எண்ணம் போல்
வாழ்வு.மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழி நடத்துகின்றன.நமது ஆழ் மனதில் பதியும்
எண்ணங்களே நம்மை வாழ்வின் சிகரத்திற்கு கொண்டு செல்வதும்,நம்மை அதல
பாதாளத்திற்கு கொண்டு செல்வதும்! இந்த
பிரபஞ்சத்திலேயே உயர்ந்த படைப்பான மனிதனுக்கும், விலங்களுக்கும் உள்ள வித்தியாசமே மனம் என்ற
அமைப்புதான்.
மனம்
என்ற அமைப்பை பற்றி நமது வேதங்களும், ரிஷிகளும் ,முனிவர்களும்
மற்றும் சான்றோர்களும் ஏராளமாக போதித்திருக்கிறார்கள்.திருவண்ணாமலையைச் சேர்ந்த
சான்றோர்.இரமண மகரிஷி அவர்களும் மனதில் அமைதியை பெற வேண்டும் என்பதற்கு
"சும்மா இரு" என்ற மந்திரத்தை அருளிச் சென்றுள்ளார்கள்.மேலும் நமது
சமகாலத்தில் வாழ்ந்து நமக்கெல்லாம் மனம் என்றால் என்ன ? எண்ணங்கள்
எவ்வாறு மனதில் தோன்றி பிரவாகமாக ஓடி மறைகின்றன என்பதனை பற்றி ஏராளமான புத்தகங்கள்
எழுதி அருஞ் சேவையாற்றிக் கொண்டிருக்கும் திருச்செந்தூரைச்
சேர்ந்த ஸ்ரீ பகவத் அய்யா அவர்களும் மனம் என்பதனைப்
பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆனால் இந்த
மனம் என்ற அமைப்பு உடலில் எங்கிருக்கிறது? இதயத்திலா?மூளையிலா? என்றெல்லாம் ஆங்கில மருத்துவம் ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கிறது.
இப்படிப் பட்ட
மனதின் அமைப்பில் எவ்வாறு உறுதியோடு இருந்தால் எவ்வாறு எத்தகைய மோசமான உடல்
நிலையையும் மீட்டெடுக்கலாம் என்பதனை பற்றி அக்குபங்சர் ஹீலர்.உமர் பரூக் அவர்கள்
எழுதிய கட்டுரை நம் மனதின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டி இங்கு வெளியிடப்
பட்டுள்ளது.
மனம் என்னும் மாமருந்து
-ஹீலர்.அ.உமர் பாரூக்-
1981ஆம் ஆண்டில் அமெரிக்க விமானத்தை
இயக்கிக்கொண்டிருந்த மோரீஸ் விபத்தில் சிக்கிக்கொண்டார். விமானம் வெடித்ததில்
அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் பலர் மரணமடைந்தனர். கடும் காயங்களுடன்
சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட பைலட் மோரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய முதுகெலும்பு, கழுத்தெழும்புகள் முறிந்திருந்தன.
உதரவிதானம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சுவாசிக்க முடியவில்லை. தொண்டை கடுமையான
காயங்களுக்கு ஆளானதால் தண்ணீர் குடிக்கவும், விழுங்கவும்
முடியவில்லை. உடல்முழுதும் எழும்புகள் முறிந்தும், தசைகள் செயல் இழந்தும் இருந்தன. சுயமாக கண் விழிகளை இமைக்க மட்டுமே
முடிந்த அவருடைய உடல் இனி உயிர் வாழத் தகுதியற்றது என்று மருத்துவர்கள் முடிவு
செய்தார்கள். ஏராளமான கருவிகள் அவர் உடல் முழுவதும் பொருத்தப்பட்டு ”இப்படியே தொடரலாம்; ஆனால் இமைப்பதைத் தவிர அவரால் வேறொன்றும்
செய்ய முடியாது” என்று கூறி மருத்துவம் அவரைக் கைவிட்டது.
இப்போது எல்லோரையும் போல ஆரோக்கியமாக வாழ்ந்து
கொண்டிருக்கும் மோரீஸின் பெயர் மோரீஸ் குட்மேன். மரணத்திலிருந்து மருத்துவத்தின்
உதவியின்றி தப்பிவந்த அதிசய மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இப்போது அவருடைய
முழுநேர வேலை தான் உணர்ந்த மனதின் ரகசியங்களை அனைவருக்கும் கற்றுத்தருவதுதான்.
உடலை இயக்குவதில் மனம் பெரும் பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்ட மோரீஸ் குட்மேன் தன்
மன இயக்கத்தை உணர்ந்து கொண்டதன் மூலம் உடல் இயக்கத்தை சீராக்க உதவினார்.
மருத்துவர்களால் தேற்ற முடியாது என்று கூறப்பட்ட சில மாதங்களிலேயே முழு
ஆரோக்கியத்திற்குத் திரும்பினார். ”என்னை
மருத்துவர்கள் கைவிட்டார்கள். ஆனால் மனம் என் வசம் இருந்தது. என்னால் சிந்திக்க
முடிந்தது. என்னைப்பற்றி மருத்துவம் என்ன நினைத்தது என்பதை விட என்னைப் பற்றி நான்
என்ன நினைத்தேன் என்பதுதான் முக்கியமானது. உங்கள் மனம் உங்கள் கைவசம் இருந்தால்
நீங்கள் செய்ய முடியாதது எதுவுமில்லை.” என்று
கூறும் மோரீஸ் குட்மேன் இப்போது உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கை உரையாளர்களில்
ஒருவர்.
இதே போன்ற அற்புத மனிதர்தான் அயர்லாந்தில்
பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த
டாக்டர்.ஜோசப் மர்பி. உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த மர்பி தன் இளம் வயதில்
தெற்காசிய நாடுகளின் மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். உளவியல்
சார்ந்த புதிய கருத்துக்களை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தோல்
புற்று நோயால் பாதிக்கப்பட்டார். உடலைப் பற்றிய கவனமின்றி அவர் தொடர்ந்து
கொண்டிருந்த ஆராய்ச்சியின் இறுதியில் டாக்டர்.மர்பி கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளில்
ஒருவராக மாறினார். அவர் தன்னுடைய உடலை கவனிக்கத்துவங்கிய போது தோல் புற்றுநோய்
முற்றிய நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
புற்றுநோய் படிப்படியாக மோசமான நிலையில்
பாதிரியார் ஒருவரைச் சந்தித்தார் மர்பி. அவர் கூறினார் “ ஒரு கைக்கடிகாரத்தை ஒருவர் உருவாக்குகிறார்
என்றால் அது உருவாக்கப்படுவதற்கு முன்பு அதைப்பற்றிய தெளிவான எண்ணம் அவருக்கு
இருந்திருக்கும். அதே கடிகாரம் பின்னால் பழுதடைந்தாலும் அந்த தெளிவான எண்ணத்தால்
அதை அவரால் சரியாக்கிவிட முடியும் அல்லவா?” இந்த
உவமை மர்பிக்கு மனதைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது. மனது உடலின் இயக்கத்தில் பெரும்
பங்காற்றுகிறது என்றால் மனதின் தெளிவு உடலின் தெளிவாக மாறும் என்பதை டாக்டர்.மர்பி
உணர்ந்தார். மூன்றே மாதங்களில் எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல்
புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்பி. ”புற்றுநோய் எப்படி குணமானது என்பது என்
மருத்துவருக்கு வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். ஆனால் என் மனதைப் பொறுத்த வரை
குணமாதல் என்பது இயல்புதான்” என்கிறார்
டாக்டர்.மர்பி. அவருடைய முப்பதிற்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன
உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன. இப்போது நவீன உளவியல் கொள்கையை உலகம்
முழுக்க கொண்டு சேர்க்கிறார் மர்பி.
என்னதான் நடக்கிறது நம் உடலில்? உடலுக்கும் மனதுக்கும் அப்படி என்ன தொடர்பு?
உடல் என்பது தன்னைத்தானே தகவமைத்துக்
கொள்ளும் ஒரு அற்புத உயிரமைப்பு. அதிலும் மனித உடல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களை
விடவும் பரிணாம வளர்ச்சியின் உச்ச கட்டமாகத் தோன்றிய உயிரினம். டார்வினின்
பரிணாமக் கொள்கை பேசும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று தகவமைப்பு. புறச்
சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு நம் உடல் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. புற
மாற்றங்களின் போதும், நம் நடவடிக்கைகளின் போதும் உடலில்
உருவாகின்ற கழிவுகளையும் உடலே வெளியேற்றுகிறது. இப்படி வெளியேற்றும் போது உடல்
உள்ளுறுப்புகளில் தோன்றும் பலவீனத்தையும் உடலே சரிசெய்து கொள்கிறது. அது
மட்டுமல்ல. தனக்குத் தேவையான ஒவ்வொன்றையும் (வைட்டமின், மினரல், கால்சியம்..இன்ன
பிற சத்துக்கள்) தனக்கு கிடைக்கிற சாதாரண உணவுகளில் இருந்தே உருவாக்கிக்
கொள்கிறது. நாம் வெளியில் இருந்து உடலுக்கு கொடுக்கும் செயற்கை சத்துக்களுக்கும்
உடலே உருவாக்கிக் கொள்ளும் இயற்கை சத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ரசாயனத்தால் செய்யப்பட்ட செயற்கை சத்துக்களை உடல் கழிவுகளாக மட்டுமே பார்க்கிறது.
இதையெல்லாம் கடந்து உடலுடைய நிறைவான வேலை
உள்ளுறுப்புகளை மறு உருவாக்கம் செய்வது. உடலின் ஒவ்வொரு செல்லையும் அதனுடைய ஆயுள்
முடிந்தவுடன் புதிய செல்களாக மாற்றுகிறது நம் உடல். உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்பும் குறிப்பிட்ட
காலத்தில் முழுமையாக புதிதாக்கப் படுகிறது. சரி. அப்படி உடல் புதிதாக்கப்பட்டால்
குறிப்பிட்ட காலத்தில் உடலில் உள்ள எல்லா நோய்களும் மறைந்து விட வேண்டும் அல்லவா? அப்படியென்றால் உலகில் எல்லோருக்குமே
நோய்கள் சரியாகிவிட வேண்டுமே? இங்கேதான்
நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உடலுடைய புதுப்பிப்பு பணி என்பது இயல்பாக
நடந்து கொண்டேயிருக்கும். உடலுடைய இயல்பான இயற்கையான புதுப்பிப்பு இயக்கத்தில்
யாரெல்லாம் குறுக்கிட வில்லையோ அவர்களுக்கெல்லாம் நோய் தானாக சரியாகிவிடும்.
இயக்கத்தில் குறுக்கிடுவது என்றால் என்ன? உடலின்
கழிவு வெளியேற்றத்தை தடை செய்வது. ரசாயன மருந்துகளை சாப்பிடுவது. செயற்கை
சத்துக்களை உண்பது போன்றவைதான் நம் குறுக்கீடுகளாகும். அது மட்டுமல்ல; உடலின் இயல்பான தேவைகளான பசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்றவற்றை புறக்கணித்து நம்
இஷ்டம்போல் செய்வதும் குறுக்கீடுதான். பசிக்கிற போது சாப்பிடாமல் பசியில்லாத போது
சப்பிடுவது, பசிக்கிற அளவை விட அதிகமாகச் சாப்பிடுவது, தாகமில்லாமல் லிட்டர் லிட்டராக தண்ணீர்
அருந்துவது, தாகமிருக்கும் போது தண்ணீர் அருந்தாமல்
இருப்பது அல்லது தண்ணீருக்குப் பதிலாக சுவையூட்டப்பட்ட பானங்களை அருந்துவது, இரவுகளில் தூக்கத்தை புறக்கணிப்பது, ஓய்வு தேவைப்படும் போது உடல் உழைப்பை
அதிகப்படுத்துவது போன்றவை எல்லாம் நம்முடைய தினசரி நடவடிக்கைகளாக உள்ளன. இப்படி
இயற்கைக்கு மாறான நடவடிக்கைகள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதிக்கின்றன.
ஆரோக்கியமாக உருவாக வேண்டிய செல்கள் பலவீனமாக, பழைய
நோய்க்கூறுகளுடன் உருவாகின்றன. ஆக நம்முடைய எல்லா தொந்தரவுகளுமே உடலுடைய இயல்பான
இயக்கத்துக்கு கட்டுப்பட்டவை. அவை புறச்சூழல்களுக்கு ஏற்றாற்போல் தானாகத் தோன்றி
தானாக மறைபவை. நம்முடைய பொறுப்பான குறுக்கீடுகளால் நோய்களாக உடலில் தங்கி
விடுகின்றன.
மனதில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளும்
புறச்சூழல்களை தகவமைப்பதற்காக தானாகவே ஏற்படுபவை. அவற்றை நாம் சரிசெய்ய
வேண்டியதில்லை. அப்படி சரிசெய்கிறோம் என்ற போர்வையில் மனதின் இயக்கத்தில் நாம்
குறுக்கிடுகிற போது உணர்ச்சிகள் தங்கிவிடுகின்றன. கால நீட்சியடைகின்றன. ஆக மனதும், உடலும் வெவ்வேறானவை அல்ல. இரண்டின் இயங்கு
முறைகளும் ஒரே மாதிரியானவைதான். நாம் உடலின், மனதின்
மாறுதல்களை வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமே அதனுடைய தீர்வாக அமையும். மனதைப்
பொறுத்த வரை அமைதியடைகிறது. உடல் தன் ஆரோக்கியத்தை அடைகிறது.
அதெல்லாம் சரி. இப்படி இயற்கையான முறையில்
வாழ்வதால் நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே வந்து விட்ட
நோய்களை என்ன செய்வது? ஏற்கனவே இருக்கின்ற தொந்தரவுகள் என்பவையும்
உடலால் செய்யப்படுகின்ற தகவமைப்பு வேலைதான். அதற்காக புதிதாக ஒன்றும்
செய்யவேண்டியதில்லை. உடலை அதன் போக்கில் அனுமதிப்பதோடு, இயற்கையான வாழ்வியல் முறைக்குத்
திரும்புவதுதான் ஆரோக்கியம் பெற ஒரே வழி.
இந்த முறைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் முன்பு
நாம் பார்த்த மோரீஸ் குட்மேனைப் போலவோ, மர்பியைப்
போலவோ அற்புத குணங்களைப் பெற முடியுமா? அப்படி
பெற வேண்டுமானால் மேற்கண்ட விஷயங்களை கடை பிடிப்பது மட்டுமின்றி மனதின்
இயக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மனதின் இயல்பை புரிந்து கொள்வதன் மூலம்
உடலின் முழு சக்தியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை அமெரிக்க
மரபியல் விஞ்ஞானி டாக்டர்.புரூஸ் லிப்டனின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நிரூபித்து
வருகின்றன. நம் உடலின் செல்கள் மட்டுமல்ல அதற்குள் உருவாகும் ஜீன்களும் கூட நம் மன
இயல்புக்கு கட்டுப்பட்டவை என்பதுதான் மரபியலின் இன்றைய கண்டுபிடிப்பாகும்.
நம் உடலுடைய முழு சக்தியையும்
தொந்தரவுகளின் பக்கம் திருப்பி எவ்வாறு நாம் ஆரோக்கியத்தைப் பெறுவது என்பதைப்
பார்ப்போம்.
நம் உடலின் ஆரோக்கியத்தை நிலைப்படுத்துகிற
வேலையை பராமரிப்பு சக்தி
(இதைத்தான் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தி
என்று அழைக்கிறார்கள்) செய்து வருகிறது. நம் உடல் செல்களில் புறச்சூழல் காரணமாக
ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளை பராமரிப்பு சக்தி சமநிலைப் படுத்துகிறது. இந்த
பராமரிப்பு சக்தியின் ஒரே வேலை சமநிலைப் படுத்துவதுதான். சமநிலைப் படுத்துவது
என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; மனம்
சார்ந்ததும் தான். நம் உடலின் பராமரிப்பு சக்தி மனச் சமநிலை தவறினாலும், உடல் சமநிலை தவறினாலும் அதை
சமப்படுத்துகிறது.
உடல் சமநிலை தவறுவது என்பது தகவமைப்பு வேலை
நடைபெறும் போது நமக்கு ஏற்படும் தொந்தரவுகள் தான் என்பது புரிகிறது. ஆனால் மனச்
சமநிலை தவறுவது என்றால் என்ன?
மனச்சமநிலை தவறுதல் என்பது உணர்ச்சிவசப்
படுவதைத்தான் குறிக்கிறது. உணர்ச்சிகள் என்பவை புறச் சூழல்களால் தானாகத் தோன்றி
தானாக மறைபவை. அதாவது மனதுடைய தகவமைப்பு. அப்படி தானாகத் தோன்றுகிற உணர்ச்சிகளை
சரிசெய்கிறோம் பேர்வழி என்று நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளும் போது அந்த
உணர்ச்சிகள் நிலைத்து விடுகின்றன. இதைத்தான் கிராமங்களில் உணர்ச்சி வசப்படுதல்
அல்லது ”உணர்ச்சியின் வசம் நாம் போய்விடுவது” என்று கூறுவார்கள்.
ஒரு தொந்தரவு ஏற்படுகிற போது பராமரிப்பு
சக்தி உடலை சமநிலைப்படுத்த தயாராகிறது. நம் உடலில் தொந்தரவுகள் ஏற்படுகிற போது நம்
மனநிலை என்னவாக இருக்கும்?
இது கேன்சராக
இருக்குமோ? இது சர்க்கரையாக இருக்குமோ? என்ற பயம் ஏற்பட்டு மனப்பதட்டம் வந்து
விடுகிறது. இந்த பய உணர்ச்சியை நாம் நொடிக்கு நொடி புதுப்பித்துக் கொள்கிறோம்.
இப்போது மனச்சமநிலையும் குலைந்து விடுகிறது. உடலில் ஏற்படும் ஒரு தொந்தரவு
அதைப்பற்றிய நம் புரிதல் இன்மையால் மனச் சமநிலையையும் பாதிக்கிறது. இப்போது
பராமரிப்பு சக்தி என்ன செய்யும்?
இப்படி பராமரிப்பு சக்தி உடலையும், மனதையும் சமப்படுத்த இரண்டாகப் பிரிகிறது.
பொதுவாக பராமரிப்பு சக்தி உடலை விட மனதிற்குத் தான் அதிக முக்கியத்துவம்
அளிக்கிறது. உடல் பாதிப்பு எந்த அளவில் இருந்தாலும், மனபாதிப்பின் தன்மையைப் பொறுத்துத்தான் பராமரிப்பு சக்தி வேலை
செய்கிறது. மனச்சமநிலை தீவிரமான அளவு பாதிக்கப்பட்டிருந்தால் உடல் ஆரோக்கியத்தை
இரண்டாம் பட்சமாகக் கருதி மனதை நிதானப் படுத்தும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்கிறது பராமரிப்பு சக்தி.
இந்த பராமரிப்பு சக்தியை நாம் உடலை நோக்கி
முழுமையாகத் திருப்பி விட்டால் என்ன நடக்கும்? உடல்
உள்ளுறுப்புக்களின் தகவமைப்பு மிக வேகமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்திற்குத்
திரும்பும். ஆனால் அப்படி எவ்வாறு உடலை நோக்கித் திருப்பி விடுவது?
மிகச் சுலபம்தான். உடலுடைய சமநிலக்குலைவு
என்பது இயற்கையானது. அதனை நம் முயற்சியால் மாற்ற இயலாது. மாறாக அது உடலின்
தகவமைப்பு தான். கழிவுகளின் வெளியேற்றம் தான் என்பதை நாம் அறிவுப்பூர்வமாக
புரிந்து கொண்டால் என்ன நடக்கும்? உடல்
சமநிலைக்காக புரிதலோடு காத்திருப்போம். இப்போது மனநிலையின் தன்மை என்னவாக
இருக்கும்? உடல் மாறுதல்கள் இயற்கையானவை என்று
புரியும் போது மனம் சமநிலை தவறுவதில்லை. அதைப்பற்றிய பயம் ஏற்படுவதில்லை. ”என்னுடைய உடல் என்னை சரி செய்து
கொண்டிருக்கிறது” என்பதை நம்மால் உணர முடியும். இப்போது
பராமரிப்பு சக்தி நூறு சதமும் உடலை நோக்கி திருப்பிவிடப்படுகிறது. உடல் மிக வேகமாக
தன்னைத் தகவமைத்துக் கொண்டு, புதுப்பித்துக்
கொள்கிறது. மோரீஸ் குட்மேனைப் போலவும், டாக்டர்.மர்பியைப்
போலவும் எல்லோராலும் புரிதலால் நோய்களை வெல்ல முடியும்.
உடல் ஆரோக்கியத்தில் நம்முடைய பங்கு என்பது
அதனைப் புரிந்து கொள்வதுதான். அதனுடைய இயக்கங்களில் குறுக்கிடுவது அல்ல. இயற்கையான
பழக்கவழக்கங்கள், உடலைப் பற்றிய புரிதல் ஆகியவை மனிதகுல
ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சங்கள். இவற்றைத் தவற விடுகிற மருத்துவங்களால்
உடல் நலத்தை மீட்க முடியாது.
---------- --------
(பகவத் பாதை இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)
நன்றி -ஹீலர்.அ.உமர் பாரூக்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக