ஞாயிறு, 7 ஜூன், 2015

இறைவழி மருத்துவம் (IRAIVAZHI MARUTTHUVAM)

                    அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தையும், "ஹெல்த் டைம்" மாத இதழின் ஆசிரியருமான திரு.டாக்டர்.பஸ்லுர் ரஹ்மான் M.B.B.S.DV.MD.PhD (ACU) அவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு முதலாக இறை வழி மருத்துவம் மட்டுமே பார்த்து வருவதோடு, இறை வழி மருத்துவம் பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து ஹெல்த் டைம் பத்திரிக்கையிலும் எழுதி வருகிறார். மேலும் மருந்தில்லா மருத்துவமான இறைவழி மருத்துவத்தை தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் மாதந்தோறும் இறைவழி மருத்துவ கூட்டங்களில் உரையாற்றியும் வருகிறார். அவ்வாறு அவரால் ஜூன் 2015 இதழில் எழுதப் பெற்ற இறை வழி மருத்துவ கட்டுரை ஒன்று நமது அனைவரின் நலன் கருதி இணையத்தில் வெளியிடப் படுகிறது.
                               இறைவழி மருத்துவத்தை ஏற்று இன்று முதலாகவே நோய்களிலிருந்து விடு படுங்கள் !
                  இறையருளில் ஒவ்வொருவரும் வாழ விரும்புகின்றோம். அதற்காக பலதரப்பட்ட மனிதக் கூட்டங்களாக நாம் பிரிந்து விட்டோம். ஒவ்வொரு பிரிவாரும் ஒவ்வொரு வணக்க வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கிறார்கள். தெய்வங்களும் பலவாகி இருக்கின்றன.இவர்களிலிருந்து மனிதன் என்ற மனதின் தின்மையைக்  கொண்டு தனித்து விட்டு விட்டவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.இவர்கள் தங்கள் மனதில் எது சத்தியமானதாக உணருகின்றார்களோ, அந்த உள்ளுணர்வை பின்பற்றுகின்றார்கள். அந்த உணர்வை பேணிக் கொள்கின்றார்கள். இந்த இரண்டு கூட்டத்தார்கள் அதாவது, பூசாரிகளை நம்பி கடவுள்களை வழிபடும் பலதரப்பட்ட மதங்களைச் சார்ந்தவர்கள். மற்றொரு கூட்டத்தார் அவ்வளவு பூசாரிகளையும், மதங்களையும் விட்டும் விலகி, மனதில் உள்ள சத்தியத்தை மட்டும் பின்பற்றக் கூடிய இறை நேசர்கள்.
                                      இறை நேசர்கள் பெரும்பாலும் இறையருளுக்கு உரியவர்களாக நிச்சயமாக வாழ்வார்கள். நம்பிக்கை என்ற ஒன்றை நாம் அறிவோம். அது எவ்வளவு சத்தியமானதும், அத்தியாவசியமானதும் என்பதை சொல்லி விளக்க வேண்டியதுமில்லை. மனிதனின் உயிரோட்டத்தை கடைசி வரையில் அவன் முடிவு காலம் வரையில் பாதுகாப்பது மனதின் நம்பிக்கையைத்தான். 'நான் உயிர் வாழ வேண்டும்' என்ற நம்பிக்கை நிச்சயமாக அவனை வாழ வைக்கும் என்பதையும், 'நான் இறந்தே போவேன்' என்ற நேரெதிரான நம்பிக்கை அவனுடைய உயிர்ப்புக்கும், உயிர் பிரிதலுக்கும் காரணமாக நிச்சயமாக அமையும் என்பதுவும் உலகம் அறிந்த உண்மை.
                                                   உயிரிழப்பு என்றால் என்ன? உயிர் பிரிதல் என்றால் என்ன? உயிரிழப்பு என்பது உயிரோட்டத்தில் ஏற்படக் கூடிய பலவீனம். உயிர் பிரிதல் என்பது மரணம். இதில் உயிரிழப்பில் ஆரம்பித்து, மரணத்தில் சென்று முடிகிறது என்பது அடிப்படை உண்மை. நம்மில் பலரும் பல துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாகி, இறுதியாக இவையனைத்தும் அதிகமாகி, மனதையும், உடலையும் ஆக்கிரமித்த நிலையில் மரணம் அடைகின்றோமே இதுதான் உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்களுடைய ஒட்டுமொத்த நிலை.
                                              'நோய்களிலிருந்தும், அதன் துன்பங்களிலிருந்தும் நமக்கு நிவாரணம் வேண்டும்' என்று விரும்புகிறோம். இது நோய் ஏற்படுவதற்கு முன்பாக, துன்பங்களில் சிக்கி, சீரழிவதற்கு முன்பாக நம்முடைய மனதுக்கு உணர்வு ஊட்டப் படுகிறது. இந்த உணர்வை தெளிவாக எங்கிருந்து பிறக்கிறது என்பதை இந்த நேரத்தில் அறிந்தாக வேண்டும். யாரும் வெளியிலிருந்து பேசி, அதை காதுகளால் வாங்கி,'நான் நோய்களிலிருந்தும், அதன் துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கப் படவேண்டும்' என்று உணரவில்லை. மாறாக, உள்ளத்திலிருந்து உணர்வு நம் மனதிற்கு புகட்டப் படுகிறது. இந்த உணர்வைத்தான் நாம் நம்முடைய அத்தியாவசிய வாழ்க்கைத் தேவையாகவே கருதுகிறோம்.காதுகளின் வாயிலாக செய்திகள் கிடைக்கப் பெற்றால் நிச்சயமாக அது மனிதர்களின் பேச்சாகவே மனதில் இறங்கும். கண்கள் மூலமாக சில விஷயங்களை நாம் பார்க்கும் பொழுது, அதுவும் பொருள்கள் மூலமாகவும், நிகழ்ச்சிகள் மூலமாகவும் மனதில் இறங்குகின்றன. ஆனால் இவற்றையெல்லான் மனம் சீர்தூக்குப் பார்க்கிறது. இந்த நிகழ்வுகளில் நன்மையான செய்திகளும் உண்டு. தீமையான செய்திகளும் உண்டு. இவற்றுள் நன்மையை நம் மனம் ஏற்கிறது.'வேண்டும்' என்றும், இன்னும் ' என்றென்றும் வேண்டும்' என்றும், இன்னமும் இந்த 'நன்மைகளின் தன்மைகள் நிரம்ப வேண்டும்' என்றும் 'அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவையாகவும், அழகானவையாகவும், வெவ்வேறானவையாகவும் இருக்க வேண்டும்' என்றும் மனம் விரும்புகிறது.
                                    இறுதியாக சொல்லப் பட்டிருக்கக் கூடிய இவை யாவும் உள்ளத்துள் நிகழக் கூடிய புதிய நிகழ்வு. உலகத்தில் எவரும் இவற்றை நிறைவேற்றிக் கொண்டவர்களும் இல்லை. வாழ்ந்தவர்களும் இல்லை. எனவே,' இவற்றை வாழ்க்கையாக அமைய வேண்டும்' என்று நம்பிக்கை கொள்வது மிகவும் அரிதான விஷயம். பெரும்பாலும் இவற்றை நாம் கவனத்திலும் கொள்ள மாட்டோம். ஏனென்றால் 'இவையெல்லாம் நடக்கிற காரியம் இல்லை' என்று நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மையானால் ' உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதிலும் சிறப்பானதாக அமைய வேண்டும்' என்ற எண்ணம் இருக்கின்றதே, 'அது எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது?' என்ற கேள்விகள் கூடவே மனதில் அமைகின்றன. இதனை, இந்தக் கேள்வியை அமைத்தது யார்? நிச்சயமாக இறைவன் ஒருவனைத் தவிர இல்லை. இதுவே இறைச் செய்தியாக ஒவ்வொரு சுவாசத்திலும், ஒவ்வொருவருடைய மனதிலும் இறைவன் தன் நல்லருளாக இறக்கிக் கொண்டிருக்கிறான். இவையெல்லாம் விருப்பங்களாக நம்முடைய இருதயங்களில் ஒவ்வொரு நாளும் இறங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை இன்று நாம் அறிவோமாக.
                                               இவ்விதமாக நற்செய்தியும்,நல்லருளும் நம்முடைய வர இருக்கக் கூடிய காலத்திற்கு முன்பாகவே தெளிவான உணர்வாக இருக்கிறது. நிச்சயமாக இறைவன் நமக்கு முந்தியவனாகவே இருக்கிறான்.இதனை யார் நம்பிக்கை கொள்கிறார்களோ,இறைவனே நமக்கான நற்செய்தியை வரும் காலத்திற்கு உரியதாக ஆக்கி, அதன் மீது விருப்பத்தையும் ஏற்படுத்தி, அந்த விருப்பத்தில் எந்த அவநம்பிக்கையையும் கொண்டு களங்கப்படுத்தாமல் வாழ்விக்கப் படுகின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் அதற்கான வழி காட்டப் பட்டு விட்டார்கள். அவர்களுடைய மனதின் சூழலும் அழகானதாகவும் மாறி விட்டது. மனம் நாளைய வாழ்க்கையை அறிவிக்கக் கூடியதாக இருக்கிறதே தவிர, நேற்றைய வாழ்க்கையை அறிவிப்பதாக இல்லை. ஆனால், பெரும்பாலானோர் நேற்றைய நிகழ்ச்சிகளின் கேடுகளில்தான் பெரும்பாலும் தங்களுடைய மனதை ஈடுபடுத்துகிறார்கள். எனவே, நாளைய வாழ்க்கையைப் பற்றிய செய்தியை அவர்கள் கவனிப்பவர்களாகவே இல்லை. எனினும், அந்த இறைச் செய்திகள் ஒவ்வொன்றும் நிறைவேறக் கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தின் தவணை வருவதற்கு முன்பாகவே யார் அதனை எதிர்நோக்குகின்றார்களோ, அவர்கள் எச்சரிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அதாவது, எச்சரிக்கையோடு வாழக் கூடிய தன்மை பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் இறைவனுடைய நேசத்திற்கும் உரியவர்களாக இருப்பதன் காரணமாகவே அவர்களுடைய மனம் தூய்மையானதாக இருக்கிறது. இத்தகையோருடைய மனதை இறைவனுடைய செய்தியோடு இணைத்து ஈர்ப்பதற்கு இறைவனுடைய துணையே அங்கு நிறைவேறியிருக்கிறது. எனவே, அவர்கள அந்த எச்சரிக்கையை அடைந்தார்கள்.
                                                       எச்சரிக்கை உடையோர் எத்தகையோரெனில், அவர்கள்தான் சிந்தித்து செயல்படக் கூடிய நல்லொழுக்கத்தை கொண்டிருப்பவர்கள். ஒழுக்கத்தைப் பேணுபவர்களை நிச்சயமாக இறைவன் நேசிக்கிறான். எனவே, அவர்களுடைய ஒழுக்கங்களில் அவர்களை அதிகரிக்கவும் செய்கிறான். சிறு குழந்தை முதலாகவே ஒவ்வொருவருக்கும் இந்தப் பழக்கம் இருக்க வேண்டும். அவர்கள் ஒழுக்கக் கேடுகளிலிருந்து எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகின்றார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை எச்சரிக்கையோடும், சீரமைப்பைக் கொண்டும் மற்ற மனிதர்களை விட மேலோங்கிய வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளக் கூடிய தெளிவான பாதையைக் காண்பார்கள்.
                                                           எவரொருவர் சிந்தித்து உணரும் தன்மையைப் பெற்றிருக்கின்றாரோ, அந்த சிந்தனையைத தூண்டுவதும், பக்க பலமாக இருப்பதும் இந்த இறைச் செய்திகள்தாம். எப்படி இறைச் செய்திகள் சிலருக்கு மட்டுமே மனதில் படுகிறது என்பதைப் பார்ப்பீர்களானால், அவர்கள் ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் சிந்திப்பவர்களாகவே இருப்பதன் காரணமாகவே அந்த சிந்தனையில் அவர்களுடைய பார்வை எல்லாம் மறைவானவற்றைப் பற்றியதாகவே இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு சிறு துன்பம் ஏற்பட்டாலும், ' இது ஏன் ஏற்பட்டது?' என்ற கேள்வி சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவே இருக்கிறது. காரணம், ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் அறிந்தே ஆக வேண்டும். அந்த காரணம் உணர்வுக்கு மட்டுமேதான் புலனாகுமே தவிர, ஒருபோதும் புற உண்ர்ச்சிகளைக் கொண்டு வாழக் கூடிய மனிதர்களின் மனதிற்கு எட்டாது.
                                               ஏனெனில், உணர்ச்சிகள் அனைத்துமே 'நாம் நேற்றைய வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்' என்பதை அறிவிக்கிறது. அதாவது, இன்னும் இன்றைய வாழ்க்கையில் கூட நாம் அடியெடுத்து வைக்கவில்லை. அந்த அளவுக்கு நாம் இறந்தவர்களாகவே இறந்த காலங்களில் வாழ்நது கொண்டிருக்கிறோம். இவ்விதமாக, நிகழ் காலத்திற்குள்ளேயே நுழையாமல் இருக்கும் பொழுது, வரும் காலத்திற்கு எப்படி நாம் செல்ல முடியும்? இறைச் செய்திகளை ஒருபோதும் இறந்த கால மனநிலையைக் கொண்டு அடைய முடியாது. வரும் கால மனநிலை வேண்டும். வரும் காலமோ மறைவானதாக இருக்கிறது. அதில் நீங்கள் விரும்புவது மட்டும் நிகழும். இன்னும் நீங்கள் வரும் காலத்தைப் பற்றி என்ன கற்பனை செய்கின்றீர்களோ, அதுவும் கூட கேடானதுதான். பெரும்பாலும் கற்பனைகள் அனைத்துமே நாம் பார்ப்பவைகளும், கேட்டவைகளும் மட்டுமேதான். அவ்வளவும் பொருள்கள். அவ்வளவும் அவை படைக்கப் பட்ட நாளிலிருந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. எனவே, அதிலும் நாம் நஷ்டத்திற்கும், இழப்பிற்கும் ஆளாகின்றோம்.
                                              இப்பொழுது உள்ள காலத்தில் மனிதர்கள் அனைவரும் எண்ணற்ற நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். ' இது ஒரு சாபக் கேடு' என்று கூறக் கூடிய அளவுக்கு நோய்களும், துன்பங்களும் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. எந்தவொரு நோயிலிருந்தும் நிவாரணம் பெற விரும்பி, எந்த மருத்துவத்தை நாடினாலும், நோய்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றனவே, தவிர, நோய்கள் சுகமானதாக இல்லை.அந்த நோய்களோடுதான் அவற்றின் கொடுமையோடு இறந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும், நோய்களுக்கு வைத்தியம் பார்க்கப் பார்க்க புதிய நோய்களும் ஒன்றுககு ஒன்று மோசமானதாக சேர்ந்து கொள்கின்றன. இதற்குக் காரணம்,'சுகமாக வேண்டு்ம்' என்ற ஒரு உணர்வு முதன்முறையாக அவர்களுக்கு ஒரு நோயின் ஆரம்பம் காணும் தருணத்திலேயே இறையருளால் அவர்களுடைய மனதிற்கு அறிவிக்கப்படுகிறது.   அழகிய உணர்வாக. இந்த உணர்வு வரும் காலத்தில் 'இந்த நோய்கள் உருவாகக் கூடாது. அவை உருவாகும் முன்பாகவே அழிந்தாக வேண்டும்' என்று 'இனி வரும் காலங்களில் நிகழ வேண்டியது என்ன?' என்பதைப் பற்றி நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஏன் பெரும்பாலோர் இதன் மீது, அதாவது நாளைய தேவையாக இருக்கும் மறைவான இந்த காலத்தின் மீதுள்ள செய்தியை மனதின் உணர்வை பார்க்கத் தவறினார்கள் என்றால், அவர்கள் இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதன் காரணமாகவும், அவற்றின் பொருள்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மூழ்கி விட்டதன் காரணமாகவே.
                                                          நோய்களிலும், துன்பங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெரும்பான்மையினரான அனைத்து மக்களும் சிந்தித்து உணராத மக்களாகவே இருக்கின்றனர். இத்தகைய மக்களை வரும் காலத்தினர் ஒருபோதும் பின்பற்றக் கூடாது. மருத்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நேற்று வரையில் மருத்துவர்களுடைய அறிவு எதுவாக இருந்ததோ, அந்த அறிவைத் தவிர அவர்கள் எதனையும் பின்பற்றவில்லை. அந்த மருத்துவர்களுடைய உள்ளங்களிலும் ஒவ்வொரு நோயாளியையும் பார்க்கும் பொழுதெல்லாம்,' இது ஏன் வந்தது? எப்படி குணமாக்க வேண்டும்? யாரால் குணமாக்க முடியும்?' போன்ற கேள்விகள் எல்லாம் நாளைய வாழ்க்கையினுடைய ரகசியத்தினுள் அவர்களை ஈர்க்கும் விதமாக எழுப்பப் படுகின்றன. என்றாலும், அந்தக் கேள்விகளை அந்த மருத்துவர்களுடைய மனங்கள் அலட்சியமாக நீக்குகின்றன. 'தனக்கு எல்லாம் தெரியும்' என்ற அகம்பாவம் அவர்களுக்குள் நிரம்பியிருக்கிறது. ஆனால், நோயாளிகளாகிய நாம் அவர்களைப் பற்றி அறிய வேண்டும். நிச்சயமாக அவர்களுக்கு நோயைப் பற்றியோ, நோய் நிவாரணத்தைப் பற்றியோ, மேலும் நோய் குணமாக்குதலைப் பற்றியோ எந்த அறிவும் அவர்களுக்கு இல்லை என்று
                                                           எனினும், தங்களுடைய கற்பனைகளைக் கொண்டு நோய்களுக்குக் காரணம்' இவை இவை' என்று வர்ணிக்க ஆரம்பிப்பார்கள்.கண்டிப்பாக இவர்களுடைய நோய் அறிதலுக்கும், அவர்களுடைய கூற்றுகளான நோய்களுக்கான காரண காரியங்களும் பொய்களும், மாயைகளுமாக இருக்கின்றன என்பதை உலக மக்கள் இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு சிறு நோயும் பெரும் நோய்களாக, இன்னும் பலதரப்பட்ட நோய்களாக இம்மருத்துவர்களின் மருந்துகளின் காரணமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் படைக்கும் சக்தியற்றவர்கள். எனவே, இவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ள எந்த உறுப்புக்கும் உயிரோட்டம் அளிக்க முடியாது. ஏனெனில், உயிரைப் பற்றி எந்த மருத்துவருக்கும் தெரியாது. ஆனால், இவர்கள் தங்கள் மருந்துகளைக் கொண்டு இருக்கும் உயிரோட்டத்தை அழிக்க முடியுமே தவிர, நோய்களை நீக்குவதற்காக புதிய உயிரோட்டத்தை ஒருக்காலும் படைக்க முடியாது. இந்த எச்சரிக்கையும, இதற்கு பின்னணியிலான நன்மையை விளைவிக்கும் மறைவான இறைச் செய்தியை எந்த மனிதர் நம்பிக்கை கொள்கிறாரோ, அவரே அவருக்கு சிறந்த மருத்துவராக இருக்க முடியும்..
                               ஒருவர் நோயினால் துன்பப் படுகிறார் என்றால், அந்த துன்பத்தை அனுபவிப்பவர் அவர் மட்டுமேதான். அவரைத் தவிர அந்தத் துன்பத்தினுடைய அளவீட்டை வேறு எவரும் மதிப்பிட முடியாது. உணர்ந்து விடவும் முடியாது. நோயின் துன்பம் உணரக் கூடியதே தவிர, அந்த உணர்வும் கூட துன்பப்படுபவர் மட்டும்தான் அறிய முடியுமே தவிர, அதன் தன்மையை பரிசோதனைக் கருவிகள் அறிந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்களே, இவர்களுக்கு துளியளவு சிந்தனையும் இல்லாமல் ஆகி விட்டது. மறைவானவற்றின் நாளைய நற்செய்தியை, இறைச் செய்தியை இவர்கள் உணராததற்குக் காரணம், தங்களை ஏதோ ஒரு கூட்டமாகப் பார்க்கிறார்களே தவிர, ஒரு கூட்டத்தினரையும், பிரிவினரையும் சார்ந்தவர்களாக பார்க்கிறார்களே தவிர,  இறைவன் படைத்துள்ள தனித்துவம் வாய்ந்த மனிதனாக பார்க்கவில்லை.'இவர்கள் தனித்துவம் வாய்ந்த மனிதர்களாக வாழ வேண்டும்' என்பதுதான் இறைவனுடைய விருப்பம் என்றாலும், தங்களுடைய முன்னோர்களையும், மூதாதையர்களையும் வழிபட்டவர்களாக மாபெரும் இறை ஆற்றலை சடங்குகளுக்கு உட்படுத்திக் கொண்டு, அதன்  சத்தியத்தையும், மாபெரும் சக்தியையும் சிந்தனையிலிருந்தும் தவற விட்டார்கள். தங்களை மதங்களைச் சார்ந்தவர்களாக ஆக்கிக் கொண்டதன் காரணமாக, மனிதர்களாக இன்னும் மாறவே இல்லை. மனிதனாக மாறும் பொழுது, மனிதன் என்று கூறுவோமே தவிர, மனிதர்கள் என்று கூற மாட்டோம். இறைவன் மனிதனைத்தான் படைத்தானே தவிர, மனிதர்களைப் படைக்கவில்லை. நாமும் மனித சமுதாயத்தை 'மனிதன்' என்றுதான் அழைப்போமே தவிர, 'மனிதர்கள் சமுதாயம்' என்று அழைக்க மாட்டோம். அவ்விதமாகவே தனித்து, அவனைப் படைத்த இறைவனாகிய தன்னை மட்டுமே வாழ்நாளின் ஆரம்பம் முதலாக இறுதி வரையிலும் நம்பி வாழ வேண்டித்தான் மனிதனின் மனதை இறைவன் அமைத்திருக்கிறான். அப்பொழுதுதான் அவன் தன் மனதில் இருக்கக் கூடிய 'சத்தியம்' கொண்டுள்ள மறைவான இறைச் செய்தியை தன்னுடைய ஒரே தேவையாகக் கொண்டு நாளைய வாழ்க்கையினுடைய சீரிய பாதையில் வழி நடக்க முடியும்; நம்பிக்கையும் பெற முடியும்.
                           இந்த நம்பிக்கைதான் ஒவ்வொரு தனி மனிதனையும் இறைவனோடு நெருக்கமாக்கி விடும். அதாவது, இறையுணர்வோடு இயங்கச் செய்யும். அவர்களுடைய சிந்தனைச் சக்தியின் சூழ்நிலைகள் அவர்களைச் சுற்றிலும் விசாலமாகும். மறைவான நன்மை பொதிந்துள்ள, அழகான ஆசீர்வாதமாக ஒவ்வொரு தனித்தனி மனிதனுடைய உள்ளத்திலும் அவர்கள் இறைவன் அமைத்திருக்கக் கூடிய சத்திய வாக்குகளின் பக்கம் கவனம் முற்றிலுமாகத் திரும்பி விடும். இது இறை பாக்கியங்களில் உள்ளது. கவனம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. எவர் தனித்தன்மையுடன் மனிதனாக உயர்ந்து விளங்க விரும்புகின்றாரோ, அவருக்கே இந்த கண்ணியமிக்க பாதையான கவனத்தை அருள் செய்கின்றான், அவர்களுடைய இறைவன்.
                                             கவனத்தின் காரணமாகவே புதிய ஆற்றல் கொண்ட பாதை நல்லறிவாகவும், புத்தம் புதிய ஞானங்களாகவும் மலர்கின்றது. ஒவ்வொரு நோய்க்கும், துன்பங்களுக்கும் நாம் உள்ளாகியுள்ள நிலையில் அவை ஒவ்வொன்றிலிருந்தும் நிவாரணம் பெற்று விடுபடுவதற்கான நல்லறிவு மலர்ந்துள்ள அந்த கவனத்தின் மூலமாக ஈர்க்கப் படுகின்றது. இவ்விதமாக, கவனம் ஈர்க்கக் கூடிய ஒவ்வொரு நல்லறிவும் நோய்களை உடலிலிருந்தும், உடல் உறுப்புக்களிலிருந்தும் வீசியெறியக் கூடிய 'மகாசக்தி' உடையதாகும். இது இறையாற்றலில் உள்ளது. இறைவன் தான் நாடியோருக்கு இதனை அருள்கிறான். இந்த இறை நாட்டத்திற்குரியோர் மேற்சொன்ன தகுதியைக் கொண்டு, தன்னை மனிதனாக யார் அமைத்துக் கொண்டிருக்கின்றாரோ, அத்தகையோர்தான்.
                                               எனவே, மனிதர்களே, மதங்களிலிருந்தும், பிரிவினை சமுதாயங்களிலிருந்தும், முன்னோர்களும், மூதாதையர்களும் வழிப் பட்ட பாதையிலிருந்தும் முற்றிலுமாக விலகியவர்களாக இறைவனையே சார்ந்து விடுங்கள். மனிதனாக ஆகி விடுங்கள்.'மனிதனுக்கு மதங்கள் கூடாது' என்ற இறை சத்தியத்தை உள்ளத்தில் தீர்க்கமாக நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களுடன் இறைவன் இருக்கின்றான்' என்றும் சத்தியமாக ஆறுதல் அடையுங்கள்.
                                             '’இறைவன் உங்களுக்கு முன்பாக உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றான்' என்பதை நீங்கள் உணர வேண்டும். யாவருக்கும் முந்தியவன் அவன்தான். அவனை வழிபடக் கூடியவர்களாகிய நாம் பணிவுடையவர்களாக, மறு உலக வாழ்க்கைக்கு வழிகாட்டியான அவனுடைய ஞானங்களுக்காக பொறுமையைக் கொண்டு வாழ வேண்டும். இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இறைவன் மன்னிப்பவன்; மன்னித்தும் விட்டான். எனவே, இப்பொழுதும் நம்முடைய மனதில் இறைவனுடைய தனித்தன்மை வாய்ந்த வாக்கு அருளாக இருக்கிறது. அதாவது ' எந்தக் கவலையும் வேண்டாம். பயப்படவும் செய்யாதீர்கள்: நம்பிக்கை கொள்ளுங்கள், சுகமாவீர்கள்.இன்னும் பொறுமையை மேற்கொள்ளுங்கள், தூய்மையாளர்களாகவும் ஆவீர்கள். உங்களுடைய சுகமும், தூய்மையும், உங்களுடைய உடலுக்கும், மனதுக்கும் பேராற்றலைக் கொண்டு வாழ வைக்கும். இதில் சந்தேகமும் வேண்டாம். உங்களுடைய மனம் பலவீனம் ஆகி விடும். உங்களுடைய ஆற்றல் இவ்விதமாக செயலிழந்து விட வேண்டாம். உங்கள் இறைவனிடம் பிரார்த்தனையை இவ்விதமாக மேற்கொள்ளுங்கள்.
                                             "எங்கள் இறைவனே, வானங்களும், பூமியும் அடங்கிய உலகத்தில் நீ எங்களை படைத்திருக்கிறாய். நீயே இவ்விரண்டிலும் வாழ்க்கை காலம் முடிய வழிநடத்துபவனாக இருக்கின்றாய். உன் ஒருவனைத் தவிர மனிதர்களின் தனித்தனியான தன்மை வாய்ந்த நாளைய வாழ்க்கையை எவரும் அறிய மாட்டார். எங்களுக்குப் பணிவையும் கொடு. உன்னை வழிபடக் கூடிய பாதையையும் அறிவிப்பாயாக. பூசாரிகளையும், மருத்துவர்களையும் எங்கள் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக அகற்றி விடுவாயாக. ஞானங்களைக் கொண்டும், உன்னுடைய அருளாக இருக்கக் கூடிய மகாசக்தியைக் கொண்டும் அகிலங்களின் முன்மாதிரிகளாக எங்களை வாழ வைப்பாயாக. எங்கள் சமுதாயங்களிலும் உன்னை யார் இவ்விதமாக ஏற்றுக் கொள்கின்றார்களோ, அவர்களுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக. நிச்சயமாக நீயே யாவற்றையும் அறிந்தவன். உன்னுடைய தீர்பபே எங்களுடைய வாழ்க்கை. உனக்கு இனணயாக வேறு எந்த வழியையும் ஏற்றுக் நடக்கும் வழிகேடுகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பவனும் நீயே. நிச்சயமாக நாங்கள் உன்னைக் கொண்டு பாதுகாப்பும் பெற்றோம். ஆறுதலும் அடைந்தோம். சத்தியத்தின் பாதையையும் ஏற்றுக் கொண்டோம்."

                                                                  நன்றி: ஹெல்த் டைம் ஜூன் 2015                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக