம் தான்.
நாம் தினமும் மூன்று வேளைகள் குடிப்பதில்லை. ஆனால் அனைவரும் தவறாமல் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நம் உடலாக மாறுகிறது. நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது பெரும்பகுதி நாம் உண்ணும் உணவை சார்ந்தே இருக்கிறது. ஆகவே உணவைப் பற்றிய தெளிவான புரிதல் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது.
ஒவ்வொருவருமே உணவைப் பற்றிய அறிவும் தெளிவும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். இது சிறு வயதில் இருந்து வேறெந்த கல்வி அறிவை விடவும் முக்கியமாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய பாடமாகும்.

சரியான உணவுப்பழக்கமும், முறையான யோகப் பயிற்சிகளும் இன்றைய மனித குலத்தின் அத்தியாவசிய தேவைகளாகும். இது அவர்களின் உடல் பற்றியது மட்டுமல்ல. மனம் மற்றும் மனித வாழ்வின் மகத்துவம் பற்றியதுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக