இறைவன
யார் என்பதிலும் , இறைவன் எங்கிருக்கிறான் என்பதிலும் மனிதர்களிடையே ஏராளமான கருத்து
வேறுபாடுகளும் , மாறுபாடுகளும், முரண்பாடுகளும்
இருக்கின்றன! இறைவன் தூணிலிருக்கிறான்,துரும்பிலிருக்கிறான்.இறைவனின்றி ஓரணுவும்
அசையாது என ஆன்மீகவாதிகளும்,இறையடியார்களும் ஏராளமாக
பேச கேட்டிருக்கிறோம்.
ஆனால் இறைவன் எங்குதான் இருக்கிறான் என
மனிதர்கள் முழுமையாக உண்ர்ந்தார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.!
எனவேதான் இறைவனை கோயில்களிலும்,மசூதிகளிலும்,சர்ச்சுகளிலும் தேடிக் கொண்டும்,வழி பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
இறைவன்
படைப்பாளன் ! எதையும் முன்மாதிரியின்றி படைப்பவன்! மனிதர்களின் ஒருவர்
கைரேகையைப் போல் மற்றவர்களுக்கு இல்லாமல் வித்தியாசமாக படைப்பவன்.அதே போல குரல்,தலைமுடி,இரத்தம்,கண்கள்
என முழு மனிதனையும் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்களாக தனது ஞானத்தால் வித்தியாசமாக
படைப்பவன்.நமது அறிவாலும்,உணர்வாலும் அறியக் கூடியவனும்,உணரக் கூடியவனுமான இறைவன்
இப்பிரபஞ்சத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் இருந்து ஆட்சி
புரிபவன்.அவன்தான் நமது ஒரே இறைவன்!
நமது தேவைகளையும்,விருப்பங்களையும்
உடனுக்குடன் நிறைவேற்றும் இறைவன் அவரவர் மனங்களில்,இருதயங்களில் கோயில் கொண்டிருக்கிறான்
என்பதை மனிதர்கள் உணரவில்லை. We cannot come into physical relationship
with God, for God is mind-stuff and we also are mind-stuff; our relation with
Him must therefore be a mind relation.
இறைவன் மனிதர்களின் அகங்களில் மட்டுமே
இருக்கிறான்,எண்ணங்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்கிறான் என்பதற்கான ஒரு இறை
அத்தாட்சி இங்கு கீழே வெளியிடப் படுகிறது.
டாக்டர்.ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம்
உதவியாளராக இருப்பவரும்,டாக்டர் அவர்களின் இறைவழி மருந்தில்லா மருத்துவ கருத்தரங்குகளில்
தமிழகம் முழுவதும் கலந்து கொள்பவருமான திரு.A.S.அகமது கான் அவர்கள் உணர்ந்த இறை அத்தாட்சி
!
காணமல்
போன பெண்மணி திரும்பக் கிடைத்த மாபெரும் இறை அத்தாட்சி !
சென்ற 20 நாட்களுக்கு முன் துபாயில் வசிக்கும்
என்னுடைய சகோதரரின் மகன் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.அவர் இந்த
செய்தியைக் கூறினார்."என் கடையில் உதவியாளராக இருக்கும் முஸ்தபாவின் மனைவியை
அவருடைய ஊரிலிருந்து காணவில்லை.பலமுறை போன் செய்து பார்த்தும்,அங்குள்ள
சொந்தக் காரர்கள் வீட்டில் விசாரித்தும் எந்தத் தகவலும் இல்லை.முஸ்தபாவும் இங்கு
வருத்தத்துடன் காணப்படுகிறார். என்ன செய்யலாம் என்றும்
தெரியவில்லை.போலீஸிடம் புகார் செய்யலாமா?" என்றும் என்னிடம் கேட்டார். நான் கூறினேன்."
இறைவன் என் மனதில் உணர்த்துவது அவர் கிடைத்து விடுவார் என்று என் மனதில்
படுகிறது.ஆகவே டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் கூறிய படி இன்னும் 2 நாட்கள்
பார்க்கலாம்" என்று கூறினேன்.அவரும் சரி என்று சொல்லி போனை வைத்தார். இதற்கு
முன்பு டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம் முஸ்தபா தன் மனைவி காணாமல் போனதை
தெரிவித்து பிரார்த்தனை செய்ய சொல்லியிருக்கிறார்.டாக்டரும், கரானிலிருந்து
வசனத்தை எடுத்துக் கூறி அவர் மனதுக்கு அமைதி அளித்தார்.
11:6 இன்னும் தேவைகளை நிறைவேற்றித் தர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத
எந்த உயிரினமும் பூமியில் இல்லை.அவை வாழுமிடத்தையும்,அவை
அடங்குமிடத்தையும் அவன் அறிகிறான்.இவையனைத்தும் தெளிவான அவன் சாட்சியங்ளில்
இருக்கின்றன.
"மேற்கண்ட வசனத்தின் மீது இறைவன் சாட்சியமாக
அவன் மீதே பொறுப்பேற்படுத்தி நம்பிக்கையையும்,பொறுமையையும் மேற்கொள்ளுங்கள்" என்று
கூறினார்.
இப்படியே 2 நாட்கள் ஆகி விட்டது. 2ஆவது நாள் என்னுடைய சகோதரரின் மகன் திரும்பவும் எனக்கு போன்
செய்து "2 நாட்கள் ஆகி விட்டதே,உடனடியாக போலீஸில் புகார் கொடுத்து
விடுவோமா?" என்று திரும்பவும் கேட்டார். என் மனதிற்கு அப்பொழுதும் வேண்டாம்
என்றே பட்டது. நான் திரும்பவும் "போலீஸ் ஸ்டேஷன் போனால் தேவையற்ற கேள்விகளை
கேட்பார்கள்.அதுவும் கணவன் வெளிநாட்டில் இருப்பதால்.இன்னும் ஓரிரு நாட்கள்
பார்க்கலாமே,இப்பொழுது வேண்டாம்" என்று கூறினேன்.3 நாட்கள்
ஆகின.முஸ்தபா மிகவும் வருத்தத்தில் இருப்பதால் என்னுடைய சகோதரரின் மகன் டிக்கெட்
எடுத்து துபாயிலிருந்து இந்தியாவுக்கு அவரை அனுப்பி வைத்தார்.முஸ்தபா திருச்சி
ஏர்போர்ட்டில் இறங்கி அவரது சொந்த ஊருக்கு காரில் போய்க் கொண்டிருப்பதாகவும்
எனக்குத் தெரிவித்தார்.
அப்பொழுது என் அம்மாவை ஊரில் கொண்டு
விடுவதற்காக நான் திருநெல்வேலி சென்றிருந்த சமயம்.முஸ்தபாவுக்கு போன் செய்து
"போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போகிறீர்களா?" என்றேன்.அவர், "இல்லண்ணே,எனக்கு
குழப்பமாக இருக்கிறது.ஊர் சென்ற பிறகுதான் முடிவு செய்ய வேண்டும்." என்றார்.
அதுவரையிலும் எனக்கு திருப்தியாக இருந்தது.
என் அம்மாவை திருநெல்வேலியில் எங்கள்
வீட்டில் கொண்டு விட்டு விட்டு மறுநாள் அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம்
சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
நெல்லையிலிருந்து இரவு 7.25 மணிக்கு
கிளம்பிய ரயில் 8.40 மணிக்கு கோவில்பட்டி வந்து சேர்ந்தது.மிகவும் சோர்வாக இருப்பதால்
சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி விட்டேன்.இரவு 10.40
மணி இருக்கும்.திடீரென
விழிப்பு வந்தது.லேசாக தலையைத் தூக்கி எங்கு ரயில் நிற்கிறது என பார்ப்பதற்காக
வெளியில் பார்த்தேன்.ரயில் மதுரை ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தது.'சரி
இறங்கி போய் பால் சாப்பிடலாம்' என்று நினைத்து ஸ்டேஷனில உள்ள கேன்டீனில்
பாலை வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது,என்னுடைய சகோதரரின் மகன் என்னுடைய போனில்
தொடர்பு கொண்டு,'முஸ்தபாவின் மனைவி கிடைத்து விட்டார்' என்றும்,அவர்
மதுரையில் இருப்பதாகவும் கூறினார்.நான் "மதுரையில் எங்கே இருக்கிறார்?" என்று
கேட்ட போது,மதுரையில் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாக கூறினார்.எந்த போலீஸ்
ஸ்டேஷன் என்று கேட்ட போது,"மதுரை ரயில்வே நிலைய போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்.உடனடியாக நம்முடைய மதுரை சகோதரர்
அயூப்கான் அல்லது ரஃபி யாரிடமாவது சொல்லி மதுரை போலீஸ் ஸ்டேஷன் சென்று அவரை
அழைத்துக் கொள்ள சொல்லுங்கள்" என்றார். அப்பொழுது நான் அவரிடம்
"என்னுடைய ரயில் இப்பொழுது மதுரை ஸ்டேஷனில்தான் வந்திருக்கிறது.இப்பொழுதே நான்
போய் விசாரிக்கிறேன்" என்று கூறினேன்.அவர் "ரயிலை விட்டு
விடாதீர்கள்.முடிந்த வரை பாருங்கள்" என்றார்.ரயில் நிலைய போலீஸ் ஸ்டேஷனோ நான்
இருந்த கடைசி பெட்டியின் கோடியிலிருந்து மறுகோடியின் இன்ஜின் பக்கத்தில் இருந்தது.'ரயில்
புறப்பட்டு விடுமே' என்ற எண்ணமே இல்லாமல் பிளாட்ஃபாரம் நெடுக வேகமாக ஓடினேன்.
சிக்னலைப் பார்த்தேன்.சிகப்பு விளக்குதான்
இருந்தது.'போய் பார்த்து விட்டு வந்து விடலாம்' என
மனதில் நினைத்துக் கொண்டு இன்னும் வேகமான ஓடினேன். ஸ்டேஷைக் கண்டு பிடிப்பதற்குள்
ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகி விட்டன.அங்கு சென்று பார்த்தால் போலீஸ் ஸ்டேஷன்
இயங்குவது ரயில் நிலையத்தின் முதல் மாடியில் என்றார்கள்.என்ன செய்வது ! போலீஸ்
ஸ்டேஷன் முதல் மாடிக்கு என்னுடைய ரயில் நிற்கிறதா? போகிறதா என்று பார்க்க முடியாது.ஆகவே
முன்பதிவு கோச்சிலிருந்து இறங்கி டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம்," நான்
முதல் மாடி போலீஸ் ஸ்டேஷன் போகிறேன்.தாங்கள் தயவு செய்து ரயில் கிளம்பினால் ஒரு
சத்தம் கொடுங்கள்.நான் கீழே வந்து விடுகிறேன்." என்று அவசரமாக சொல்லி விட்டு, படிக்கட்டுக்களில்
ஏறி முதல் மாடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றேன்.அங்கு அறையில்
ஒருவருமே இல்லை.அடுத்த அறைக்குள் எட்டிப் பார்த்த போது, அங்கு
ஒரு போலீஸ்காரர் அரைத் தூக்கத்தில் இருந்தார்.அவரிடம் விபரத்தை கூறிய போது, "இங்கு
அப்படி எந்தப் பெண்ணும் வரவில்லையே சார்,நீங்கள் வேண்டுமானால் உள்ளே போய் பாருங்க"
என்று மற்றொரு அறையைக் காட்டினார்.உள்ளே போய் பார்த்தால் அங்கு யாருமே
இல்லை.அவருக்கு நன்றி கூறி விட்டு அங்கிருந்து கீழே இறங்கி என்னுடைய S 12 கோச்சை
நோக்கி 'ரயில் புறப் பட்டு விடக் கூடாதே' என்று ஓட ஆரம்பித்தேன்.நடை மேடையில் பாதி
தூரத்தில் வந்த போது,ஒரு இடத்தில் யாரையோ சூழ்ந்து ஒரே கூட்டமாக நின்று கொண்டிருந்தது
தெரிந்தது. என்னவென்று பதட்டத்துடன் நானும் அந்த கூட்டத்தை விலக்கிப் பார்த்தால்
அங்கு என் நண்பர் முஸ்தபாவின் மனைவி மயங்கிக் கிடக்க ஒரு நர்ஸ் முதலுதவி என்ற
பெயரில் என்னமோ செய்து கொண்டிருந்தார்.அவர் அருகில் 2 பெண்
போலீஸ் மற்றும் 2 ஆண் போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள்.
நான்
அவர்களிடம் இவர் என் நண்பருடைய துணைவியார்.இவரை எனக்கு தெரியும் என்று சொன்னபோது," நீங்களும்
இவருடன் வந்தீர்களா?" என்று கேட்க, நான் அவரிடம் " நெல்லையிலிருந்து
சென்னை போய் கொண்டிருக்கிறேன்.எனக்கு இப்பொழுதுதான் மதுரை ஸ்டேஷனை வந்தடைந்த இந்த
நேரத்தில்தான் இவரைப் பற்றிய செய்தி போன் மூலமாக வந்தது.எனவேதான்,என்னுடைய
ரயில் சென்று விடக் கூடாதே என்று பதட்டத்துடன் ஓடி வந்திருக்கிறேன்" என்று
கூறினேன்.அதற்கு போலீஸ்காரர் கூறினார்," இவர் மயக்கத்தில் இருக்கிறார்.நாங்கள்
எவ்வளவோ முயற்சி செய்தும் இவருடைய மயக்கம் தெளிந்த பாடில்லை.ஆகவே 108க்கு
போன் செய்திருக்கிறோம்.ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது." என்றார். நான்
உடனடியாக முஸ்தபாவிற்கு போன் செய்து,"தங்களின் துணைவியாரை நான் நேரில் பார்த்து
விட்டேன்" என்று சொன்னவுடன் அவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே!"
என்று சொன்னார். ஆனால் "அவர் மயக்கத்தில்தான் இருக்கிறார்,இவர்கள்
எவ்வளவோ முயற்சி செய்தும் மயக்கம் தெளியாததால் 108க்கு போன் செய்திருக்கிறார்கள்" என்று
சொன்னதும்,முஸ்தபா "எதுவும் தேவையில்லை.ஒரு காய்ந்த மிளகாய் இருந்தால்
நன்றாக சூடு காட்டி அவர் மூக்கின் அருகில் அந்த நெடியை காட்டுங்கள்.மயக்கம்
தெளிந்து விடும்" என்றார்.அவரிடம் சரி என்று சொல்லி விட்டு இந்த நேரத்தில்
எங்கு போய் காய்ந்த மிளகாயைத் தேடுவது என்று நினைத்துக் கொண்டே கொஞ்சம் தொலைவில்
இருந்த ரயில்வே உணவு கேன்டினில் போய்"ஒரு காய்ந்த மிளகாய் இருந்தால்
தாருங்கள்" என்று கேட்டேன்.அங்குள்ளவர் என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்து
விட்டு "இப்பொழுது இரவு 11 மணி ஆகிறது சார்,கடையை
மூடிக் கொண்டிருக்கிறேன்.இந்த நேரத்தில் போய் காய்ந்த மிளகாயைக் கேட்கின்றீர்களே? என்ன
சார்? என்ன பிரச்சினை ?" என்று கேட்டார்.நான் தூரத்தில் கூட்டத்தைக்
காட்டி " அங்கு ஒருவர் மயக்கமாக இருக்கிறார்.அவரைத் தெளிய வைக்கத்தான்"
என்றேன்.
அவரும் என்னைக் குழப்பமாக பார்த்துக்
கொண்டே " எல்லாம் விற்றுப் போய் விட்டதே.காய்ந்த மிளகாய் இருக்காதே.பார்க்கிறேன்" என்று
கூறிக் கொண்டே உள்ளே சென்றார்.சற்று நேரம் கழித்து உள்ளே சென்றவர் ஒரேயொரு காய்ந்த
மிளகாய் தான் கீழே கிடந்தது" என்று நீட்டினார்.கிடைத்தது போதும்
என்று அதனை வாங்கிக் கொண்டு என் நண்பரின் மனைவி மயங்கிக் கிடக்கும் இடத்திற்கு
ஓடினேன்.
அங்கு வந்ததும் நான் உட்பட நான்கு பேர்
சேர்ந்து அவரைத் தூக்கி படுக்க வைத்தோம்.உடனடியாக பக்கத்தில் உள்ளவரிடம் சிகரெட்
லைட்டரை வாங்கி ஒரு பேப்பரில் பற்ற வைத்து,காய்ந்த மிளகாயை அதில் காட்டி அந்த நெடியை
நண்பர் மனைவியின் முகத்தில் காட்டினேன். சடேரென அந்த நொடிப் பொழுதே மயக்கம்
தெளிந்து,எழுந்து உட்கார்ந்து விட்டார்.உடனடியாக கண்களை மூடிக் கொண்டு
தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.நான் அவரிடம் "நான் அகமதுகான்
வந்திருக்கிறேன்.கவலைப் படாதீர்கள்.உங்கள் கணவர் வெளிநாட்டிலிருந்து வந்து
விட்டார்.உங்களைப் பார்க்க மதுரை வந்து கொண்டிருக்கிறார்.அழாதீர்கள்.தைரியத்துடன்
இருங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,முஸ்தபாவுடைய நண்பர்கள் 2 பேர்
அங்கு வந்து விட்டனர்.முஸ்தபாவின் நண்பர்கள் என்றும், அவர்
எங்களுக்கு போன் செய்து அவருடைய மனைவி இங்கிருப்பதை தெரிவித்த பிறகுதான்
வந்திருப்பதாகக் கூறினர்.நான் உடனடியாக மதுரை ஸ்டேஷன் பக்கத்திலுள்ள இறைவழி
மருத்துவக் கருதரங்குகளில் கலந்து கொள்ளும் சகோதரி ஒருவருக்கு போன் செய்து
விபரத்தை சொல்லி," சகோதரர் முஸ்தபா மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்.அவர் வரும் வரை
அவருடைய துணைவியாரை உங்கள் வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.அவர்கள் உங்கள்
வீட்டில் இருக்கட்டுமா? என்று கேட்ட போது,அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.நான்
முஸ்தபாவின் 2 நண்பர்களிடத்திலும், 2 போலீஸ்காரர்களிடமும் இறைவழி சகோதரியினுடைய
முகவரியைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, முஸ்தபாவின் மனைவி " நான் முஸ்தபாவின்
நண்பர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார். அந்த 2 நண்பர்களும்
" நாங்கள் அவரை முஸ்தபா வரும் வரை எங்கள் வீட்டிலேயே வைத்துக்
கொள்கிறோம்" என்று கூறினர்.அவ்விதமே, ரயில்வே போலீஸ் முன்னிலையில் முஸ்தபாவின்
மனைவியை அவருடைய நண்பர்களிடம் ஒப்படைத்து "நல்ல முறையில் சேர்ப்பித்து
விடுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,ஒரு
போலீஸ்காரர் "சார்,உங்கள் ரயில் கிளம்பி விட்டது.சீக்கிரமாக ஏறிக் கொள்ளுங்கள்"
என்றார்.எல்லான் கனகச்சிதமாக முடிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் சொல்லி வைத்தது
போல் மணித்துளி பிறழாமல் நடந்து முடிந்ததை
எண்ணும் போது பிரமித்துப் போய் விட்டேன்.
ரயிலில் வேகமாக ஓடிச் சென்று ஏறிக்
கொண்டேன்.சகோதரர் முஸ்தபாவுக்கு போனில் உங்கள் நண்பர்களுக்கு போன் செய்து "
உங்கள் மனைவியை உங்கள் நண்பர்களிடத்தே ஒப்படைத்து விட்டேன். உங்கள் நண்பர்கள்
வீட்டிற்கு சென்று பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்"என்று தெரிவித்த
பிறகுதான் நிம்மதி அடைந்தேன்.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது.என் இருக்கையில்
அமர்ந்த பொழுது நினைத்துப் பார்த்தேன்.சாதாரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையில் 10 நிமிடங்கள்தான்
நிற்கும்.ஆனால்,45 நிமிடங்கள் நின்றிருக்கிறது.அங்கு என்னுடைய தேவையும் அந்த 45 நிமிடங்கள்
முழுமையும்தான்.ஒரு நிமிடம் வீணாகாமல்,ஒரு நொடிப்பொழுதும் வீணாகாமல் ஒவ்வொரு
விஷயத்தையும் இமைப்பொழுதின் இயக்கத்தில் முடித்து வைத்தான் மாபெரும் ஆற்றல் மிக்க
அந்த இறைவன்.' யாவற்றையும் அறிந்தவன்.ஓருவர் வாழுமிடத்தையும்,அவர்
அடங்கும் இடத்தையும் நன்கு அறிந்தவன் இறைவன்' என்ற அந்த வாக்கியம் எவ்வளவு சத்தியமானது
என்று என் மனதிற்கு வந்தது.இந்த அத்தாட்சியை நமக்கும், இறைவழி
சகோதரர் முஸ்தபாவிற்கும், டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து ' விரைவில்
கிடைப்பார்' என்று சொன்ன வார்த்தைக்காக இறைவன் காட்டிய அத்தாட்சியாகவே நான்
உணர்கிறேன்.
டாக்டர் அவர்களிடம் எந்த இறை வசனத்தின்
அடிப்படையில் ' இது நிகழ்ந்தது' என்று நான் கேட்ட போது, கீழ்வரும்
வசனத்தை எடுத்துக் காட்டினார்.
11:6 இன்னும் தேவைகளை நிறைவேற்றித் தர அல்லாஹ்
பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை.மேலும்,அவை
வாழுமிடத்தையும்,அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்.இவையனைத்தும் தெளிவான
அவன் சாட்சியங்களில் இருக்கின்றன.
நம்பிக்கை கொண்டவர்களே,ஒவ்வொருவரும்
தத்தம் தேவைகளுக்கு தன்மீது பொறுப்பேற்படுத்துவோரைப் பற்றி இறைவன் இவ்வாறு
நற்செய்தி கூறுகிறான்.
3:159...சகல காரியங்களிலும் உங்களைச் சார்ந்தோரிடம்
கலந்தாலோசனை செய்யுங்கள்.பின்னர் முடிவு செய்து விட்டால்,அல்லாஹ்வின்
மீதே பொறுப்பேற்படுத்துங்கள்.நிச்சயமாக அல்லாஹ் தன்மீது பொறுப்பேற்படுத்துவோரை
நேசிக்கின்றான்.
இந்த வசனத்தை கவனிப்பீர்களானால்,"திருமதி
முஸ்தபா அவர்களை காணவில்லை.போலீசில் தெரிவிக்கலாமா?"
என்று கலந்து
ஆலோசனை செய்யப்பட்டது.பின்னர்,இது பெண் விஷயமாக இருப்பதன் காரணமாக
வேண்டாம் என்று முடிவு செய்யப் பட்டது.அந்த நேரத்தில் ' அல்லாஹ்
ஒருவனைத் தவிர கதி கிடையாது ' என்ற எண்ணம் மேலோங்க அவனைத் தவிர
உதவியாளனாக இருப்பதற்கும்,பாதுகாப்பாக இருப்பதற்கும் யார் இருக்கிறார்கள்.ஆகவே 'அவன்
மீதே பொறுப்பேற்படுத்துவோம்.இன்னும் நம் பாவங்களுக்காக மன்னிப்பையும் மேற்கொள்வோம்' என்று
முடிவு செய்த போது,முஸ்தபா உட்பட அனைவருடைய மனமும் ஏற்றுக் கொண்டது.நிச்சயமாக
இறைவனைத் தவிர இந்த மனநிலையினை அனைவருடைய உள்ளத்திலும் கொண்டு வர சாத்தியமே இல்லை.' அல்லாஹ்
தன்மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கிறான்' என்ற அந்த உண்மை எவ்வளவு சத்தியம்
என்பதையும்,இது அவன் புறத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருப்பதன்
காரணமாகவும் நிச்சயமாக மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றித் தர பொறுப்பேற்றுக் கொள்ள
அவனுக்கு நிகரானவன் இல்லை என்பதையும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அறிவிக்கவும்
நாடி விட்டான் என்பதையும் இந்தக் கட்டுரையின் உண்மை நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக