நினைத்த
காரியங்கள் வெற்றியாக்குவது எப்படி?
டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் MBBS DV MD
PhD (Acu)
நினைத்தால்
காரியங்கள் எவ்வாறு நிறைவேறும்? அதைத்தான் நம்புவது கடினமாக இருக்கிறது.
எதைக் கொண்டும் நம் கைகளால் காரியங்களைச் செய்யாத நிலையில் நினைத்தாலே சுகம் என்று
நீங்கள் சொல்வதை நம்புவது என்று பெரும்பாலோருக்கு சந்தேகம் இருப்பது நிச்சயம்.
நியாயமானதும் கூட. இந்த விஷயத்தை இவ்வளவு பிரயத்தனத்துடன் எழுதுவதற்குக் காரணம்
நீங்களும் நினைத்தாலே சுகத்தைக் கொடுக்கக் கூடிய வரம் பெற்றவர்களாக ஆக வேண்டும்
என்பதற்காகத்தான். முதலில் பார்ப்பதை நம்புங்கள்; எங்கள்
கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் ஒருவரையாவது தொடுகிறோமா என்றால் இல்லை. அவர்களிடம்
ஒவ்வொருவருடைய கஷ்டங்களையும் ஒவ்வொன்றாக பரிசோதித்து, ஆராய்ந்து
குணப்படுத்துகின்றோமா என்றால் அதுவும் இல்லை. ஏதோ ஒப்புக்காக கேட்கிறோமே தவிர, மற்றபடி
அவர்கள் ஏதோ கஷ்டத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்காக எங்களிடம் வந்துள்ளார்கள்
என்பது மட்டுமே முக்கியம். நாங்கள் நினைப்பதெல்லாம் இறைவன் நாடினால் அவன் உதவியைக்
கொண்டு சுகம் கிடைக்கட்டும் என்பதுதான். பலருக்கு உடனே சுகம் கிடைக்கிறது; சிலருக்கு
இலேசான முன்னேற்றம் கிடைக்கிறது.
நினைத்த காரியங்களை நினைக்கும் அதே
தருணத்திலேயே உருவாகவும் ஆரம்பிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எண்ணங்கள்
எவ்வளவு வலிமை வாய்ந்தது என்றால், அதற்கு உருவமில்லை. அந்த உருவமற்ற
எண்ணங்கள்தான் நம் காரியங்களில் நம்மை முழுக வைக்கிறது. நினைத்த காரியங்கள்
முடியும் வரை நம்மை ஆட்டிப் படைக்கிறது. அந்த எண்ணங்களால் நாம் நிம்மதியும்
அடைகிறோம்; கவலையும் கொள்கிறோம்; நெஞ்சம் பதைபதைக்க
அலைக்கழிக்கவும் படுகிறோம். எண்ணங்களின் மீது நம்பிக்கை ஏற்படும் பொழுது, நமது
காரியங்கள் முழுமையாக நிறைவேறும் என்ற நிம்மதி ஏற்படுகிறது. எண்ணங்கள் பலவீனமாக
இருக்கும் பொழுது நிச்சயமாக நமது நெஞ்சம் இந்த காரியம் நிறைவேறுமா? நிறைவேறாதா
என்ற பதைபதைப்புக்குள்ளாகிறது. உங்கள் இருதய துடிப்பு அதிகமாகிறது. உங்களுக்கு
உறக்கம் பிடிப்பதில்லை. கவலையிலிருந்து விடுபடவும் முடிவதில்லை. உங்கள்
கைகளால்தான், உங்கள் காரியங்களை சாதிக்க முடியும் என்பது உண்மையானால், உங்களுக்கு
ஏன் தூங்க முடிவதில்லை? உங்கள் நெஞ்சம் பதைபதைப்பதை ஏன் சீராக்கிக்
கொள்ள முடிவதில்லை. உங்கள் கவலையிலிருந்து உங்களை ஏன் மீட்டுக் கொள்ள முடியவில்லை.
உங்கள் கைகளால் முடிக்கக் கூடிய காரியம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள்.
நீங்கள் இன்று வாழ்ந்து
கொண்டிருக்கிறீர்கள் என்றால், நாளை நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற உங்கள்
எண்ணங்களின் தூண்டுதலால்தான். இவ்வாறு உங்கள் எண்ணங்கள் உங்கள் முழு உடலையும் வழி
நடத்தும் போது நீங்கள் எண்ணங்களை பலவீனப் படுத்துவீர்களானால் உங்களை அறியாமலேயே
உங்கள் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பலவீனத்தில் தளர்ச்சியடைந்து விடுகிறது.
தளர்ச்சியடைந்த உறுப்புக்களில் நோய்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. மனத்தில் தெளிவு
பிறந்தாலொழிய உங்கள் உடலில் தளர்ச்சியும், அதன் காரணமாக
நோய்களும் மேலும் தீவிரமடையுமே தவிர, நீங்கள் மீண்டு
வரும் பேச்சுக்கே இடமில்லை. எண்ணங்கள் பலவீனமடையும் போது நீங்கள் குற்றுயிரும், குலையுயிருமாக்கப்
படுகிறீர்கள் உங்களை அறியாமலேயே !
எண்ணங்களின்
பலவீனத்திற்கு காரணம் என்ன? எண்ணங்களைப் பற்றிய புரியாமையே. உதாரணமாக, உங்கள்
குழந்தைகளை, அவர்கள் தவறு செய்யும் போது சிலர் கைகளால் பயமுறுத்தி அடித்து
திருத்துவார்கள், அவர்களின் எண்ணத்தின் வலிமை அவ்வளவுதான்.
கையை, காலை அசைத்தால் தான் காரியங்கள் நிறைவேறும் என்பது. இன்னும்
சிலர் இருக்கிறார்கள். ஒரே பார்வையில் குழந்தைகளின் குறும்புத்தனத்தை அடக்கி
விடுவார்கள். அது மட்டுமல்ல, குழந்தைகளின் மூளையும் வேலை செய்ய ஆரம்பித்து
விடும் என்ற விதத்தில். இன்னும் ஒரு உதாரணம். பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளை
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலவீனமான எண்ணங்கள் கொண்ட ஆசிரியர்கள்
இருக்கிறார்கள். அதேசமயம், தூரத்தில்
ஆசிரியரைக் கண்டவுடன் அடங்கி விடக் கூடிய அளவுக்கு வலிமையான ஆசிரியரும்
இருக்கிறார்கள். இப்படி சாதாரண சூழ்நிலையிலேயே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
சாதாரண காரியங்களில் நம் எண்ணங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை.
வாசகர்களே, எண்ணங்களை
நீங்கள் நிறைவேற்ற வேண்டாம். அது தானே நிறைவேறும். எந்த ஒரு துரும்பைப் போன்ற
காரியத்தையும் உங்கள் புத்திசாலித்தனத்தால் செய்து விட முடியாது. உங்கள் எண்ணங்கள்
எந்த காரியத்தை முடியும் என்று நம்புகிறதோ, அந்த
காரியத்தைத்தான் உங்களால் செய்ய முடியும் என்பதையும் சிந்தித்து உணருங்கள். உங்கள்
எண்ணங்களை நீங்கள் நம்பாமல் இருப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நம்புவதில்
என்ன கஷ்டம் இருக்கிறது என்பதை சற்றே சிந்திப்பீர்களானால் எண்ணங்களை நம்புவதைத்
தவிர நம் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்பதை பூரணமாக உணர்வீர்கள். இந்த
எண்ணங்கள்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், அவரவர்களுக்கு
கிடைக்கும் வரம் ஆகும்.
எண்ணங்கள் பலவீனமாவதற்குரிய காரணங்கள்
என்ன என்பதை இப்போது அறிவது அவசியம்.
1. சந்தேகம்.
2. நினைத்ததும் கிடைக்கப் பெற வேண்டும் என்ற
அவசரம்.
3. மற்றவர்களுக்கு
கிடைத்து விடக் கூடாது என்ற தர்மமில்லாத எண்ணம். சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்ற
ஆத்திரமும், பொறுமையின்மையும்.
4. காரியங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கும்
தருணத்தில் இன்னும் தீவிரமாக அதன் மீது ஆசையையும், அவசரத்தையும்
காட்டுதல்.
5. காரியங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கும்
நேரத்தில் எண்ணங்களை மறந்து விட்டு தாங்கள்தான் அதை நிறைவேற்றப் போகிறோம் என்று
அனைத்து காரியங்களையும் பாழாக்கி விடுவது.
6. எண்ணங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கும்
தருணத்தில், எண்ணங்களுக்கு மேலும் வலுவூட்ட வேண்டும் என்ற முயற்சியில்
ஈடுபடாமல் இருப்பது போன்றவையே எண்ணங்களின் பலவீனத்திற்கு அடிப்படையான காரணமாகும்.
எண்ணங்கள் மீது நம்பிக்கை கொள்ள
வேண்டுமென்றால், அந்த எண்ணங்களின் நன்மை எப்படிப்பட்டது என்று புரிந்து கொள்ள
வேண்டும். எண்ணங்கள் ஒவ்வொன்றும் இறைவன் இருக்கிறான்
என்பதை பறைசாற்றக் கூடிய தெளிவாக ஆரம்பிக்கக் கூடிய ஞானங்கள் பொதிந்த பேரருட்
கொடைகளாகும். எந்த அளவுக்கு ஞானம் பொதிந்தது என்றால் அந்த
எண்ணங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியக் கூறுகள் நம் கைகளில் இல்லாத நிலையில்
நிச்சயமாக நிறைவேறியே ஆக வேண்டும் என்ற ஆசையை வளர்க்கக் கூடிய அளவுக்கு அதனை
நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் பொருந்திய இறைவனின் கல்வி ஞானத்தின் அடிப்படையைக்
கொண்ட அருட்கொடைகளாகும். இறைவன் உருவமில்லாதவன்; படைக்கும் சக்தியைக்
கொண்டவன். அவ்வாறே அவன் உருவாக்கும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் தானே காரியங்களை
நிறைவேற்றும் திறன் கொண்டவை என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். எண்ணங்கள்
எப்பொழுது தோன்றுகிறதோ அப்போதே உருவாகியும் விட்டது. எண்ணங்கள் வேறு உருவாகுதல்
வேறு கிடையாது. எண்ணங்களும் உருவமும் ஒன்றுதான். இவற்றை தனித்தனியாக பிரிக்க
முடியாது. எப்போது எண்ணங்கள் மனதில் தோன்றி விட்டதோ, அந்த எண்ணங்கள்
நடந்தேறி விட்டது என்பதே உண்மை.
எண்ணங்கள் இறைவனுடைய
குணாதிசயங்களில் மிக முக்கியமானது என்பதால் நம் எண்ணங்கள் அவனுடைய எண்ணங்கள் ஆகி
விடுகின்றன. அவன் எண்ணங்களை நடைமுறையிலாக்கும் கருவிதான் நம் இருதயங்கள். எந்தவொரு
எண்ணமும் முழுமையாக உருப்பெற்ற நிலையில்தான் நம் மனதில் தோன்றுகிறது என்பதற்கான
உதாரணமாவது; நம் மனதில் நமக்கு ஒரு வீடு வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.
அதாவது முழுமையாக கட்டப்பட்ட நிலையில்தான் அந்த வீடானது நமது மனக் கண்முன்
தோன்றுகிறது. முழுமையாக்கப்பட்ட அந்த எண்ணத்தை அப்படியே நம்பி விடுவது ஒன்றுதான்
எண்ணங்கள் நிறைவேற ஒரே வழி. எவ்விதம்
வீடு கட்டுவதற்காக செங்கல், மண், சிமெண்ட்
என்பதிலிருந்து உருவாகி அடித்தளம் அமைப்பது பற்றிய விஷயங்களையும், அதற்காக
பணம் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்கிற தேவையற்ற எண்ணங்களும் தோன்றாமல் அதன்
அடிப்படையைக் கொண்டு வளராமல் வீடு நம் மனக்கண்முன் முழுமையாக தோன்றி விட்டதோ அதைப்
போன்றே அவ்விதமே முழுமையான வீடு நமக்குக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை
கொள்வதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. இதைத் தவிர்த்து வீட்டைக் கட்ட
பணம் வேண்டுமே; செங்கல் இவ்வளவு வாங்க வேண்டும்; சிமெண்ட் இவ்வளவு
வாங்க வேண்டும் என்று அந்த வீட்டைக் கூறுபோடுவது உங்களுக்காக உருப்பெற்று அந்த
வீட்டை இடித்து தரைமட்டமாக்குவதற்கு ஒப்பாகும்.
இதைப்போன்றே இன்னொரு உதாரணம். நான்
என் பிள்ளையை டாக்டராக்க வேண்டும் என்று முழுமையான உருப்பெற்ற நிலையில் உங்கள்
மனதில் உருவாகிறது. அந்த எண்ணம் படிப்படியாக தோன்றி வளர்ந்து கடைசியில் டாக்டர்
ஆவதில்லை. எல்.கே.ஜி படிக்க வைக்க வேண்டும்; முதல் வகுப்பு
படிக்க வைக்க வேண்டும்; டாக்டர் படிக்க வேண்டும் என்று படிப்படியாக
தோன்றுவதில்லை. எண்ணம் தோன்றி விட்டால் அது தானாக வளர்ந்தோங்கி முழுமை பெறக்
கூடியது. எண்ணங்களை சிதைக்காதீர்கள்! தனித்தனியாக துண்டு துண்டாக்காதீர்கள்!
இறைவன் அருளைக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள முழுமையாக பூர்த்தியாக்கப்பட்டு விட்ட
நிலையிலுள்ள அந்த எண்ணங்களை அவ்விதமே நம்பி விடுங்கள். அதைச் செயலாக்குவதற்கான
வழிமுறைகளை நீங்கள் சிந்திக்காதீர்கள். அது உங்களுக்கு ஆகுமானதல்ல. வழிமுறைகள்
தானாகவே புலப்படும்; தானாகவே நிறைவேறும். உங்கள் எண்ணங்கள்
நிறைவேறக் கூடிய நாளின் உண்மையைக் கொண்டும் காலத்தின் மீது சத்தியமாக பொறுமையைக்
கொண்டும் காத்திருங்கள். நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்கள் இல்லை. அழகான கூலி
ஒன்றே உங்களுக்கு இறைவன் புறத்திலிருந்து போதுமானது. அந்த எண்ணத்தின் மீது
நம்பிக்கை கொள்ளாமல் அதைப் பலவீனப்படுத்தி அந்த எண்ணங்கள் அழிந்து விடும் நிலைக்கு
அதைப் பாழ்படுத்துவோமேயானால் அது
இறைவனுக்கு செய்யும் துரோகம் ஆகும். இருப்பினும் இறைவன் மன்னிப்பபோனாக
இருக்கின்றான். ஒருவர் இறக்கும் வரை புதுப்புது எண்ணங்களை தோற்றுவித்துக் கொண்டே
இருக்கிறான்.
வாசகர்களே, நீங்கள்
உங்கள் எண்ணத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் தருணம் நெருங்கி விட்டது. உங்கள்
மனதில் தோன்றும் எண்ணங்களை நீங்கள் விரும்புங்கள். நீங்கள் 'ஆகுக !' என்று
சொல்வதுதான் தாமதம், உடனே அது ஆகி விடுகிறது. எண்ணங்கள் அவனுடைய
புறத்தில் இருப்பதால் 'ஆகுக !' என்பதையே
அவனும் வாக்களிக்கிறான். நிச்சயமாக இறைவன் தன் வாக்குறுதியில் மீறாதவன்; மேலும்
இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
நன்றி: ஹெல்த் டைம் மார்ச் 2017 மாத இதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக