வெள்ளி, 3 மார்ச், 2017

இறைவழி மருத்துவம் பயனளிக்க இறைவனை பிரார்த்திப்பது எப்படி?
நோய்களால் மனம் உடைந்து விட வேண்டாம் !
இறைவனிடம் நீங்கள் கேட்க வேண்டிய பிரார்த்தனை !                      
                                டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்   MBBS DV MD PhD (Acu)
  41:49  மனிதன் நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை; ஆனால், அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசை உடையவனாகின்றான்.
                 வாசகர்களே, மேற்சொல்லப்பட்டுள்ள இறை வாக்கியம் நம்முடைய வாழ்க்கையில் நிகழும் அனைத்து நன்மை தீமைகளுக்கும் விளக்கம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. ஏதேனும் ஒரு துன்பம் ஏற்பட்டால், 'இது எங்கிருந்து வந்தது?' என்று ஆரம்ப காலங்களில் நாம் கேட்பதில்லை. உடனடியாக அந்தக் கேடுகளை நீக்கிக் கொள்வதற்கான பாதையில் நாம் செல்கின்றோம். நம்முடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் நம்முடைய சோதனைகளை நம்முடைய செயலின் காரணமாக அதிகமாக்கிக் கொண்டிருக்கும் பொழுது, 'இனிமேல் நாம் செய்யக் கூடிய காரியம் எதுவும் இல்லை' என்றாகும் போது, முதன்முறையாக நமக்குள்ளேயே கேட்கின்றோம்,  'எனக்கு ஏன் இந்த சோதனை?' என்று. நம்முடைய முயற்சிகளின் பயணம் அங்கே முடிவடைகிறது. அங்கு நாம் இதுவரையில் இறைவனை கைவிட்டதன் காரணமாகவும், வெகு தொலைவிற்குச் சென்று விட்ட போதிலும் நாம் இறைவனை அங்கு சந்திக்கின்றோம்.
           அதாவது, நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எந்த தூரத்திற்கு நாம் தொலைந்து விட்ட போதிலும் நிச்சயமாக அங்கு நம்மோடு இறைவன் இருக்கின்றான் என்பதை அறிய வேண்டிவர்களாக இருக்கின்றோம். அதன் காரணமாகவே அந்தச் சூழ்நிலையிலும் 'கடவுளே! இறைவனே!' என்று அழைக்கின்றோம். அவ்வாறு அழைக்கச் செய்பவனே இறைவன்தான். நாம் எங்கிருந்த போதிலும்  அவன் நம்முடனேயே இருக்கின்றான் என்பதற்கு இதுவே சான்று.
           குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப் பருவம் வரை நாம் கல்வி கற்க வேண்டும்; வேலை செய்ய வேண்டும்; பதவிகளில் அமர வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும் - இவையே வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தீவிரமான முயற்சிகளிலும், மற்றவர்களை மிகைக்க வேண்டும் என்ற வேகத்திலும், போட்டி, பொறாமை மனப்பான்மைகளுடனும் நம்மை தயார் படுத்திக் கொள்பவர்களாக இருந்தோம். இறுதியில் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு வெளியே வரும் பொழுது, சக மாணவர்களுடன் சகஜமாக இயற்கை குணங்களோடு பழக முடிவதில்லை. கடும் விரோதங்களுடனும், பகைமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் நயவஞ்சகர்களாக வாழ ஆரம்பிக்கின்றோம். பள்ளிக் கூடங்களில் ஆரம்பித்த போட்டி, பொறாமை, பகைமை, போர்க்குணம் போன்ற மனக்கேடுகளில் அதிகமாகி கல்லூரிச் சாலைகளிலிருந்தும் வாழ்க்கைக்காக வெளியேறுகின்றோம். இங்குதான் பகிரங்கமான, மனதிற்கு விரோதமான வாழ்க்கை ஆரம்பமாகிறது. மனம் எல்லோருக்கும் பொதுவானது; நற்குணங்களைக் கொண்டது; நன்மையான குணங்களை அங்கீகரிப்பதும், தீமையான குணங்களை வெறுக்கச் செய்வதுமான அந்த மனதை நாம் தொலைத்து விட்டுத்தான் வாழ்க்கையை ஆரம்பிக்கும் சூழ்நிலையைக் கொள்கிறோம். இதுவே மானக்கேடான வாழ்க்கையின் ஆரம்பம். நம்முடைய அனைத்து முயற்சிகளின் தோல்வி முகம் இதுவே. மனதை நாம் அசிங்கப் படுத்திக் கொண்டோம். இனி இறைவனிடமிருந்து நாம் விலகி விடுவதற்கு முன்பாக இறைவனுடைய உதவியும், நற்சொல்லும், எச்சரிக்கையும் மிகவும் அவசியம்.
      குழந்தை மனதுடன் பள்ளிக்குச் சென்ற நாம், இறுதியாக அனைத்து கோரமான முகங்களுடன் கல்லூரியை விட்டும் வெளியேறுகின்றோம். நாம் கற்றுக் கொண்டது 'அனைவரையும் மிஞ்சியவர்களாக நாம் வாழ வேண்டும்; நமக்கு மீறி எஞ்சியவர்களாக எவரும் இருக்கக் கூடாது'. இத்தகையோர் இறைவனை மறந்து விட்டார்கள். அவர்கள் அறிந்து வைத்திருப்பதற்கே விரோதமாகத் துணிந்தும் விட்டார்கள், வெகு சொற்பமானவர்களைத் தவிர. 'படித்து விட்டோம்' என்ற பெருமையுடன் வெளிவரும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த பட்டம் பெற்றவர்கள் அனைவரும் பணம் ஒன்றைத் தவிர வேறு எதனையும்  சம்பாதிக்க வழியற்றவர்கள் என்பதை உணரவில்லை.
              படிப்பு நன்மை என்பார்கள்; உழைப்பு நன்மை என்பார்கள்; முயற்சி நன்மை என்பார்கள்; விடாமுயற்சி இன்னும் நன்மையானது என்பார்கள்; சோதனைகள் வரும் என்பார்கள்; வேதனைகள் வரும் என்பார்கள்; துன்பங்களும் வரத்தான் செய்யும் என்பார்கள். ஆனால், இவர்கள் எண்ணிய எண்ணமெல்லாம் உண்மைதான் என்பதை அறியாத நிலையில் அவர்களிடம் மேற்சொன்ன சூழ்நிலைகள் உருவாகி விட்டால் அவர்களுடைய கதி என்ன? அதோ கதிதான் என்பதை மேற்சொன்ன இறை வாக்கியம் உறுதிப் படுத்துகிறது.
  41:49  மனிதன் நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை; ஆனால், அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசை உடையவனாகின்றான்.
            இந்த இறைவாக்கை ஏன் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் இதுதான். இவ்வளவு நிகழ்ந்த பிறகும் நாம் இதனை அறிவதன் காரணமாக நன்மை இல்லை. இந்த சோதனைகளும், வேதனைகளும் உருவாவதற்கு முன்பாக நாம் நம்முடைய நெஞ்சங்களில் மனசாட்சியமாக அமைக்கப்பட்டிருக்கின்றோம். பெரும்பாலும்  முயற்சியை, விடா முயற்சியை பெருமையாகக் கொள்வோம். ஆனால், அதனை நீங்கள் சிந்திப்பீர்களானால், முயற்சி என்பது ஒரு சூதாட்டக் களம் என்பதை உணர்வீர்கள். அதனுடைய முடிவு எப்படி இருக்கும் என்பதைப் புரியாத நிலையில்தான் முயற்சியை மேற்கொள்கின்றோம். முயற்சி என்பது ஒரு சூதாட்டம் என்பதற்கு இது போதுமான விளக்கம்.
         'இரவு-பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும்' என்று கூறுவார்கள். ஆனால், இரவுக்குப் பிறகுதான் நம்முடைய வாழ்க்கையே ஆரம்பமாகிறது. ஓய்வு அவசியம்; அமைதி அவசியம்; மனநிம்மதி முக்கியம். இவை அனைத்தையும் ஒருசேர நாம் அனுபவிக்கக் கூடிய அந்த இரவு, புத்துயிர் பெற்று நாம் எழுவதற்குரிய இறை பாக்கியமிக்க ஒரு நாளின் பொழுதாகும். இரவு பொழுதின் தூக்கத்தில் நிகழக் கூடிய மாபெரும் இறை பாக்கியம் நீங்கள் புது உயிர் பெறக் கூடிய அந்த அதிகாலை நேரம். பெருமை கொண்ட மக்கள் மனதிற்குக் கேடாகவே ' இரவு பகல் பாராமல் சூதாட்டக் வாழ்க்கைக்காக முயற்சிக்க வேண்டும்' என்று போதித்துக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையான மக்களும் வீண் பெருமைக்காக, ஊருலகம் மெச்ச வேண்டும் என்பதற்காக இத்தகைய மனதிற்குக் கேடான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் பாதகமான சூழ்நிலையை நிச்சயமாக ஏற்படுத்தும். இந்த உண்மையைத்தான் பொதுவாக மக்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளக் கூடிய கெட்ட வார்த்தைகளாக மேலே பார்த்தோம்.
     அதாவதுபடிப்பு நன்மை என்பார்கள்; உழைப்பு நன்மை என்பார்கள்; முயற்சி நன்மை என்பார்கள்; விடாமுயற்சி இன்னும் நன்மையானது என்பார்கள்; சோதனைகள் வரும் என்பார்கள்; வேதனைகள் வரும் என்பார்கள்; துன்பங்களும் வரத்தான் செய்யும் என்பார்கள். ஆனால், மனதின் கேடுகளே இவை என்பதை இன்று நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் விளங்கக் கூடியதுதான். படிப்பு இருக்கிறது; உழைப்பு இருக்கிறது; முயற்சி இருக்கின்றது. ஆனால், நன்மைகள் இல்லை; மனதில் நிம்மதி இல்லை. விரக்தியும், வேதனையும் வாழ்க்கையின் எல்லையில் நாம் அனுபவிக்கின்றோம். இனி என்ன செய்வது? கடவுளைத் தவிர கதி கிடையாது. இப்பொழுது இறைவன் என்ன கூறுகின்றான் என்பதைப் பாருங்கள்.
41:49  மனிதன் நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை; ஆனால், அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசை உடையவனாகின்றான்.
       மனிதன் நன்மைகளை இறைவனிடம் கேட்பதற்கு சோர்வடைவதில்லை. நன்மைகள் என்று நாம் எண்ணிக் கொண்டு இறைவனிடம் திரும்புவது எப்பொழுது என்றால், தீமைகளை தலைக்கு மேலாக சம்பாதித்து விட்டு, அதன் வேதனைகளில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது 'இறைவனே' என்று கையேந்துகின்றோம். எப்பொழுது நாம் கையை தலைக்கு மேலே உயர்த்துவோம் என்பதை உங்களுடைய பிரார்த்தனையின் அசைவுகளிலிருந்தே உணர்ந்து கொள்ளுங்கள். வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது ஒருவனின் கை மட்டும்தான் பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், தலை மூழ்கி விட்டது. இனி காப்பாற்றுபவன் யார்? வெள்ளத்துக்குள் யாரும் செல்லவும் முடியாது; அப்படி செல்வார்களானால் அவர்களும் மூழ்க வேண்டிய சூழ்நிலை. இந்துக்களோ, முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அவர்கள் தங்கள் தலைகளுக்கு மேலே கைகளை உயர்த்தும் பொழுதும், ஏந்தும் பொழுதும் தாங்கள் மூழ்கி விட்டதை உணர வேண்டும். இப்பொழுது இறை வாக்கியத்தின் இன்னொரு பகுதியை நாம்  பார்ப்போம்.
      4:18   இன்னும் எவர்கள் தீவினைகளைச் செய்து கொண்டேயிருந்து முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய பொழுது, 'நிச்சயமாக இப்பொழுது நான் மன்னிப்புத் தேடுகின்றேன்' என்று கூறுகின்றார்களோ, அவர்களும். எவர் நிராகரிப்பவர்களாகவே  இருந்தார்களோ, அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்கு துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
        வாசகர்களே, இப்பொழுது ஓரளவு சுக துக்கங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே நன்மைகளை நாம் விரும்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம். எந்த நேரத்திலும், வாழ்க்கையின் அனைத்துத் தருணத்திலும் நமக்கு நாம் சம்பாதித்ததும், சம்பாதித்துக் கொண்டிருப்பதும் துன்பத்துடன் கலந்த சுகம்தான். யாரை வேண்டுமானாலும் நீங்கள் விசாரிக்கும் பொழுது, பெரும்பாலானோருடைய பதில் 'ஏதோ இருக்கிறேன்' என்று கூறுவார்கள். அதாவது, 'துன்பங்களும் இருக்கின்றது. சுகமும் இருக்கின்றது' என்பது அதனுடைய பொருள்.
     இது சத்தியம். எல்லோருக்கும் வேதனைகளும், சோதனைகளும், துன்பங்களும், துக்கங்களும், கவலைகளும், பயங்களும், ஆற்றாமைகளும், இயலாமைகளும், விரக்திகளும் வெவ்வேறு அளவீட்டில் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்றன. அத்துடன் ஒரு சுகமும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது. அதாவது, இவ்வளவு கேடுகளுக்கு மத்தியில் கொஞ்சம் சுகத்தையும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த சுகம் நன்மையானது. நன்மையாக இருக்கக் கூடிய அந்த அணுவத்தனை சுகம்தான் மலை போன்ற நம்முடைய வேதனைகளையும், துன்பங்களையும் சுமப்பதற்குரிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றது. இதுவே நன்மைக்கும், தீமைக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். எவ்வளவு தீமைகளில் நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு துரும்பு அளவு நன்மை அதில் மானசீகமாகவே இருக்குமானாலும், அது, அவ்வளவு தீமைகளின் பளுவையும் நிச்சயமாக இலேசாக்கக் கூடிய பேராற்றல் கொண்டதாக இருக்கிறது.
     வாசகர்களே, இறைவழி மருத்துவத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய பிரார்த்தனைகளில் மிக முக்கியமானது இதுவே. 'எங்கள் இறைவனே, எங்களால் தாங்கிக் கொள்ள முடியாத சுமையை சுமத்தாது இருப்பாயாக.
    இறைவன் சுமையை சுமத்துவது இல்லை, மாறாக, நாம் நம் சுமையை நம் முதுகின் மீது சுமக்கின்றோம். அந்த அளவுக்கு நம்முடைய எண்ணங்கள் எந்த ஒன்றிலும் இறைவனை நாடி செய்யக் கூடிய செயலாகக் கொள்வதில்லை. நன்மை என்பது நாம் எந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமோ, அது இறைவனிடமிருந்துள்ள ஒரு அருள் ஆகும். உதாரணமாக, ஒரு பக்கம் தலை வலிக்கிறது; இன்னொரு பக்கம் சுகமாக இருக்கிறது. ஒரு பக்கம் கை கால்கள் விழுந்து விட்டன; இன்னொரு பக்கம் கை கால்கள் நன்றாக இருக்கின்றது. ஒரு சிறுநீரகம் செயலிழந்து விட்டது; இன்னொரு சிறுநீரகம் சுகமாக இருக்கின்றது. ஒரு கண் பார்வை தெரியவில்லை; மறு கண்ணோ நன்றாக இருக்கின்றது. இதன் பொருள் என்ன?
         ஆரம்ப காலங்களில் படைக்கப்பட்ட நாள் முதலே அனைத்து உறுப்புகளும் சுகமாக இயங்கிக் கொண்டிருந்தவைதாம். நீங்கள் உங்களுடைய வளர்ச்சியின் உச்சக் கட்டத்திற்கும் வளருகின்றீர்கள்; வாலிபப் பருவத்தை அடைகின்றீர்கள். இதில் உங்கள் பங்கு என்ன? ஒன்றுமே இல்லை. ஆனால், நீங்கள் கூறுகின்றீர்கள்; 'நாங்கள் தவறாமல் உடற் பயிற்சி செய்கின்றோம்; ஆகவே, நாங்கள் சுகமாக வாழ்கின்றோம்.’ இதை முதன்முறையாக நீங்கள் கேள்வியுற்ற பொழுது, உங்களுடைய உள்ளம் என்னவெல்லாம் கூறியிருக்கும் என்பதை கவனித்தீர்களா?
1. உங்களுடைய உடற்பயிற்சி உங்களுடைய உருவத்தின் வளர்ச்சியையும், பரிமாணத்தையும், அதன் சுகத்தையும் அளித்ததா?
2. மருந்துகளும், மாத்திரைகளும், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் என்று நாம் நம்முடைய உணவு வகைகளோடு சேர்த்துச் சாப்பிட்டோம். 'நமக்கு நோய்களே வராது!என்று. ஆனால், அது உண்மையா?        
3.  உடற்பயிற்சிகளையும், ஊட்டச் சத்துக்களையும் உணவுக்கும் மேல் அதிகமாக கவனத்தில் கொண்டு வாழ்ந்து வந்த உங்களுக்கு ஏன் நோய்கள் ஏற்பட்டன என்பதை நீங்கள் கவனித்தீர்களா?
4.  குழந்தைகள் முதலாக ஏன் கண்பார்வை கோளாறுகள்?
5.  நீங்கள் இப்பொழுது நோய்வாய்ப்பட்டு விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் உடற்பயிற்சியை வழக்கத்திற்கு மேலாக இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் செய்வது என்ன? 'உடல் நலம் சீராகும் வரையில் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும்'  என்பதுதானே?  
   வாசகர்களே, உங்கள் பதில் என்ன? ஓய்வில் உங்களுடைய சுகாதாரம் என்ற அருள் இருக்கின்றதா? அல்லது உடற்பயிற்சிகளில் சுகாதாரக் கேடு ஒட்டிக் கொண்டிருக்கிறதா? உங்களுடைய உள்ளங்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும், இறைவழி மருத்துவத்திற்காக உங்களுடைய உள்ளங்களில் மனிதக் கல்வியறிவு ஏற்படுத்தியுள்ள கறைகள் நீக்கப் பட வேண்டி.'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்.' மேலே சொன்ன உதாரணம் ஒன்று போதும். மனித அறிவு எந்த ஒன்றையும் ஒருசேர நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதையும், உள்ளம் தெளிவாக்கும் ஒன்றை மட்டுமே நம்முடைய வாழ்க்கைக்கு ஆதாயமாகக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வதற்கு.
               இந்த உண்மையை உணராத வரையில் நமக்கு நன்மை எது? தீமை எது? என்பதை விளங்காதவர்களாகவே வாழ்கின்றோம். இதனுடைய முடிவு எப்படி இருக்கும்  என்றால், நன்மைகளைப் பார்த்தால் அதனை தீமை என்று கொள்வோம்; தீமைகளைப் பார்த்தால் அதனை நன்மை என்று கொள்வோம். இந்த நிலைதான் நம்முடைய கல்வியறிவு புகட்டியுள்ள வாழ்க்கை. ஓய்வு, அது பெரும் கேடு என்று சொல்வார்கள். 'ஓய்வுக்கு ஒழிச்சலே இல்லாத வாழ்க்கை வேண்டும்' என்று விரும்பினால் அதனைப் பரிகாசமும் செய்வார்கள்.ஆனால் மாறாக, 'இரவு-பகல் தூங்காமல் உழைக்க வேண்டும்' என்று கூறினால், அதுதான் சிறந்தது என்று கூறுவார்கள்.
          இத்தகையோர்கள் இறைவனிடம் எதனை வேண்டுவார்கள்? தீமைகளைத்தானே! அதுவும் அதுதான் நன்மை என்று எண்ணிக் கொண்டு. அதனையும் தயக்கமே இல்லாமல், நீண்ட பிரார்த்தனையாகவும் மேற்கொள்கிறார்கள். நன்மை என்று எண்ணிக் கொண்டு இவர்கள் கேட்கக் கூடிய அனைத்திற்கும் சோர்வடையாமல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
41:49  மனிதன் நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை; ஆனால், அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசை உடையவனாகின்றான்.
   இப்பொழுது இறைவன் தன் வாக்கை உறுதிப் படுத்துகின்றான். மனிதன் நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை. ஆனால், உள்ளத்தின் பார்வையில் அதாவது அகப்பார்வையில் அவர்களுக்கு இறைவன் அறிவிக்கின்றான்,'நீங்கள் கேட்பது அவ்வளவும் தீமையானது' என்று. நம்முடைய அகப் பார்வையோ, செவிப்புலனோ என்றோ மூடப்பட்டு விட்டது. எனவே, நாம் சிந்தனையின் பக்கம் திரும்பி கவனத்தோடு நம்முடைய தேவைகளை சீர்தூக்கிப் பார்க்காத வரையில் சத்தியம் எது? நன்மை எது என்பதை நியாய உணர்வு கொண்டு பார்க்க முடியாத குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகி விட்டோம்.
                      இறைவன் நமக்கு செவிப்புலனையும், பார்வைப் புலனையும் அமைத்திருக்கின்றான். புலன்கள் உள்ளம் சம்பந்தப் பட்டது. நாம் பார்க்கும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் சரி, கேட்கும் எந்தவொரு சொல்லாக இருந்தாலும் சரி, அவற்றை உள்ளத்தின் புலன்களோடு இணைத்து பின்னர் அதனை நாம் நம்முடைய வாழ்க்கைக்கு உரியதாக அல்லது விலக்கப் பட்டதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இவ்விதமாக, அகத்தில் நம்முடைய தேவைகளை உணர்ந்தால் தவிர, இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனைகள் செல்லுபடியாகாது. இறைவனிடம் தூய்மையான மனதோடு நாம் திரும்ப வேண்டுமே தவிர, அகக் குருடர்களாக ஒருபோதும் திரும்ப முடியாது. இறைவனுடைய நல்லுபதேசத்தையும், நற்சொல்லையும், வழிகாட்டுதலையும் அகத்தில் பார்க்கக் கூடிய, கேட்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தால் மட்டுமேதான் இறைவனிடம் உள்ள தொடர்பு நமக்கு நன்மை அளிக்கும்.
            உதாரணமாக, ஒரு கெட்ட செயலை நாம் செய்கின்றோம். அதனைச் செய்வதற்கு முதலில் எண்ணம் தலையெடுக்கிறது. அவ்விதமாக கெட்ட எண்ணம் எண்ணும் அதேநேரம்  இறைவனுடைய வாக்கு அங்கு இருக்கிறது. 'இது தவறான எண்ணம்; எனக்கு பொருந்தாத எண்ணம்; இது உங்களுக்கே தீமை விளைவிக்கும் எண்ணம்; உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் நிச்சயமாக வரும்; எனவே, இந்த எண்ணத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்' என்ற  இறைவனுடைய நற்செய்தியும், எச்சரிக்கையும் அந்த உள்ளத்தில் கூறப் படுகின்றது. அகப்பார்வை உடையோரும், செவி சாய்ப்போரும் நிச்சயமாக இறை வாக்குகளை, கேடான எண்ணங்களை எண்ணும் நேரத்தில் உணருவார்கள். அந்த எண்ணத்தை மனதில் தொடருவதற்கும் அஞ்சுவார்கள். இவர்களே பார்வையுடையோரும், செவியேற்போரும் ஆவர். 'எந்த நேரமும் தங்களோடு இறைவன் பேசிக் கொண்டிருக்கின்றான்' என்பதை அறிவதற்கு நமக்கு எந்தக் குறைவையும் இறைவன் வைக்கவில்லை.
       யார் இதனை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் எண்ணத்தின் அடிப்படையிலான தங்கள் செயல்களிலும் நுழைந்து விடுவார்கள். அப்பொழுதும் இறைவனுடைய எச்சரிக்கைகள் அவரவர்களுடைய உள்ளங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதாவது, எவர் ஒருவரும் தாங்கள் ஒரு தீமையான எண்ணம் கொள்ளும் பொழுதும், பின்னர் செயல்களில் ஈடுபடும் பொழுதும், தாஙகள் அந்த செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பாக தாங்கள் தவறு செய்கின்றோம் என்பதை அறிவிக்கப்படாமல் அந்தக் காரியத்தை அவர்கள் செய்து விடுபவர்களாக இல்லை.
      இப்பொழுது இத்தகையோர்கள் எந்த வகையில் தங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள்? 'தாங்கள் எந்தக் கேடுகளில் இருக்கின்றோமோ அதை அதிகப்படுத்திக் கொடு கடவுளே!' என்பதைத் தவிர. 'எனக்கு அதிகமாக பணத்தைக் கொடு; செல்வத்தைக் கொடு' என்று கேட்பார்கள். பணத்தை அதிகமாக விரும்புபவர்கள் தங்களுடைய நற்குணங்களை விட்டு விட வேண்டும். நற்குணங்கள் விரும்புபவர்களுக்கு இறைவன் தன் புறமிருந்து அவர்களுக்கு உரியதை அளவிடுகின்றான்; சீரமைக்கின்றான். ஆனால், பெரும்பாலான மக்களோ, அளவு எடையை விரும்புவதில்லை; அளவு எடையை மீறுவதையே விரும்புவார்கள். இதுவே பணத்தை விரும்புவதற்கும், குணத்தை விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்.
    ஆனாலும், இறைவன் நற்குணம் படைத்தவர்களையே நேசிக்கின்றான் என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கின்றோம். பெரும்பாலானோர் பிரார்த்தனைகளின் போது, நற்குணங்களை விரும்பவே மாட்டார்கள்; நற்குணங்களில் எதுவுமே தங்களிடம் இல்லாத நிலையில் அதைத் தவிர்த்து பணத்தை மட்டுமேதான் விரும்புவார்கள். ஏற்கனவே அவர்கள் பணத்தை அடைய வேண்டும் என்ற வெறித்தனத்தில் பெரும் மானக்கேடுகளையும், பாதகங்களையும் செய்து விட்டவர்கள்தாம்; செய்து கொண்டிருப்பவர்கள்தாம். இனியும் செய்ய வேண்டும் என்றும் அகத்தின் பாவத்தோடு இணைந்து விட்டவர்களே இவர்கள். அகப்பார்வையின்றி அகப்பாவங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய பிரார்த்தனைக்குரிய கூலியை இருவகையில் இறைவன் அளிக்கின்றான்.
                ஒன்று, அவர்கள் கேட்பதை கொடுத்து விடுகின்றான். இதற்கு பிறகு அந்தப் பிரார்த்தனையை வேண்டியவர்களுக்கு நிகழும் கதி என்ன? தங்களுடைய மானக்கேடுகளிலும், மனதின் தீங்குகளிலும், பெருமையிலும், அகம்பாவங்களிலும் மிதமிஞ்சி விடுவார்கள்.'தங்களுக்கு நிகராக எவரும் இல்லை; அந்தக் கடவுளும் இல்லை' என்ற எண்ணம் கொள்ளும் அளவுக்கு இறைவன் அவர்களைக் கைவிட்டு  விடுகின்றான். அவர்களுடைய செவிப்புலன்கள் மீதும், பார்வைப் புலன்கள் மீதும் முத்திரையிடப்படுகின்றன. இத்தகையோர் விளங்கிக் கொள்ளாச் செவிடர்களும், ஊமையர்களும் போன்றவர்கள்.
           இன்னும், அவர்கள் பார்வையின் மீதும் திரை இருக்கின்றது. மதி மயங்கியவர்களாகவே அவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். இறுதியாக அவர்களை மரணம் தீண்டும் வரையில். அந்த நாளில் அவர்களுக்கு மனம் திறக்கப் பட்டு விடும்; உணர்வுகள் புதுப்பிக்கப்படும். ஆனால், காலம் கடந்து விட்டது; அல்லது காலமாகி விட்டது. இனி, அவர்கள் பிரார்த்தனைகள் வீண் புலம்பல்களே! அவர்களுடைய பிரார்த்தனைகள் ஒவ்வொன்றுமே தீமைகளுக்கு மேல் தீமைகளாகவே இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்கு வேதனைகளுக்கு மேல் வேதனைகள் அதிகமாக்கப் படும். அந்த நாளில் அவர்கள் அழிவை அழைப்பார்கள். அதுவும் மறுக்கப்படும். வேதனைகளை இலேசாக்கும் படி கேட்பார்கள். அதுவும் அவ்விதமாக அல்ல. இது ஏனெனில், அவர்கள் இதுகாறும் வாழ்ந்து வந்தது இந்த நிலைதான். இறைவன் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி புகட்டிக் கொண்டிருக்கின்றான்.
            எனினும், அவர்கள் மறுத்து, அவற்றைப் புறக்கணித்தவர்களாக வாழ்ந்தது மட்டுமல்லாமல், இறைவனால் அடக்கியாளப்பட்டு, தன்னுடைய கருணையைக் கொண்டு வாழ்விக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களை இலேசாகவும் எண்ணினார்கள்; தங்கள் மீது அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதன் காரணமாக இறைவனுக்குப் பணிந்து அவன் அளித்ததை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் மீது வரம்பு மீறினார்கள். மேலும், அத்தகையோர்களுடைய வாழ்க்கையை பரிகாசமாகவும் ஆக்கினார்கள். எனவே, அவர்கள் மீது இறைவனுடைய மிகப்பெரும் கோபமும், வேதனையும் இறுதி நாள் வரையிலும் நிலைத்திடும் என்பதை நாம் அஞ்சிக் கொள்ள வேண்டும். இத்தகைய வாழ்க்கையில் தங்கள் வாழ்க்கையையே இறுதி வரையில் நாசமாக்கிக் கொண்டவர்களின் வரலாறுகளை நாம் அறியாதது அல்ல.
              இரண்டாவது, பிரார்த்தனை செய்வோரின் மனதில் ஏதேனும் நற்குணம் இருப்பதாக இறைவன் அறிந்தால், நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கையில் தடைகளையும், அவர்களுடைய முயற்சிகளில் சோதனைகளையும் கொண்டு தன்னளவில் திருப்புகின்றான். இத்தகையோர் உள்ளங்கள் திறக்கப்படுகின்றன. பொறுமையைக் கொண்டும், பணிவைக் கொண்டும் அவர்களுடைய காலத்தை இறைவன் சீரமைக்கின்றான். அவர்களுடைய உள்ளங்களில் சகிப்புத் தன்மையையும், அமைதியையும் நிலைநிறுத்துகின்றான். அவர்களுக்கு தீர்க்க சிந்தனையையும், தொலைநோக்கையும் அளித்து, தன் புறமிருந்துள்ள அறிவாற்றலையும் கொடுத்து, அகப்பார்வையுடையோராகவும், செவி சாய்ப்போராகவும் முற்றிலுமாக தனக்கு அடிமையாக்குகின்றான். இவர்களை எந்தக் கேடும் தீண்டுவதில்லை. இவர்களுடைய வம்சங்களும் அறிவாற்றலில் பெருகும். சக மனிதர்களோடு வாழக் கூடிய நிலையில் அவர்களுடைய வாழ்க்கையில் சாந்தமும், சமாதானமும் பெருகும். பொறுமை உடையோருக்கு இறைவன் கொடுக்கக் கூடிய சன்மானம் இதுவே. உலக வாழ்க்கையிலும், அதனைத் தொடர்ந்து வரும் மறுமை வாழ்க்கையிலும் நன்மையே இவர்களுக்கு உரித்தாகும்.
41:49  மனிதன் நல்லதைக் கேட்பதற்கு சோர்வடைவதில்லை; ஆனால், அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசை உடையவனாகின்றான்.
    இப்பொழுதும் இறைவன் கூறுவது, 'நீங்கள் வாழக் கூடிய வாழ்க்கை நீங்கள் கேட்ட பிரார்த்தனையின் காரணமாகவே அமைந்த ஒன்றாகும். ஆக, இனியும் நீங்கள் என்னிடம் நன்மைகளை கேட்க வேண்டாம்; நான் உங்களை நேரான பாதையின் மீதும், வழிகேட்டிலிருந்து உங்களை விலக்கும் பொழுது விலகி விடுவதன் மீதும் விழிப்புணர்வோடு இருங்கள்; உங்கள் காரியங்களில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பாகவே நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன். 'எது தவறு? எது தீமை? எது நன்மை?' என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்களானால், இன்னும், அத்தவறுகளிலிருந்தும், தீமைகளிலிருந்தும் நீங்கள் உங்களை விலக்கிக் கொள்வீர்களானால், அது நீங்கள் வாழ்நாள் முழுமையிலும் நீங்கள் கேட்கக் கூடிய பிரார்த்தனைகளுக்கு எல்லாம் மேலாக உயர்வானதாகும்'
   ஆகவே, இறைவனுடைய கருணை உங்கள் மீது நிச்சயமாக மிகப்பெரும் சோதனையின் போதும் நெருக்கமாக இருக்கிறது என்பதை இப்பொழுதும் உணர முடியும். இறைவன் சில தவறுகளை உங்களுக்கு இன்னமும் அறிவித்துக் கொண்டிருக்கின்றான். அதாவது, 'நான் உங்களை முடித்து விடவில்லை; இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்; இனியும் வாழ இருக்கின்றீர்கள்; உங்களுடைய குணங்களுக்கு என்னிடம் நீங்கள் விரும்புங்கள்; அதுவே பிரார்த்தனைகளில் உயர்ந்த பிரார்த்தனையாகும்'. இப்பொழுது இந்தப் பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள்:
           2:286 எங்கள் இறைவனே! நாங்கள் அநீதி செய்திருப்பினும், நாங்கள் மறந்து போயிருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே, நீ எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே, எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் அநியாயங்கள் நீக்கி, எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்! நிராகரிப்பவர்களான கூட்டத்தாரின் மீது எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!
                                                           நன்றி:  ஹெல்த் டைம் பிப்ரவரி 2017 மாத இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக